சென்னை கனமழை | 2 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை; காவல்துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மற்றும் சூரப்பட்டு வினாயகபுரம் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மழைநீர் பெருக்கு காரணமாக சூரப்பட்டு வினாயகபுரம் சுரங்கபாதையில் நீர் தேங்கியுள்ளதால் நீர் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றுகொண்டிருக்கிறது. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மற்றும், எழும்பூர் பகுதிப்பட்ட தமிழ் சாலை -காந்தி இர்வின் சாலை சந்திப்பில் (உடுப்பி பாய்ண்ட்) நவ.11 அன்று 10 மணி முதல் மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்கு சாலை வெட்டும் பணி நடைபெறுவதை முன்னிட்டு கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளதால் இரண்டுசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சூரப்பட்டு வினாயகபுரம் சுரங்கபாதையில் நீர் தேங்கியுள்ளதால் நீர் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றுகொண்டிருக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

சூரப்பட்டு வினாயகபுரம் சுரங்கபாதை வழியாக செல்லும் வாகனங்களை 100 அடி மேம்பாலம் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதன் உள்ளே அனுமதிக்கப்படாமல் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மழையின் காரணமாக சாலைகளில் பள்ளங்கள் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் மழை காரணமாக, சென்னை மாநகர பேருந்துகள் தமிழ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வலது புறம் திரும்பி தமிழ் சாலை வழியாக –காசா மேஜர் சாலை வழியாக செல்லாம். தமிழ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பி எழும்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம் .

சென்னை மாநகர பேருந்துகள் ஹாரிஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பாந்தியன் ரவுண்டாவிலிருந்து பாந்தியன் சாலை வழியாக செல்லலாம் . ஈ.வே.ரா. சாலையில் இருந்து வரும் பேருந்துகள், வாகனங்கள் நாயர் மேம்பாலம் வழியாக செல்ல அனுமதி கிடையாது . அதற்கு மாற்றாக நேராக ஈ.வே.ரா. சாலை வழியாக செல்லலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE