கரகாட்டத்தில் ஆபாசம் இருக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: ‘கரகாட்டத்தில் ஆபாசன நடனம், இரட்டை அர்த்த பாடல்கள் இருக்கக் கூடாது’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலப்பட்டியைச் சேர்ந்த மாரிச்சாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மேலப்பட்டி மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் நவ.8-ல் கரகாட்ட நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்தோம். இதுவரை அனுமதி தரவில்லை. எனவே, கரகாட்டம் நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதி குமார் சுகுமார குரூப் பிறப்பித்த உத்தரவு: "கரகாட்டம் நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. இரவு 7 மணி முதல் 10 மணி வரை தான் கரகாட்ட நிகழ்ச்சி நடதத வேண்டும். கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனம் இருக்கக் கூடாது. நாகரிகமான உடைகள் அணிய வேண்டும். இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக்கூடாது.

எந்த ஒரு அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்க கூடாது. சாதி பாகுபாடும் இருக்கக் கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மதுபானம் மற்றும் போதை பொருட்களை உட்கொண்டிருக்கக் கூடாது" என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE