6 பேர் விடுதலை | “அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பே ஆதாரம்” - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு 6 பேர் விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும் ஆதாரம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, இன்று நளினி உள்ளிட்ட மீது ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன். பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய ஆறுபேரையும் விடுதலை செய்துள்ளது உச்ச நீதிமன்றம். தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையிருந்த காலத்தில் அவர்களது நன்னடத்தை, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், ஆட்சியில் இருக்கும்போதும் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, முதன்முதலில் 2000-ம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனையாக மாற்றியது திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். அதன்பிறகு இவர்கள் அனைவரின் விடுதலையையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அழுத்தம் கொடுத்தது. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகும் முதலமைச்சர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தினோம். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை மற்றும் மனிதநேயத்தின் பக்கமாக நின்று நீதிமன்றத்திலும் வாதாடியும் போராடியும் வந்தோம். மாநில அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அதற்கான அனுமதியை வழங்கத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தோம்.

இந்நிலையில், பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான விசாரணையிலும் மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் சட்டப்பிரிவுகளை மையப்படுத்தி வாதங்களை வைத்து வாதாடினோம். மாநில அமைச்சரவையின் உரிமையை நிலைநாட்டும் வகையில்தான் பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. 7 பேர் விடுதலையில் இது முதல் கட்ட வெற்றியாக அமைந்தது.

அடுத்தபடியாக நளினி, ரவிச்சந்திரன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோரின் விடுதலையிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து, இன்றைக்கு அவர்களுக்கும் பேரறிவாளனின் தீர்ப்பு பொருந்தும் என்று கூறி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலையானது இரண்டாவது வெற்றி. ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் நடத்திய வலிமையான சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது. மனிதநேயத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டு வரும் அனைவருக்குமான வெற்றி இது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக் கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும் ஆதாரமாக அமைந்திருக்கிறது. மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக இத்தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்புக்குரியது" என்று அந்த அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்