இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள்: மருத்துவ கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்

By செய்திப்பிரிவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. அதில், 5,647 எம்பிபிஎஸ் இடங்களும், 1,389 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு, மாணவ, மாணவிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டது. முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களை ஒதுக்கி ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று கடைசி நாள். முதல் சுற்று கலந்தாய்வில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் எஸ்.டி. பிரிவினருக்கான 1 எம்பிபிஎஸ் இடம், 3 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிசி பிரிவில் 43 பிடிஎஸ் இடங்கள் நிரம்பவில்லை.

காலியாக உள்ள இந்த 44 இடங்கள் மற்றும் முதல் சுற்றில் இடங்களை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேராததால் ஏற்படும் காலியிடங்கள் ஆகியவை 2-ம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன. 2-ம் சுற்று கலந்தாய்வை இந்த வார இறுதியில் ஆன்லைனில் தொடங்க திட்டமிடப்பட்டுஉள்ளது. தமிழக சுகாதாரத் துறை இணையதளத்தில் (https://tnmedicalselection.net) இதுகுறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE