தி.மலையில் இடைவிடாத கனமழை: சுவர் இடிந்து விழுந்து விவசாய தொழிலாளி உயிரிழப்பு

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இடைவிடாமல் கனமழை பெய்து வரும் நிலையில், சுவர் இடிந்து விழுந்து விவசாய தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

வங்கக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (10-ம் தேதி) இரவு முதல் இடைவிடாமல் மழை பெய்கிறது. செய்யாறு, வந்தவாசி மற்றும் வெம்பாக்கம் வட்டங்களில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. மழையால் ஏரி, குளம் மற்றும் அணைகள் உட்பட நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழையின் தாக்கம் தீவிரம் அடைந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டன. பிரதான சாலைகள் வெறிச்சோடியது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

செங்கம் அடுத்த கீழ்படூர் மதுரா வேங்காத்தாகுளம் கிராமத்தில் வசித்தவர் வேலாயுதம் மகன் சேட்டு (வயது 50). விவசாய தொழிலாளியான இவர், தனது ஓட்டு வீட்டில் இன்று (11-ம் தேதி) காலை இருந்தார். அப்போது தொடர் மழை காரணமாக ஈரம் ஊறி இருந்த வீட்டின் மண் சுவர், சேட்டு மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுப்பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்று செங்கம் வருவாய் துறையினர் மற்றும் திருவண்ணாமலை கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சேட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அணைகள் நிலவரம்: 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 116.25 அடியாக உள்ளன. அணைக்கு விநாடிக்கு 1,790 கனஅடி நீர் வரத்து உள்ளன. அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளன. தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 1,460 கனஅடியும், கால்வாயில் விநாடிக்கு 200 கனஅடியும் என மொத்தம் 1,660 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளன. அணையில் 6,711 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளன. அணை பகுதியில் 3 மி.மீ., மழை பெய்துள்ளது.

59.04 அடி உயரம் உள்ள குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 57.09 அடியாக உள்ளன. அணைக்கு விநாடிக்கு வரும் 18 கனஅடி தண்ணீரும், வெளியேற்றப்படுகிறது. அணையில் 576.50 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளன. 22.97 அடி உயரம் உள்ள மிருகண்டாநதி அணையின் நீர்மட்டம் 20.83 அடியாக உள்ளன. அணைக்கு விநாடிக்கு 9 கனஅடி தண்ணீர் வருகீறது. அணையில் 59.994 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளன. 62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 41.33 அடியாக உள்ளன. அணைக்கு விநாடிக்கு 36 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 111.902 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளன. அணை பகுதியில் 5.20 மி.மீ., மழை பெய்துள்ளது.

மழை அளவு: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று(11-ம் தேதி) காலை நிலவரப்படி மாவட்டத்தில் சராசரியாக 8.84 மி.மீ., மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக வந்தவாசி பகுதியில் 25.20 மி.மீ., பெய்துள்ளது. செய்யாறு பகுதியில் 19.30 மி.மீ., வெம்பாக்கத்தில் 18 மி.மீ., ஆரணியில் 9.20 மி.மீ., போளூரில் 3.80 மி.மீ., திருவண்ணாமலையில் 5 மி.மீ., தண்டராம்பட்டில் 5.80 மி.மீ., சேத்துப்பட்டில் 5.60 மி.மீ., கீழ்பென்னாத்தூரில் 14.20 மி.மீ., மழை பெய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE