வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு போதிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசே முன்வந்து காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு போதிய இழப்பீடு வழங்க முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காவிரி பாசன மாவட்டங்களில் 60 ஆயிரத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்திருக்கின்றன. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் வெள்ள நீர் வடிவதற்கு வாய்ப்பில்லை என்பதால் சம்பா பயிர்கள் என்னவாகுமோ? என்ற கவலையில் உழவர்கள் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. 20-க்கும் கூடுதலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்றாலும் கூட, காவிரி பாசன மாவட்டங்களில் தான் அதிக மழை பொழிந்து வருகிறது. கடந்த இரு நாட்களில் சீர்காழியில் 30 செ.மீக்கும் கூடுதலாக மழை பெய்திருக்கிறது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் 20 செ.மீக்கும் கூடுதலாக மழை கொட்டியிருக்கிறது. இதனால் வயல்வெளிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 30,000 கூடுதலான ஏக்கர்களில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் தலா 10,000 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் நெற்பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன.

கடலூர், அரியலூர் மாவட்டங்களிலும் சம்பா பருவ நெற்பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மழை நீரில் மூழ்கியுள்ள சம்பா பயிர்களில் பெரும்பாலானவை கடந்த 20 நாட்களில் நடவு செய்யப்பட்டவை. அவை ஒரு சில நாட்களுக்கு தண்ணீரில் மூழ்கி இருந்தாலே அழுகி விடக்கூடும் என்று உழவர்கள் அஞ்சுகின்றனர். மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், வடிகால்களில் தண்ணீர் நிரம்பியிருப்பதாலும் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அவர்கள் கூறியுள்ளனர். சில இடங்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த குறுவை பயிர்களும் சேதமடைந்திருக்கின்றன.

வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் உடனடியாக வடியவில்லை என்றால், பயிர்கள் முழுமையாக அழிந்து விடும். அதன்பின் சம்பா நெற்பயிரை புதிதாகத் தான் நட வேண்டும். அதற்கு விதை, உரம், மனித உழைப்பு ஆகியவற்றுக்காக ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவாகும். ஏற்கெனவே விவசாயிகள் கடன் வாங்கித் தான் சம்பா சாகுபடி செய்தனர். இந்த நிலையில் ஏக்கருக்கு மீண்டும் ரூ.15,000 செலவு செய்வது உழவர்களால் சாத்தியமாகாது. பெரும்பாலான சம்பா பயிர்கள் காப்பீடு செய்யப்படவில்லை என்பதால் இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை. காப்பீடு செய்த பயிர்களுக்கும் கூட ஏதேனும் காரணம் கூறி இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுக்கக்கூடும் என்பதே உழவர்களின் கவலையாக உள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழையால் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி விவசாயம் செய்த உழவர்கள் கடன் வலையில் சிக்கியுள்ளனர். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் உரிய இழப்பீடு வழங்கவில்லை. ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.50, ரூ.100 என்ற அளவில் தான் இழப்பீடு வழங்கப்பட்டது. அதனால், நடப்பாண்டு சம்பா சாகுபடி வெற்றிகரமாக அமைந்தால் தான், அதில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு தங்களின் கடன் சுமையை ஓரளவாவது குறைக்க முடியும் என்று உழவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் வடகிழக்கு பருவமழை சுக்குநூறாக்கி விட்டது.

சம்பா நெற்பயிர்கள் மழையில் நனைந்து சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட உழவர்களின் துயரத்தை துடைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப் பட்டால் தான் உழவர்களின் நெருக்கடி ஓரளவாவது குறையும். காப்பீட்டு நிறுவனங்கள் உழவர்களை சுரண்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதால் அவற்றிடமிருந்து நீதியையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்க முடியாது. எனவே, தமிழக அரசே முன்வந்து காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு போதிய இழப்பீடு வழங்க முன்வர வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்