தஞ்சாவூர் ராஜவீதியில் மழைநீர் வடிகால் சீரமைப்பின்போது இடிந்து விழுந்த பழமையான கட்டிடம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பொக்லைன் மூலம்மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் சீரமைப்பு பணியின்போது, பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது.

தஞ்சாவூரில் அரண்மனையைச் சுற்றியுள்ள 4 ராஜவீதிகளிலும் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தவடிகால் மீது பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால், அவற்றை அகற்றிவிட்டு கான்கிரீட் மூலம் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் கீழராஜவீதி பிரதான சாலையில் வரதராஜபெருமாள் கோயில் எதிரே நேற்று முன்தினம் இரவு மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

இதில், அங்கிருந்த வாய்க்காலை சீரமைக்க பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டியபோது, அதனருகில் சாலையோரம் இருந்த பழமையான கட்டிடத்தின் ஒரு பகுதிதிடீரென இடிந்து விழுந்தது. அதன் அருகில் இருந்த மின்கம்பமும் சாய்ந்து விழுந்தது. அந்தக் கட்டிடத்தில் தற்போது யாரும் வசிக்காத நிலையில், கட்டிடமுகப்பு பகுதியில் தையல் கடை, காஸ் அடுப்பு சர்வீஸ் சென்டர் ஆகியவை இருந்தன. இக்கட்டிடம் இரவுநேரத்தில் இடிந்து விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. ஆனாலும், அந்தக் கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன.

தகவலறிந்த கிழக்கு போலீஸார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று, மின் இணைப்பைத் துண்டித்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மின் இணைப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்றது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் தஞ்சாவூர் கீழராஜ வீதியில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE