உடுமலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர், தொடர்ந்து 13 ஆண்டுகளாக ஆதரவற்றோருக்கு தினமும் இலவசமாக மதிய உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிரீன்பார்க் லே-அவுட் பகுதியில் சக்தி விநாயகர் கோயில் உள்ளது. பொதுப்பணித் துறையில் அரசு ஊழியராக பணிபுரிந்த கு.மாதப்ப சுப்பிரமணியம் என்பவர், கடந்த 2003-ல் ஓய்வு பெற்றார்.
இறை வழிபாடு மற்றும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில், தனது ஓய்வு காலத்தை கோயில் பணிகளில் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். அதன் பலனாக, இக்கோயிலில் கடந்த 13 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற முதியவர்களுக்கு தினமும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மாலை நேர வகுப்புகள், வறுமையில் வாடும் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சியும் கற்றுத்தரப்படுகிறது.
இது தொடர்பாக ஜீவா நகரைச் சேர்ந்த அம்மாசை (70) என்பவர் கூறும்போது, “என்னுடைய 3 மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது. மகன்கள் அவரவர் குடும்பத்தை நடத்தவே சிரமப்படும் நிலையில், அவர்களுக்கு சுமையாக இருக்க விருப்பமில்லாமல் தனியாக வசிக்கிறேன். எங்களுக்கு, கோயிலில் தினமும் அறுசுவை விருந்து அளிக்கப்படுகிறது. இரவுக்கும் சேர்த்து பாத்திரத்தில் பெற்றுச் சென்று விடுகிறேன். இதனால், எனக்கு உணவுப் பிரச்சினை இல்லை. சந்தோசமாக வாழ்கிறேன்” என்றார்.
கோயிலை நிர்வகித்து வரும் கு.மாதப்ப சுப்பிரமணியன் (68) ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. முன்னோர்கள், கோயில்களை பாடசாலையாகவும், பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாகவும் பயன்படுத்தினர். இந்த வழக்கம், காலப்போக்கில் மறைந்துவிட்டது.
இதனை மாற்றி, முன்னோர்கள் வழக்கப்படி கோயிலில் உள்ள சிலைகளுக்கு உரிய பூஜைகள் செய்யப்படுகின்றன. கோயிலுக்கு சிலர் தானமாக கொடுக்கும் பணத்தைக் கொண்டு, 13 ஆண்டுகளாக ஆதரவற்றவர்களுக்கு தினமும் இலவசமாக மதிய உணவு வழங்கி வருகிறோம். தினமும் 40 பேர் வரை உணவருந்தி வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள், தையல் பயிற்சி கற்று சுயமாக சம்பாதிக்கும் திறனை பெற்றுள்ளனர்.
சாதி, மத வேறுபாடின்றி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இலவச மாலை நேர வகுப்புகளும், ஒவ்வோர் மாதத்தின் 3-வது சனிக்கிழமைகளில் திருவாசக முற்றோதல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, சஷ்டி, பவுர்ணமி, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பிறந்த நாள், திருமண நாள், முன்னோர்களின் நினைவு நாள்களில் பொதுமக்கள் இங்கு வந்து, ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர்’ என்றார்.
இவருக்கு உதவியாக அவரது மனைவி குழந்தை அம்மாளும் இருந்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி, ரோட்டரி சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago