நாளை சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தாண்டின் இறுதி சந்திர கிரகணம் நாளை (நவம்பர் 8) நடைபெற உள்ளது. சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப் போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். சந்திரனை முழுமையாக பூமி மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் எனவும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் எனவும் கூறப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மே 16-ம் தேதி தென்பட்டது.

அதைத்தொடர்ந்து 2-வது சந்திர கிரகணம் நாளை (நவம்பர் 8) நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2.39 முதல் மாலை 6.19 மணி வரை கிரகணம் நிகழும். இதில் முழு சந்திர கிரகணம் 3.46 முதல் 5.11 மணி வரை தென்படும். அப்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் மிளிரும். இது ‘ரத்த நிலா’ (பிளட் மூன்) என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடல், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் தெரியும். அதேநேரம் பகல் நேரம் என்பதால் இந்தியாவில் முழு சந்திர கிரகணம் தென்படாது.

எனினும், கொல்கத்தா, சென்னை உட்பட கிழக்கு பகுதிகளில் மட்டும் சந்திரன் உதயத்தின்போது கிழக்கு தொடுவானில் கிரகணத்தின் இறுதி நிலைகளை காணலாம். சந்திர கிரகணத்தை வெறும் கண்களால்கூட பார்க்கலாம். அடுத்த முழு சந்திர கிரகணம் 2025 மார்ச் 14-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, நாளை நிகழ உள்ள கிரகணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும், ஒரு பகுதி சந்திர கிரகணம் 2023 அக்.28-ம் தேதி நிகழ உள்ளதாகவும் வானியல் அறிஞர்கள் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் 25-ம் தேதி பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE