திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே விஜய நகர காலத்தைச் சேர்ந்த சிவன் கோயில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லுாரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மோகன் காந்தி தலைமையிலான ஆய்வுக்குழுவினர், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வரலாற்று தடயங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் அருகே சந்திராபுரம் என்ற கிராமத்தில் கள ஆய்வு நடத்தியபோது, அங்கு விஜய நகர காலத்தைச் சேர்ந்த அரிய வகை கல்வெட்டுகளை கண்டெடுத்துள்ளனர்.
இது குறித்து பேராசிரியர் மோகன்காந்தி கூறியது: "திருப்பத்தூர் மாவட்டம், சந்திரபுரம் அருகேயுள்ள பாராண்டப்பள்ளி கிராமத்தில், சிதிலமடைந்த நிலையில் பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலின் தென்புற சுவற்றில் ஐந்து வரிகளை கொண்ட கல்வெட்டை எங்கள் ஆய்வுக்குழுவினர் கண்டறிந்தோம். அந்த கல்வெட்டை நாங்கள் ஆய்வு செய்தபோது, அவை விஜய நகர காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் என்பது தெரியவந்தது. கல்வெட்டின் தொடக்கம் "சுபமஸ்து ஸ்வஸ்தி ஸ்ரீமன் மஹா மண்டலேஸ்வரர் அச்சுத தேவ மஹாராயர் பிரிதிவி ராஜியம்" என்ற வடமொழி எழுத்துகளான கிரந்த என்ற எழுத்து வகையால் கல்வெட்டு அமைந்துள்ளது.
கிபி 1464 சித்திரை மாசம் முதல் சந்திரபுரி பற்று பாலாண்டான பள்ளி விருபாக்ச நாயினாற்கு பிரணாயக்க திம்மன் பெரிர கண்ணப்ப தேனை மகன் என்று தமிழ் மொழியும் கல்வெட்டில் உள்ளது. அதன் இடை, இடையே கிரந்த எழுத்துகளும் கலந்து எழுதப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துகளும், கிரந்தம் என்னும் வடமொழி எழுத்துகளும் சேர்த்து எழுதும் முறைக்கு "மணிப்பிரவாளம்" என்று பெயர் உள்ளது.
» உணவுத் தரம் கண்காணிக்க ஹோட்டல்களில் சிசிடிவி பொருத்தக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
இந்தக் கல்வெட்டு மணிபிரவாள முறையிலேயே எழுதப்பட்டுள்ளது. மேலும், கல்வெட்டில் முதல் 2 வரிகள் திரிபட்ட குமுதம் அல்லது குமுதப் படையில் எழுதப்பட்டுள்ளன. மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது வரிகள் ஐகதிப்படையில் எழுதப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டானது விஜய நகர மன்னன் அச்சுத தேவனின் ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மன்னன் கோயிலுக்கு அளித்துள்ள தானங்கள் குறித்து குறிப்பும் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனுக்கு விருபாக்சி நாயனார் என இந்தக் கல்வெட்டுக் கூறுகிறது. விருபாக்சி என்ற வடமொழி சொல்லுக்கு நெற்றி கண்ணையுடைய சிவ பெருமான் என்பது பொருளாகும். இந்தக் கோயிலானது மூன்று பாகங்களுடன் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அவை ஒன்று கருவறை, 2வது அர்த மண்டபம், 3வது மகா மண்டபம் உள்ளிட்டவைகளாகும்.
தற்போது கோயில் கருவறை சிதைந்துள்ளது. கருவறைக்கு மேலுள்ள விமானம் இருந்ததற்கான கூறுகளே இல்லை. மகா மண்டபத்தில் உள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. அதில் முருகன், விநாயகர், கண்ணப்பர், அனுமன் உள்ளிட்ட தெய்வ சிற்பங்கள் தெளிவாகவும், மிக நேர்த்தியாகவும் காணப்படுகின்றன. கோயிலின் வெளிப்புறம் சாலையோரம் குவியலாக பெரிய, பெரிய கற்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.
இந்தக் கற்கள் அனைத்தும் கோயிலை கட்டுவதற்காக கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. கருவறைக்கு மேலுள்ள விமானம், கோயிலை சுற்றிலும் மதில் சுவர் எனப்படும் பிரகாரம் கட்டுவதற்காக கொண்டுவரப்பட்டவையாக இந்தக் கற்கள் இருக்க வேண்டும். ஏதோ ஒரு காரணத்தினால் இவை கட்டப்படாமல் விடப்பட்டதாக தெரிகிறது.
இந்தக் கோயில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல், கற்கோயில் சிறியதாக இருந்தாலும் அதிஷ்டானம், உபமானம் திரிபட்ட குமுதம், கண்டம், பிரதி, அர்த மண்டபம், மகா மண்டபம், ஜகதி படையில் கோபம் கொண்ட சிங்கம், பாய்ந்தோடும் யானை என கலை நயங்களுடன் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
இத்திருக்கோயில் திராவிடக் கோயில் கட்டிடக் கலை, சிற்பக் கலை, கல்வெட்டுக் கலைகளுக்கு மிக சிறந்த எடுத்து காட்டாய் விளங்குகிறது. சிறந்த வரலாற்றிடமாக உள்ள இத்திருக்கோயில் புனரமைக்கப்பட்டு வழிபாட்டிடமாக மாற்ற வேண்டும் என பொது மக்களும், வரலாற்று ஆர்வலர்களும் விரும்புகின்றனர். ஆகவே, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் அல்லது தமிழக தொல்லியல் துறை இந்த கோயிலை சீரமைத்து வழிப்பாடு செய்ய முன் வர வேண்டும்’’ என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago