அரசு போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை வழங்குவதில் 5 மாதங்களாக தாமதம்: பணம் செலுத்த முடியாமல் அவதி

By கி.ஜெயப்பிரகாஷ்

அரசு போக்குவரத்து ஊழியர் களின் குழந்தைகளுக்காக ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் கல்வி முன்பணம் மற்றும் கல்வி உதவி தொகை இந்த ஆண்டு இன்னும் வழங்கப்படாதது ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து துறையின் கீழ் சென்னை, விழுப் புரம், கோவை உட்பட மொத்தம் 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் சுமார் 22 ஆயிரத்து 800 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர்கள் என மொத்தம் 1.43 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகையாக 250 ரூபாயும், ரூ.5 ஆயிரம் கல்வி முன்பணமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 80 ஆயிரம் குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள். ஆனால், இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையும், கல்வி முன்பணமும் இன்னும் வழங்கப்படாமல் இருப்பது போக்குவரத்து ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

எங்களுக்கு கிடைக்கும் சம்பளம் வாழ்க்கையை நடத்தவே போதியதாக இல்லை. இருப்பினும் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் நேரம் வேலை பார்த்து கஷ்டப்படுகிறோம். நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி முன்பணமாக ரூ.5 ஆயிரம் எங்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த தொகையை எங்களது சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் சிறுக, சிறுக பிடித்துக் கொள்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இதுவரையில் கல்வி முன்பணம் வழங்கவில்லை. இந்த தொகை விரைவில் வந்து விடும் என நம்பி வெளி ஆட்களிடம் கடன் வாங்கியிருந்தோம். தற்போது, மாதந்தோறும் வட்டி செலுத்த முடியாமல் அவதிப்படுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறும்போது, “போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகளுக்காக கடந்த 1978-ம் ஆண்டு முதல் கல்வி முன்பணம் மற்றும் கல்வி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளி திறந்து ஒரு வாரத்துக்குள் (ஜூன் மாதத்தில்) கல்வி முன்பணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இதேபோல், ஊழியர்களின் குழந்தைகள் பள்ளியில் படிக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் தலா ரூ.250 கல்வி உதவி தொகையாக வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் அது வழங்கப் படவில்லை. தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 5 மாதங்களாக பல்வேறு கோரிக்கை மனுக்களை நிர்வாகத்திடம் அளித்து விட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘நிதி நெருக்கடி காரணமாக வழக்கமாக வழங்கப்பட்டு வரும் கல்வி முன்பணம் மற்றும் கல்வி உதவி தொகையை இந்த ஆண்டில் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்