கோவை: கோவையில் நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக காலை முதலே மழை பெய்யத் தொடங்கியது. இடைவிடாமல் தொடர்ச்சியாக பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை 2-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது.
குடைகளை பிடித்தபடியும், மழைக்கான ஆடைகளை அணிந்தபடியும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்றனர். தொடர் மழையால் சாலையோரங்களில் வியாபாரம் செய்பவர்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மாநகரில் லங்கா கார்னர் ரயில்வே பாலம், வடகோவை மேம்பாலம், அவிநாசி சாலை அண்ணா மேம்பாலம், கிக்கானி பள்ளி அருகேயுள்ள ரயில்வே மேம்பாலம், காளீஸ்வரா மில் அருகேயுள்ள ரயில்வே மேம்பாலம், மாநகரில் உள்ள சாலையோர தாழ்வான இடங்களில் குளம்போல மழைநீர் தேங்கியது.
அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கியதால் நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகினர். மோட்டார்களை பயன்படுத்தி, தேங்கிய மழைநீரை உறிஞ்சி வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர் களிடம் கூறியதாவது: கோவையைப் பொறுத்தவரை நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக 10.74 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இவ்வளவு மழை பெய்தாலும்கூட கோவை மாநகரில் எந்தவிதமான பாதிப்புகளும் தற்போது இல்லை. மழை நீர் எங்கும் தேங்காத அளவுக்கு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகரில் 32 பெரிய வாய்க்கால்கள் உள்ளன. அதில் 128 கிலோ மீட்டர் அளவுக்கு ரூ. 2.54 கோடி மதிப்பில் சீரமைப்புப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
ரூ.5.06 கோடி மதிப்பில் 273 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால்களில் சீரமைப்புப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் அதிகமாக மழை பெய்தாலும்கூட பாதிப்புகள் இல்லாத அளவுக்கு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாநகரில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் சாலைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த சாலையும் அமைக்கப்படவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டில் சாலை அமைப்பதற்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
வீடு இடிந்து மாணவி காயம்: வடவள்ளி பொம்மனாம்பாளை யம் மதுரை வீரன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் நிவேதா (17). கல்லூரி மாணவி. இவர், நேற்று வீட்டில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார். இவரது வீட்டருகே இருந்த மண் சுவரால் கட்டப்பட்டிருந்த பயன்பாடற்ற வீடு இடிந்து விழுந்தது. இதில் காயமடைந்த நிவேதா, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார்.
மழை நிலவரம்: கோவையில் நேற்று காலை நிலவரப்படி மழை நிலவரம் பின்வருமாறு: அன்னூர் 22.60 மி.மீ., மேட்டுப்பாளையம் 64.50 மி.மீ., சின்கோனா 47 மி.மீ., சின்னக்கல்லாறு 56 மி.மீ., வால்பாறை பி.ஏ.பி 55 மி.மீ., வால்பாறை தாலுகா 53 மி.மீ., சோலையாறு 25 மி.மீ., ஆழியாறு 40 மி.மீ., சூலூர் 45 மி.மீ., பொள்ளாச்சி 56 மி.மீ., கோவை தெற்கு 54 மி.மீ., பீளமேடு 51.10 மி.மீ., வேளாண் பல்கலை 47 மி.மீ., பி.என்.பாளையம் 59.80 மி.மீ., பில்லூர் அணை 54 மி.மீ., வாரப்பட்டி 49 மி.மீ., தொண்டாமுத்தூர் 40 மி.மீ., சிறுவாணி அடிவாரம் 21 மி.மீ., மதுக்கரை 34 மி.மீ., போத்தனூர் 46 மி.மீ., மாக்கினாம்பட்டி 82 மி.மீ., கிணத்துக்கடவு 34 மி.மீ., ஆனைமலை 40 மி.மீ.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago