10% இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் நிலைப்பாட்டை காங்., மார்க்சிஸ்ட் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்

By செய்திப்பிரிவு

சென்னை: “பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்யும்” என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு தரும் பாஜக அரசின் சட்டம் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான தீர்ப்பாகும். நீதியின் பெயரால் இழைக்கப்பட்ட மாபெரும் உச்சபட்ச அநீதியாகும்.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் இந்த சட்டம் செல்லாது என்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் தற்போது இந்தச் சட்டம் செல்லும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளைப் பல ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் கிடப்பில் போட்டிருந்தது. தலைமை நீதிபதியாக லலித் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான் இதற்கான அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்தச் சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்காமல் தொடரச் செய்தபோதே இதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யாது என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளைப் புரிந்து கொண்டு பாஜக அரசும் அவசர அவசரமாக எல்லா துறைகளிலும் 10% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடுகளை நிறைவு செய்யாமல் பல்லாயிரக்கணக்கான பதவிகளை பின்னடைவுக் காலிப் பணியிடங்களாக வைத்திருக்கும் மோடி அரசு, இந்த 10% இட ஒதுக்கீட்டை மட்டும் தனிக் கவனம் செலுத்தி நடைமுறைப்படுத்தியது.

ஒருபுறம் இந்துக்கள் அனைவரும் ஒன்று என்று பேசிக்கொண்டே இந்து மதத்தில் இருக்கும் ஓபிசி மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக அரசு முன்னேறிய சாதியினருக்காக மட்டுமே செயல்படும் அரசாக இருக்கிறது என்பதற்கு இதுவொரு சான்று ஆகும்.

இந்தச் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ள நீதிபதி ரவீந்திர பட் மற்றும் தலைமை நீதிபதி யு.யு. லலித் ஆகியோரும்கூடத் தங்களின் தீர்ப்பில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றே கூறியுள்ளனர். இது சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாடே ஆகும்.

“எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரிலும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் உள்ளனர். அவர்களை 10% இட ஒதுக்கீட்டில் பங்கேற்க முடியாமல் தடுப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது. அந்த அடிப்படையிலும் இந்தச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும்” என்று விசிக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

இவ்வழக்கில் சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் லலித், ரவீந்திர பட் ஆகிய இருவரும் இந்த வாதத்தின் அடிப்படையில் தான் தமது தீர்ப்பை அமைத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பெரும்பான்மைத் தீர்ப்பை எழுதியிருக்கிற நீதிபதிகள் இந்த வாதத்தை நிராகரிப்பதற்கு விளக்கம் எதையும் கொடுக்கவில்லை.

இட ஒதுக்கீடு அளவு 50%-க்கு மேல் போகக்கூடாது என்று இந்திரா சஹானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்மானிக்கப்பட்டது. அதை ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு மாற்ற முடியாது. எனவே, இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பு குறித்து இந்த அமர்வு முடிவு செய்திருப்பதும் சட்டப்படி ஏற்புடையதல்ல.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை அனுப்ப வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வழக்கில் மனு தாக்கல் செய்த திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் இத்தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வர் என நம்புகிறோம்.

இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைகளை நீதிமன்றத்தில் தீர்த்துவிட முடியாது. முதன்மையாக அது அரசியல் களத்தில் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்துக்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஓபிசி இந்துச் சமூகப் பிரிவினருக்கு எதிரான பாஜகவின் இந்த 10% இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து முறியடிக்க சமூக நீதியின்பால் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைக்கிறோம். 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆகிய அரசியல் கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நல்லெண்ணத்தின் அடிப்படையில் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்