கள்ளக்குறிச்சியில் அமைதியாக நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணி; 364 பேர் பங்கேற்பு: பாதுகாப்பு பணியில் 1300 போலீஸார்

By ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் 364 பேர் பங்கேற்றனர்.

ராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்தநாள் விழா, மகாத்மாகாந்தியின் 153-வது பிறந்த நாள் விழா, 75-வது சுதந்திர தினவிழா எனும் முப்பெரும் விழாவை நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்த நிலையில் அரசு அனுமதி மறுத்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வழக்குத் தொடுத்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப் படி கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பேரணி மற்றும் பேரணி நடத்த அரசு அனுமதி அளித்தது.

கள்ளக்குறிச்சியில் மாலை 4 முதல் 6.30 மணிக்குள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொள்ள காவல் துறை அனுமதியளித்த நிலையில், இன்று கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் இருந்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி தொடங்கியது.

பேரணியை எம்.ஏ.கோவிந்தராஜ் துவக்கிவைக்க, பேரணி சித்தரிதெரு, கவரை தெரு, காந்தி சாலை வழியாக மந்தைவெளியில் உள்ள பொதுக்கூட்ட திடலை அடைந்தது. பேரணியில் பங்கேற்ற 364 பேர் வெள்ளை சட்டையும், காக்கி நிற பேண்ட்டும் அணிந்திருந்தனர். பேரணியை ஒட்டி அசம்பாவித சம்பவங்கள் நேராமல் இருக்க, விழுப்புரம் டிஐஜி பாண்டியன் மேற்பார்வையில், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி எஸ்பி பகலவன் தலைமையில் 1300 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE