சென்னை: தமிழகத்தில் நாளை 44 இடங் களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அக். 2-ம் தேதி மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையிலும், அம்பேத்கர் நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமியை முன்னிட்டும் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குகள் தொடர்ந்தனர்.
அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டிருந்தார். இதேபோல, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பிலும் அக். 2-ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று சுட்டிக்காட்டிய தமிழக அரசு, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்பினருக்கும் அக். 10 வரை பேரணி, மனித சங்கிலி நடத்த அனுமதி கிடையாது என உத்தரவிட்டது.
இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த மனித சங்கிலி அக்.11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறக் கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதேசமயம், அக். 2-ம் தேதிக்குப் பதிலாக நவ. 6-ம் தேதி பேரணி நடத்திக்கொள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்ததால், 50 இடங்களில் அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், நவ. 6-ம் தேதி பேரணி நடத்த போலீஸார் அனுமதி வழங்கவில்லை என்று கூறி, உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் 50 அவமதிப்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு அக். 31-ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, காவல் துறை தரப்பில் மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, ஏற்கெனவே இது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்போது இருந்த சூழல் தற்போது தமிழகத்தில் இல்லை எனவும், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டியும், உள்ளூர் சூழலுக்கேற்ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி வழங்க டிஜிபி அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த வழக்கு கடந்த நவ. 2-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜா மற்றும் வழக்கறிஞர் ரபுமனோகர் ஆகியோர், உளவுத் துறையின் அறிக்கையை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டும் பேரணி நடத்த போலீஸார் அனுமதி வழங்கியிருப்பதாகவும், 23 இடங்களில் உள்ளரங்குகளில் பேரணி நடத்தவும், 24 இடங்களை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மட்டும் 500 இடங்களில் தமிழக அரசு அனுமதி வழங்கியதையும் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, தமிழக உளவுத் துறையின் அறிக்கையை ஆராய்ந்து, எஞ்சிய 47 இடங்களில் அனுமதி வழங்குவது தொடர்பாக நவ. 4-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அறிவித் திருந்தார்.
அதன்படி இந்த வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: உளவுத் துறையின் அறிக்கையில், 2007, 2008-ல் பதிவான பழைய வழக்குகளே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை மற்றும் நாகர்கோவில் ஆகிய 6 இடங்களைத் தவிர்த்து, ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட 3 இடங்கள் உள்பட 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணியை அமைதியான முறையில் மேற்கொள்ள போலீஸார் அனுமதி வழங்க வேண்டும்.
மைதானத்தில் மட்டுமே நடத்தலாம்: அதேசமயம், சுற்றுச்சுவர் பாதுகாப்புடன் கூடிய காலி மைதானம் அல்லது விளையாட்டு அரங்குகளில் மட்டும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம். அந்த இடத்துக்குச் செல்லும் வழியில் போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது.
மேலும், எவ்வித ஆயுதங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. தனிப்பட்ட நபர் அல்லது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் குறித்து பேசக் கூடாது. மொழி, இனம், கலாச்சாரம், ஜாதியை மையமாகக் கொண்டு, பிரிவினையைத் தூண்டும் வகையிலான கருத்துகளைக் கூறக் கூடாது. இவற்றை அடிப்படையாகக் கொண்ட பாடல் களையும் பாடக் கூடாது. இவ்வாறு உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
அசம்பாவிதம் ஏற்பட்டால் ஆர்எஸ்எஸ்தான் பொறுப்பு: நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தனது உத்தரவில், ‘‘பேரணியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினரே பொறுப்பேற்க வேண்டும். அதேபோல, 44 இடங்களிலும் போலீஸார் மற்றும் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஏற்க வேண்டும். எஞ்சிய 6 இடங்களில், 2 மாதங்களுக்குப் பிறகு இயல்புநிலை திரும்பியதும் பேரணி நடத்துவது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் புதிதாக மனு அளிக்கலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago