சமூகத்துக்கு பயன்படும் வகையில் எனது வருங்காலம் இருக்கும் - மதுரை சிறைவாசலில் ரவிச்சந்திரன் பேட்டி

By கி.மகாராஜன்

மதுரை: ‘எனது வருங்காலம் சமூகத்துக்கு பயன்படும் வகையில் இருக்கும்’ என மதுரை சிறையிலிருந்து விடுதலையான ரவிச்சந்திரன் கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர் ரவிச்சந்திரன். உச்ச நீதிமன்ற உத்தரவால் நேற்று இரவு சிறையிலிருந்து ரவிச்சந்திரன் விடுதலை செய்யப்பட்டார்.

சிறைவாசலில் செய்தியாளர்களிடம் பேசிய ரவிச்சந்திரன், "எங்கள் விடுதலைக்கு காரணமான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலைக்கு வித்திட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், விடுதலைக்காக உழைத்த, போராடி சிறை சென்றவர்கள், போராளிகள், உலக தமிழர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், சமூக இயங்கங்களை சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

எங்கள் விடுதலையால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சியாகும். எனது வருங்காலம் சமூகத்திற்கு பயன்படும் வகையில் இருக்கும். ஆக்கப்பூர்வமான பணிகளை குடும்பத்தினர், தோழர்களுடன் கலந்து முடிவெடுப்பேன். புத்தகங்களை எழுத நேரத்தை செலவிடுவேன்.

எனது விடுதலைக்காக எனது தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தனர். அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. சட்டத்துக்கு அப்பாற்பட்டு எங்கள் விடுதலையை தடுத்து வந்தது மத்திய அரசு. மத்திய அரசிடம் எந்த கருணையையும் எதிர்பார்க்க முடியாது. 2004-ம் ஆண்டிலேயே நாங்கள் விடுதலை செய்யப்பட்டு இருப்போம். எங்கள் விடுதலை 15 ஆண்டுகள் தாமதமாகியுள்ளது.

31 ஆண்டு சிறை வாழ்க்கையில் இழந்தது அதிகம். எனக்கு மிஞ்சியது தோழர்கள் மட்டுமே. திருமணம் குறித்து இன்னும் யோசிக்கவில்லை. எங்கள் மீதான வழக்கு அரசியல் வழக்கு. அது இன்னும் விசாரணை முடிவடையாத நிலையில் தான் உள்ளது. தமிழக கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டால் எங்கள் விடுதலை சாத்தியப்படாது.

குற்றவாளிகள் என்ற பழியை துடைக்க சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். சிறையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்காக சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். இதற்காக சட்டம் நிறைவேற்ற வேண்டம். நீண்ட நாள் சிறையிலுள்ள இஸ்லாமிய கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்" இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.

சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவரது வழக்கறிஞர் திருமுருகனுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார். ரவிச்சந்திரனிடம் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போனில் பேசி வாழ்த்து தெரிவித்தார். அப்போது விரைவில் நேரில் சந்திப்பதாக திருமாவளவன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE