தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், நாட்டின் சிறந்த தொழில் நகரங்களில் ஒன்றாகவும் திகழும் கோவையில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். இதைத் தவிர்க்கும் வகையில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளுடன் ஒருங்கிணைந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு.
தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த இந்த நகரம் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் முக்கிய நகரமாகத் திகழ்கிறது. கடந்த 1848-ல் கோவைக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் கோவையின் முதல் நகரவைத் தலைவராகப் பொறுப்பேற்றார். 1981-ல் இது மாநகராட்சியாக மாறியது.
கோவை நகர்ப் பகுதி சுமார் 265 சதுரகிலோமீட்டர் பரப்பு கொண்டுள்ளது. சுமார் 50 சதுரகிலோமீட்டர் பரப்பில் நகரின் மையப் பகுதிகள் அமைந்துள்ளன.
தொழல் துறையில் மட்டுமின்றி கல்வித் துறையிலும் சிறந்து விளங்கும் கோவையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் எண்ணற்ற பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. ஏராளமான தொழில்முனைவோரைக் கொண்ட இந்த நகரம், நெசவு மற்றும் பொறியியல் தொழிலின் மையமாகத் திகழ்கிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழப்படும் அளவுக்கு முன்பு ஏராளமான பஞ்சாலைகள் இருந்தன.
தினமும் 2 லட்சம் பேர் வருகை
தற்போது சுமார் 20லட்சத்துக்கும் மேற்பட்டோர் கோவையில் வசிக்கின்றனர். அதுமட்டுமின்றி, தினமும் கல்வி, தொழில், வியாபாரம், மருத்துவம் உள்ளிட்ட பணிகளுக்காக 2 லட்சம் பேர் கோவைக்கு வந்து செல்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், பாலக்காடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களும் கோவை வழியே செல்கின்றன. எனினும், வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே.
இதனால், கோவை நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, அவ்வப்போது விபத்துகளும் நேரிட்டு, பலர் உயிரிழக்கின்றனர்.
கோவையைப் பொறுத்தவரை அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை ஆகியவை முக்கியமான பிரதான சாலைகளாகும். அதுமட்டுமின்றி, தடாகம் சாலை, விளாங்குறிச்சி சாலை, தொண்டாமுத்தூர் சாலை உள்ளிட்ட சாலைகளும் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.
அதிகரித்துள்ள வாகனங்களால் இந்த சாலைகளில் பயணம் செய்வது எளிதாக இல்லை. லட்சக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் பயணிக்கும்போது, கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
குறிப்பாக, 2010-ம் ஆண்டுக்குப் பிறகு நகரில் போக்குவரத்து மிகவும் அதிகரித்துவிட்டது. சாதாரண நாட்களிலேயே இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க சுமார் 5 நிமிடங்களாகிறது. இதுவே, 4 சக்கர வாகனங்களுக்கு 8 நிமிடங்களாகிறது.
சுரங்க நடைபாதை தேவை
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பல மேம்பாலங்களும், சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், கோவையில் ஒரு சுரங்க நடைபாதை கூட கிடையாது. காந்திபுரம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உக்கடம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.
பல இடங்களில் பெண்கள், முதியோர், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர், சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் போதுமான அளவுக்கு சிக்னல்களும் இல்லை. அவிநாசி, சத்தியமங்கலம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் சாலைகளில் சுமார் 25 சிக்னல்கள் உள்ளன. எனினும், இதைப்போல இன்னொரு மடங்கு சிக்னல்கள் அமைக்க வேண்டியது அவசியமாகும்.
கோவை நகரின் மையப் பகுதியில், காந்திபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள நஞ்சப்பா சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தினர். இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால், அந்தப் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. அப்பகுதியில் உள்ள மின்சார கோபுரங்கள், வயர்களை அகற்றினால் மட்டுமே பாலத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெறும். 18 மாதங்களில் முடிக்க வேண்டிய பணிகள் 2 ஆண்டுகளாகியும், 50 சதவீதம்தான் முடிக்கப்பட்டுள்ளன என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதேபோல, நகரம் முழுவதும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படுவது அவசியம். சுமார் 40 இடங்களில் மேம்பாலங்கள் அமைத்தால்மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு ஓரளவு தீர்வுகாண முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
2 அடுக்கு மேம்பால பணிகள் ஓராண்டுக்குள் முழுமைபெறும்
நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ஜெ.கண்ணன் கூறும்போது, “நஞ்சப்பா சாலையிலிருந்து சத்தி சாலை வரை 1.75 கிலோமீட்டர் தொலைவுக்கு, 16.60 மீட்டர் அகலத்தில் முதல் அடுக்கு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, 100 அடி சாலையிலிருந்து சின்னசாமி சாலை வரை 1.23 கிலோமீட்டர் தொலைவுக்கு, 8.50 மீட்டர் அகலத்தில் இரண்டாவது அடக்கு பாலம் அமைக்கப்படும். மொத்தம் ரூ.162 கோடி மதிப்பில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. பாலத்தின் மீது செல்லும் மின் வயர்கள் மற்றும் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரங்களை அகற்றுவது தொடர்பாக மத்திய மின்சக்தி ஆய்வு நிலையத்தினர் அண்மையில் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்பகுதியில் 2 நாட்களுக்கு மின்சாரத்தை நிறுத்தி, இந்த மின் கோபுரங்கள் மற்றும் வயர்கள் அகற்றப்படும். இதையடுத்து, 3 மாதங்களில் முதல் அடுக்கு பாலத்தின் பணிகள் நிறைவடையும் அடுத்த 6 மாதங்களில் இரண்டாவது அடுக்கு பாலத்தின் பணிகளும் முடிக்கப்படும். சுமார் ஓராண்டில் இப்பணிகள் அனைத்தும் நிறைவடையும்” என்றார்.
ஆண்டுக்கு 1.10 லட்சம் வாகனங்கள்…
கோவை நுகர்வோர் அமைப்பு செயலாளர் கதிர் மதியோன் கூறும்போது, “கோவை மாவட்டத்தில் ஓராண்டுக்கு 1.10 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. 50 வீடுகள் இருந்த இடங்களில் 2,000 வீடுகள் கொண்ட குடியிருப்புகளும், சில கடைகள் இருந்த இடங்களில் நூற்றுக்கணக்கான கடைகளைக் கொண்ட வணிக வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன. மனிதர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்த நிலையில், பயன்பாட்டில் உள்ள இடங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
கோவை ஒப்பணக்கார வீதி, டவுன் ஹால், உக்கடம், லட்சுமி மில்ஸ் சாலை, தடாகம் சாலை, சரவணம்பட்டி, சுங்கம், சிங்காநல்லூர், ஹோப் கல்லூரி, மசக்காளிபாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் பல நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல வணிக வளாகங்கள், திருமண மண்டபங்களில் வாகனங்களை நிறுத்த இடமில்லாததால், சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர். எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, புதிதாக மேம்பாலங்களை அமைக்க வேண்டும். வாகனங்களை நிறுத்துமிடம் ஒதுக்காத நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை, மாநகராட்சி அலுவலர்கள் மேற் கொள்ள வேண்டும். மேலும், போக்குவரத்து சீரமைப்பில் போலீஸார் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றார்.
இரு இடங்களில் மாதிரி சாலைகள்…
கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் கூறும்போது, “சென்னையில் பல இடங்களில் மாதிரி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, கோவையில் டி.பி. ரோடு, டி.வி.சாமி ரோடு ஆகிய இரு சாலைகளில், ரூ.5.5 கோடி மதிப்பில் மாதிரி சாலைகள் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த சாலைகளில், நடந்து செல்வோருக்காக தனி பாதைகள் அமைக்கப்படும். மேலும், மின்சார வயர்கள், குடிநீர்க் குழாய் ஆகியவை நிலத்துக்கடியில் செல்லும் வகையில் அமைக்கப்படும். சாலையில் நடுவில் சிறிய அளவிலான தடுப்பு, நவீன விளக்குகள், சிறிய தோட்டம் உள்ளிட்டவை அமைக்கப்படும். வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கப்படும். மொத்தம் 2.8 கிலோமீட்டர் தொலைவுக்கு மாதிரி சாலைகள் அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்.
மாநகரில் சாலைகளை விரிவுபடுத்தவும், சீரமைக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பொதுக்கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவர்களது உரிமம் ரத்து செய்யப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த, 300-க்கும் மேற்பட்ட விளம்பரத்தட்டிகள் அகற்றப்பட்டுள்ளன” என்றார்.
ஆம்னி பேருந்துகளால் அவதி…
சிஐடியு மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன் ‘தி இந்து’விடம் கூறியது: போக்குவரத்து நெரிசலால் லட்சக்கணக்கான மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களது நேரம், எரிபொருள் ஆகியவை தேவையின்றி விரமயாகிறது. ஆம்னி பேருந்துகளை நிறுத்த நீலம்பூரில் இடம் ஒதுக்கி, அங்கு மட்டுமே அவற்றை நிறுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் காந்திபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் கீழே நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, அவிநாசி சாலை, காந்திபுரம் பகுதிகளில் இரவு 8 மணி முதல் 11 மணி வரை ஆம்னி பேருந்துகளால் அதிக போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது.
இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை. மாநகராட்சி சார்பில் உள்ள வாகன நிறுத்துமிடங்களிலும், மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல, தனியார் மால்களிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசுத் துறை அலுவலகங்களில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களைக் கூறி, வாகனங்களை நிறுத்த அனுமதிப்பதில்லை.
வடகோவை ரயில் நிலையம் முதல் மாநகர எல்லை வரை 13 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இருகூர், ரத்தினபுரி என 2 இடங்களில்தான் பாலங்கள் உள்ளன. மற்ற 11 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.
அவிநாசி சாலை மேம்பாலம் அமைத்து 45 ஆண்டுகளாகிவிட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால், அந்தப் பாலம் சிதிலமடைந்து வருகிறது.
நகரில் 10 சதவீத தெருக்களில்தான் நடைபாதை உளளது. பல்வேறு பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது.
எனவே, போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண, சிறப்பு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நெடுஞ்சாலை, காவல் துறைகள், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து, சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தினால், சுமார் 2 ஆண்டுகளில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண முடியும்.
அதேபோல, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் மற்றும் புறநகர்ப் பேருந்து நிலையங்களைத் தவிர, மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் இல்லை. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்தப் பிரச்சினைக்கும் உரிய தீர்வுகாண வேண்டும் என்றார்.
மேலும் 4 போக்குவரத்து சிக்னல்கள்…
கோவை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) எஸ்.சரவணன் கூறும்போது, “மாநகர போக்குவரத்து காவல் துறையில் துணை ஆணயைர், உதவி ஆணையர், 2 ஆய்வாளர்கள், 15 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் உள்ளனர். தற்போது 54 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. மேலும், 4 இடங்களில் புதிதாக சிக்னல்கள் அமைக்கவும், தேவைப்படும் இடங்களில் புதிதாக சாலை மையத் தடுப்புகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய இடங்களில் சாலையைக் கடப்பது மற்றும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்து, போக்குவரத்து சீரமைப்புப் பணியில் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago