மதுரை | பாதாள சாக்கடை பணிகளில் அடிக்கடி விபத்து - மாநகராட்சி மென்மை போக்கை கடைபிடிப்பதாக குற்றச்சாட்டு

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: பாதாளசாக்கடை திட்டப்பணிகள் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாளசாக்கடைத்திட்டப்பணிகள் நடக்கிறது. அதனால், 100 வார்டுகளிலும் சாலைகளில் பள்ளங்கள் தோண்டி இப்பணிகள் நடக்கிறது. ஆனால், தோண்டிய சாலைகளை டெண்டர் எடுத்த நிறுவன தொழிலாளர்கள் சரியாக மூடி செல்வதில்லை. சாலைகள் முழுவதும் பள்ளங்களாக காணப்படுகிறது. அதனால், தற்போது மழை பெய்தாலே பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி சாலைகள் சிறு தெப்பம்போல் மாறிவிடுகின்றன.

அதில், குழி எது, பள்ளம் எது எனத் தெரியாமல் மக்கள், வாகன ஒட்டிகள் தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். பள்ளங்கள் தோண்டி பல வாரங்களாக பணிகளை மேற்கொள்ளாமலும் கிடப்பில் போட்டு சென்றுவிடுகின்றனர். அந்த சாலைகள், தெருக்களில் வாகனங்களில் பொதுமக்கள் வர முடியவில்லை. அதனாலே, மக்கள் மாநகராட்சி இந்த திட்டப் பணிகளுக்காக குழிகளை தோண்ட வந்தாலே அச்சப்படுமளவிற்கு இந்த பணிகள் மந்தமாக நடக்கிறது.

தற்போது மாநகராட்சி நிதிநெருக்கடியில் இருப்பதாலே பாதாளசாக்கடை தோண்டி பாழாக்கப்பட்ட சாலைகளை புதிதாக போடமுடியவில்லை. தோண்டிய பகுதிகளில் தண்ணீர் நிரம்பி பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதிகளில் வாகனங்கள் செல்வதில்லை. சாலையின் ஒரே பகுதியில் மட்டும் வாகனங்கள் செல்வதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பாதாளசாக்கடைப் பணி, பெரியார் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் பாதிக்கும் பணிகளை மாநகராட்சி தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விட்டாலும், அந்தந்த வார்டு மாநகராட்சிப் பொறியாளர்கள் மேற்பார்வையிலே அப்பணிகள் நடக்க வேண்டும். ஆனால், பணிகள் நடக்கும் இடங்களுக்கு அதிகாரிகள் பெரும்பாலும் வருவதே இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

பொறியாளர்கள் மாநகராட்சி ஆணையாளரை ஏமாற்றுகின்றனர். அதனை சாதகமாக பயன்படுத்தி டெண்டர் எடுத்த நிறுவனம், குறைவான தொழிலாளர்களை வைத்து பணிகளை மேற்கொள்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக 6 அடிக்கு மேல் குழி தோண்டினால் குழியின் இருபுறமும் மண் சரிந்து விழாதவாறு தடுகளை கொண்டு தடுப்பு அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இந்த முறையை கடைபிடிக்காததாலே நேற்று தொழிலாளி ஒருவர் மண் சரிந்துவிழுந்து இறந்தார்.

இதற்கு முன் விளாங்குடியிலும் இதுபோல் விபத்து நடந்தது. அப்போதும் டெண்டர் எடுத்த நிறுவனம் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு முந்தைய சம்பவங்களிலும் இதுபோல் உயிரிழப்பு ஏற்பட்டபோதும் சம்பந்தப்பட்ட டெண்டர் எடுத்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை இல்லை. 2 தொழிலாளர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் ஒருவரை வைத்து பணியை பார்க்கின்றனர். ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பாதாளசாக்கடைப் பணிகள், பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றி பள்ளங்களை தோண்டுவதில்லை.

பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணிபுரிகிறார்கள். டெண்டர் எடுத்தவர்கள் அரசியல் பின்னணியுடன் அமைச்சர்கள் ஆதரவில் இருப்பதால் அவர்கள் செய்யும் தவறுகளை மாநகராட்சி அதிகாரிகளை தட்டிக் கேட்க முடியவில்லை. நெருக்கடியும் கொடுக்க முடியவில்லை. நோட்டீஸ் வழங்க முடியவில்லை. அதனால், புதிய ஆணையர் சிம்மரன் ஜித் சிங், நேற்று நடந்த உயிரிழப்பிற்கு காரணமான டெண்டர் நிறுவனம் எடுத்த பாதாளசாக்கடை ஒப்பந்தத்தை ரத்து செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங்கிடம் கேட்டபோது, "விசாரணை நடக்கிறது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE