விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள் | “மின் உற்பத்தியில் முதல் மாநிலம்” - முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

கரூர்: "30,500 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையங்களைத் தமிழ்நாடு மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு எடுத்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டின் மின் உற்பத்தி வருகின்ற 2030-ஆம் ஆண்டில் 65 ஆயிரத்து 367 மெகாவாட் திறனாக உயரும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை (நவ.11) கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் பேசியது: "இந்த விழாவின் மூலமாக 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் இன்றைக்கு வழங்கக்கூடிய வகையில் இந்த விழா நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஒரு லட்சம் இணைப்புகளைக் நாம் வழங்கியிருக்கிறோம். அத்துடன் சேர்த்து இன்று ஐம்பதாயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கிறபோது, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இணைப்புகள், அதிலும் இந்த குறுகிய காலத்திற்குள்ளாக, 15 மாதகாலத்திற்குள்ளாக வழங்கி இருக்கிறோம் என்று சொன்னால், இதைவிட ஒரு மிகப்பெரிய சாதனையை நான் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இதற்கு முன் எந்த அரசும் இப்படி ஒரு சாதனையைச் செய்ததாக வரலாறு கிடையாது. நம்முடைய அரசுதான் செய்து காட்டி இருக்கிறது. ஏன், இந்தியாவிலே எந்த மாநிலத்திலாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால், அதுவும் கிடையாது, நம்முடைய மாநிலம்தான், தமிழ்நாடு தான் அந்த சாதனையைச் செய்து காட்டியிருக்கிறது. அதனால்தான் இதனை பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நாள் என்று நான் சொன்னேன்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் தமிழகத்தின் உழவர்களை மகிழ்விக்கும் வகையில், ஓர் ஆண்டில் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்குவோம் என்று ஏற்கெனவே அறிவித்தோம். அப்போது எல்லோரும் என்ன நினைத்தார்கள் என்றால், இது நடக்குமா? சாத்தியமா? முடியுமா? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.நடக்குமா என்று கேட்பதை நடத்திக் காட்டுவதும் - சாத்தியமா என்று கேட்பதை சாத்தியமாக்குவதும், முடியுமா என்பதை முடித்துக் காட்டுவதும்தான் திமுகவினுடைய ஆட்சி என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதை யாரும் மறந்துவிட வேண்டாம். இனிமேல் அப்படி ஒரு எண்ணம், ஒரு சந்தேகம் யாருக்கும் வரவேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.

23.9.2021 அன்று இந்தத் திட்டத்தை நான் துவக்கி வைத்தேன். துவக்கி வைத்த ஆறே மாதத்தில், ஒரு லட்சம் உழவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஒரு லட்சமாவது மின் இணைப்பையும் நான்தான் வழங்கினேன். இப்போது கூடுதலாக ஐம்பதாயிரம் இணைப்புகளையும் நானே இங்கே வழங்கி இருக்கிறேன். இதன் மூலமாக ஒன்றரை லட்சம் உழவர்கள் பயனடைய இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக தமிழ்நாட்டுக்கு எவ்வளவு உணவுப் பொருள்கள் கிடைக்கப் போகிறது என்பதை நினைத்தாலே, எனக்கு பெருமையாக இருக்கிறது, எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அது மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த நேரத்தில் நம்முடைய மறைந்த தலைவர் கலைஞர் அவர்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். ஏனென்றால், முதன்முதலில் இந்தியாவிலேயே உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை உருவாக்கித் தந்தவர்தான் நம்முடைய முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள். 1989-1990ஆம் ஆண்டில் அதை தொடங்கி வைத்தார். இந்த முப்பதாண்டு காலத்திலும் - எல்லாக் காலத்திலும் உணவுப் பொருள் விளைவித்து, தமிழ்நாட்டு உழவர் பெருமக்கள் வளம் வழங்க, தலைவர் கலைஞர் அவர்கள்தான் அன்றும் இன்றும் காரணகர்த்தாவாக அமைந்திருக்கிறார்கள்.

நம்முடைய அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். கடந்த பத்தாண்டு காலம் ஒரு ஆட்சி நடந்தது, நடந்தது என்று சொல்ல முடியாது, இருந்தது. அது எப்படி இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த பத்தாண்டு காலத்தில் மொத்தமே 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகள் மட்டும்தான் அவர்களால் வழங்கப்பட்டன. ஆனால் நாம் இந்த பதினைந்து மாத காலத்தில், 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகளை வழங்கி இருக்கிறோம். சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் - இது கலைஞரின் முழக்கம்! சொல்லாததையும் செய்வோம் சொல்லாமலும் செய்வோம்! இதுதான் ஸ்டாலினுடைய முழக்கம். அதுதான் வித்தியாசம். அந்த வரிசையில்தான் சொல்லாமல் செய்து காட்டி இருக்கிறோம்.

நாடு முழுவதும் நமது நல்லாட்சியில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் விளைச்சலும் அதிகமாகி கொண்டிருக்கிறது.பாசனப் பரப்பும் விரிவடைந்து கொண்டிருக்கிறது. உணவுப் பொருள் உற்பத்தி கூடுதலாகி வருகிறது. இதன் காரணமாக மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உணவுப்பொருள்களின் விலையும் குறைவாக உள்ளது.விலைவாசி குறைவாக உள்ளது.பணப்புழக்கம் அதிகமாகி உள்ளது.பணவீக்கம் குறைந்துள்ளது. மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து வசதி தரப்பட்டிருக்கின்ற காரணத்தால் பெண்களின் பொருளாதார வலிமை கூடியிருக்கிறது.

தமிழ்நாட்டில் தற்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களினுடைய திறன் 34 ஆயிரத்து 867 மெகாவாட். மின்தேவையை கருத்திற் கொண்டு அனல் மின் நிலையங்கள் மட்டுமல்லாமல், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தியின் மூலம் 6,000 மெகாவாட் சூரிய ஒளி மின்நிலையங்களும், 14,500 மெகாவாட் நீரேற்றுபுனல் மின் உற்பத்தி நிலையங்களும், 5,000 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களும், 2,000 மெகாவாட் மின்கலன் சேமிப்பு நிலையங்களும், 3,000 மெகாவாட் திறனுக்கு வாயுசுழலி எரிசக்தி நிலையங்களும் என,ஆக மொத்தம் 30,500 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையங்களைத் தமிழ்நாடு மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு எடுத்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டின் மின் உற்பத்தி வருகின்ற 2030-ஆம் ஆண்டில் 65 ஆயிரத்து 367 மெகாவாட் திறனாக உயரும்.

தமிழகத்திலுள்ள மாவட்டங்கள் அனைத்தையும் சூரிய மின்சக்தி மாவட்டங்களாக (Solar District) மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு எடுத்து வருகிறது. இதனால், தமிழ்நாடானது, மின்உற்பத்தியில் முழுமையாக தன்னிறைவு பெறுவதோடு மட்டுமல்லாமல், அகில இந்திய அளவில் மின் உற்பத்தியில் முதல் மாநிலமாகத் திகழும் என்ற மகிழ்ச்சியான செய்தியை மக்களுக்கு இந்த அவையில் பெருமிதத்தோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

"முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்" என்பதை நமக்கு கலைஞர் கற்றுத் தந்திருக்கிறார். அத்தகைய வெற்றியை எந்நாளும் பெறுவோம்.

மக்களுக்கான சேவையே மகத்தான சேவை என்ற ஒரே குறிக்கோளோடு, மழைநேரங்களிலும், இயற்கை இடர்பாடுகளின்போதும், தன்னலமின்றி தொடர்ந்து சேவைசெய்து வரும் தன்னிகரற்ற அனைத்து மின்வாரியத் தொழிலாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்