உள்ளாட்சி 43: வீடு தேடி வருகிறார்கள் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள்!

By டி.எல்.சஞ்சீவி குமார்

கருணைக் கொலைக்கு மாற்றாக கருணை சிகிச்சை... டோர் டெலிவரியில் ‘பாலியேட்டீவ்’ சிகிச்சை... நெகிழ வைக்கும் கேரளத்து பஞ்சாயத்துக்கள்!

அப்பா படுத்த படுக்கையாக இருந்த நாட்கள் அவை. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அவர் நினைவற்றுக்கிடந்தார். எல்லாமே படுக்கையில்தான். அருகில் வசித்த செவிலியர் தினசரி இரு வேளை வீட்டுக்கு வந்து சிகிச்சை கொடுத்தார். நாள் ஒன்றுக்கு ரூ.500 கொடுத்தோம். ஒருகட்டத்தில் அவர் வீடு மாறிவிட்டார். வர இயலவில்லை. பல மருத்துவமனைகளைத் தொடர்பு கொண்டபோது நாள் ஒன்றுக்கு குறைந்தது ரூ.2 ஆயிரம் கேட்டார்கள். சில அறக்கட்டளை அமைப்புகள்கூட மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் கேட்டன. தனியார் மருத்துவமனைகள், அறக் கட்டளை அமைப்புகளைத் தவறு சொல்ல இயலாது. அவற்றின் இயல்பு அப்படி.

ஆனால், ஓர் அரசாங்கத்தின் இயல்பு எப்படி இருக்க வேண்டும்? இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவு 12-ன் படி ஒவ்வொருக்கும் மருத்துவ சிகிச்சையை அளிக்க வேண் டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால், தமிழகத்தில் நிலைமை அப் படியா இருக்கிறது? அரசு பொது மருத்துவமனைகளில் ஆதரவற்ற முதியோர்களை வெளியே தூக்கி வீசுவது இங்கே சாதாரண சம்பவங் கள். பிரசவம் தொடங்கி பிரேதப் பரிசோதனை வரை பணம் பிடுங்கு கிறார்கள். கிராமங்களில் 31 சதவீதம் பேருக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லை. சிகிச்சை கிடைக்காமல் ஆண்டுக்கு 27 சதவீதம் பேர் இறக்கிறார்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் வருவதே அபூர்வக் காட்சியாக இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளோ சாதாரண சளி, காய்ச்சலுக்கே ஆயிரங்களில் வசூலிக்கின்றன. புற்றுநோய், இதய நோய் வந்தால் சொத்துக்களை விற்க வேண்டும். சுருக்கமாக சொல்வ தானால் ஏழைக்கு பெரிய நோய் வந்தால் நேராக சுடுகாட்டுக்குச் சென்று படுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஒப்பிடுவதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், வேறுவழியில்லை; கேரளத்தில் இப்படி எல்லாம் இல்லை. மருத்துவர் திவ்யா திருவனந்தபுரத்தில் வசிக் கிறார். நன்னியோடு என்கிற கிராமப் பஞ்சாயத்தின் மருத்துவமனையில் பணிபுரிகிறார். அவரது மருத்துவ மனைக்குச் சென்றோம். அங்கிருந்து ‘‘ஃபீல்டுக்கு வாரீங்களோ” என்று அழைத்துச் சென்றார். சற்று தொலைவில் ஒரு வீட்டு வாசலில் வாகனம் நிற்கிறது. உள்ளே நுழை கிறோம். படுத்த படுக்கையில் இருக்கிறார் வயதான பெண்மணி. அவருக்கு புற்றுநோய். மருத்துவக் குழுவினரைக் கண்டதும் அவர் எழ முயற்சிக்கிறார்.

“எனிட்டு வேணா... எனிட்டு வேணா...” என்று அவரை படுக்க வைக்கிறார்கள். கரிசனத்துடன் விசாரிக்கிறார்கள். ஊசி செலுத்தி னார்கள். சில மருந்துகளைக் கொடுத்தார்கள். சுமார் 15 நிமிடங்கள் சிகிச்சை நீடித்தது. அன்று அந்தக் கிராமத்தில் 18 வீடுகளில் இப்படியாக சிகிச்சை அளித்தார்கள். அவர்களில் கணிசமாக புற்றுநோயாளிகள். நாம் சென்றபோது சிலர் வலி தாங்காமல் கதறிக்கொண்டிருந்தார்கள். அவசர மாக அவர்களுக்கு சிகிச்சை அளிக் கப்பட்டது. சில நிமிடங்களில் வலியில் இருந்து மீண்டு கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கிறார்கள். ‘பாலியேட்டீவ் கேர்’ (Palliative care) திட்டம் மூலம் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

“இதில் பாதி பேர் உயிர் பிழைக்க இயலாது என்று தெரியும். அவங்க தங்களோட கடைசி நாட்களை எண்ணிக்கிட்டிருக்காங்க. நாங்க முடிஞ்சவரைக்கும் அவங்களோட உடல், மன வேதனையை மறக்கடிக்க முயற்சிக்கிறோம். எல்லாம் எண் டோசல்ஃபான் மருந்தால வந்தது. அதை விவசாயத்துக்கு உபயோகிச் சதால கேரளத்தில் பலருக்கு புற்று நோய் வந்திட்டு. ஒவ்வொரு கிராமத்திலும் குறைஞ்சது 20 - 50 பேர் வரைக்கும் புற்றுநோயால் பாதிக் கப்பட்டிருக்காங்க. பலர் கருணைக் கொலைக்கு மனு போட்டாங்க. ஆனால், நீதிமன்றம் மறுத்திடுச்சு. அதுக்கு பதிலாகதான் இந்தக் கருணை சிகிச்சை. அவங்களால் நிம்மதியாக வாழத்தான் முடியலை. நிம்மதியாக சாகவேனும் விடுவோமே...” என்கிறார் திவ்யா.

அதேசமயம் ‘பாலியேட்டீவ்’ சிகிச்சை பலருக்கு வாழ்க்கையை மீட்டுக்கொடுத்திருக்கிறது. கிளிமா னூர் பஞ்சாயத்தில் கொட்டாரம் பகுதியில் நரம்பு தளர்ச்சியால் நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருந்த மஞ்சு என்கிற 32 வயதான பெண்மணி ஒரு வருட சிகிச்சைக்குப் பிறகு இன்று முழுமையாக குண மடைந்திருக்கிறார். தோப்பில் என்கிற பகுதியில் 58 வயதான ஆலியார் குஞ்சு என்பவர் எலும்பு புற்றுநோயில் இருந்து மீண்டிருக்கிறார்.

கேரள அரசு நாட்டிலேயே முதல் முறையாக கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி ‘ஆரோக்கியா கேரளம் பாலியேட்டீவ் கேர் புராஜெக்ட்’ திட்டத்தைத் தொடங் கியது. அதனை செயல்படுத்தும் பொறுப்பு முழுமையாக உள்ளாட்சி அமைப்பு களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை செயல்படுத்த மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. மாநில அளவிலான குழுவுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் தலைவராக இருக் கிறார். சுகாதாரத் துறைச் செயலாளர் துணைத் தலைவர். பஞ்சாயத்துத் துறை இயக்குநர் உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார். இந்தக் குழு ஆண்டுக்கு குறைந்தபட்சம் இருமுறை கூட்டம் நடத்த வேண்டும். மாவட்ட அளவிலான குழுவுக்கு ஜில்லா பஞ்சாயத்துத் தலைவரே குழுவின் தலைவராக இருக்கிறார். மாவட்ட ஆட்சியர் துணை தலைவர். சுகாதாரத் துறை இயக்குநர்கள், பஞ்சாயத்து துறை துணை இயக்குநர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தக் குழு ஆண்டுக்கு குறைந்தது நான்கு முறை கூட்டம் நடத்த வேண்டும்.

வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கிறார்கள்.

அடுத்தது கிராமப் பஞ்சாயத்து அளவிலான குழு. திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் பொறுப்பு இவர்களுடையதுதான். கிராமப் பஞ்சாயத்தின் தலைவரே இந்தக் குழுவுக்கும் தலைவர். பஞ்சாயத்து சுகாதார அலுவலர் ஒருங்கிணைப்பாளராகவும், பஞ்சாயத்துச் செயலாளர் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்கள். மருத்துவர்கள் செவிலியர்கள், சுகாதாரக் கண் காணிப்பாளர்கள் உறுப்பினர்கள். இவர்கள் ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்த வேண்டும். தங்கள் மருத்துவமனைக்கு உள்கட்டமைப்பு தொடங்கி உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் வரை என்னென்ன தேவை என்பதை இந்தக் குழு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்கும். அதன்படி சுகாதார துறை ஒதுக்கீடு செய்கிறது.

ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து மருத்துவமனையின் ‘பாலியேட்டீவ்’ சிகிச்சை குழுவினர் தினசரி 8 -9 வரையிலான வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டியது கட்டாயம். இதற்கான பிரத்தியேக மருத்துவர் ஒருவர், இரண்டு செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, மாநிலம் முழுவதும் பயிற்சி பெற்ற 8 ஆயிரம் தன்னார்வலப் பணியாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 300 பேர் வரை பணிபுரிகிறார்கள். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரம் மற்றும் சமூக நலத் துறை பணியாளர்களில் 25 சதவீதம் பேர் ‘பாலியேட்டீவ்’ சிகிச்சை குறித்து பயிற்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சராசரியாக 50 - 150 வரை எண்ணிக் கையிலான நீண்டகால நிரந்தர நோயாளிகள் மற்றும் வயோதிகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆதரவு இல்லாத முதியோர்களுக்கு அங்கன்வாடிகள் உணவு அளிப்பதை உறுதி செய்துக்கொள்வதும் பஞ் சாயத்து மருத்துவக் குழுவின் பொறுப்பு. கோழிக்கோட்டில் இருக் கும் ‘பாலியேட்டீவ்’ மருத்துவ நிறுவனத்தில் இதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி யில் இதற்கென பிரத்தியேக மருத்து வப் படிப்புகள் இருக்கின்றன. இதனை சிகிச்சையாக அல்லாமல் சமூக ஆதரவு மருத்துவ இயக்கமாக நடத்துகிறார்கள். கேரளத்தின் 80 சதவீத நோயாளிகள் இந்தத் திட்டத்துக்குள் வருகிறார்கள்.

‘பாலியேட்டீவ்’ சிகிச்சை என்றால் என்ன?

நீண்டகால, நிரந்தர மற்றும் தீர்க்கவியலாத நோய்கள் அனைத்துமே இதற்கு பொருந்தும். சில அனுமதிக்கப்பட்ட மருந்துகள் மூலம் வலி மற்றும் வேதனையை தற்காலிகமாக போக்குவது இதன் பிரதான நோக்கம். புற்றுநோய், ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ், பக்கவாதம், நுரையிரல் நோய்கள், இதய நோய்கள், ரத்த நாள நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், நீரிழிவு நோயாளிகள், மனநோயாளிகள், அனைத்து வகையான முதியோர் பிரச்சினைகளுக்கு இந்தத் திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.



தமிழகத்தில் கடந்த 91-ம் ஆண்டு முதல் சில அறக்கட்டளை அமைப்புகள் ‘பாலியேட்டீவ்’ சிகிச்சை சேவைகளை அளித்துவருகின்றன. ஆனாலும் பெரிய அளவில் இல்லை. தற்போது தமிழகத்தில் சென்னை, திருச்சி, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 19 தனியார் ‘பாலியேட்டீவ்’ சிகிச்சை மையங்கள் இருக்கின்றன. கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு மாவட்டம்தோறும் ‘பாலியேட்டீவ்’ சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்து, ரூ.16.50 கோடி நிதியை ஒதுக்கியது.

முதல்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பின்னர் விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப் பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகளாகி யும் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. முன் னேற்றம் ஏற்படும் என்று நம்புவோமாக.

- பயணம் தொடரும்... | படங்கள்: மு.லட்சுமி அருண்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்