நலிந்து வரும் 'நாடகத்தமிழை' பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் முயற்சியில் மேடை மற்றும் வானொலி நாடகக் கலைஞர் ஈடுபட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் ம.இளங்கோவன் (68), மேடை மற்றும் வானொலி நாடகக் கலைஞர். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவரது கலைப்பயணம் 46 ஆண்டுகளைக் கடந்து இன்றளவும் தொடர்கிறது. 24 வயதில் புராண, சமூக நாடங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தவருக்கு, அப்போதைய சம்பளம் 15 ரூபாய். தொடர்ந்து 25 ஆண்டுகள் கதாநாயகன் வேடம் ஏற்றவர், தற்போது குணச்சித்திர வேடங்களில் தோன்றுகிறார்.
மேடை நாடகம் மட்டுமின்றி, வானொலி உலகிலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ள இளங்கோவனின் முதல் வானொலி பரிச்சயம் 1969-ம் ஆண்டு இலங்கை வானொலியில் ஒலிபரப்பான கீத நினைவுகள் நிகழ்ச்சி. அதையடுத்து 1973-ல் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் வசனம் பேசுபவராக அறிமுகமானவர், தேன்கிண்ணம், வண்ணச்சுடர் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வசனம் எழுதிப் பேசியுள்ளார்.
வானொலி நிலையத்தில் ஆரம்ப காலத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு 21 ரூபாய் 70 காசுகள் சம்பளம் பெற்றதற்கான ரசீதை பெருமையுடன் காட்டும் இளங்கோவன், தற்போது ஒரு நிகழ்ச்சிக்கு ஆயிரத்து 300 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
மெல்ல மெல்ல நம்மை விட்டு விலகிச் செல்லும் மேடை நாடகங்களை உயிரூட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, 'நாடகத்தமிழ்' என்ற தலைப்பில் கதை, திரைக்கதை எழுதுவது, நடிப்பது குறித்தும், வானொலி நிகழ்ச்சியில் பேசுவது எப்படி என்றும் பல்கலைக் கழகம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இதற்காக, பாரதிதாசன் பல்கலைக் கழகம் இவருக்கு சான்று வழங்கியுள்ளது. மேலும், கலை சீராளன், கலைமுகில், நாடகச்சுடர், நாடகத்தமிழ்ப் போராளி போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து, 'தி இந்து' விடம் ம.இளங்கோவன் கூறியது: இயல், இசை இணைந்ததுதான் நாடகத்தமிழ். எந்த ஒரு தகவலையும் நாடகத்தின் வாயிலாக எடுத்துரைக்கும்போது, அந்த தகவல் அனைத்து தரப்பினரையும் எளிதாகச் சென்றடையும். டிவி தொடர்களின் வரவால் 1988-க்குப் பின் மேடை நாடகம் வெகுவாகக் குறைந்தது. நான் படிக்கும் காலத்தில் ஆசிரியர்கள் படிப்பு மட்டுமல்லாமல், ஆர்வம் உள்ளவர்களுக்கு வாரம் தோறும் நடிப்பு பயிற்சியையும் வழங்கினர். இன்று பெரும்பாலான பள்ளிகள் கலை, விளையாட்டு போன்றவற்றைப் புறக்கணித்து, படிப்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்படுவது வருத்தமாக உள்ளது.
என்னைப் போன்றவர்கள் இக்கலை குறித்து அடுத்த தலைமுறைக்கு தெரிவிக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம். பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காத எனக்கு முதல் முறையாக பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில், 'நலிந்து வரும் கலையை வாழ வைப்பது எப்படி' என்ற தலைப்பில் பேச வாய்ப்பு கிடைத்தது. முதலில் தயக்கம் இருந்தாலும், பேச ஆரம்பித்து ஒரு மணி நேரம் தாண்டியும் என் பேச்சை மாணவர்கள் ஆர்வமுடன் கேட்டனர். அதன் பின்னர், தொடர்ந்து பல்வேறு கல்லூரி, பள்ளிகளில் நாடகம் உள்ளிட்ட கலைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்தும் குறித்து பேசி வருகிறேன் என்றார் இளங்கோவன்.
'வாழ்வு தரும் வானொலி'
மேடை நாடகத்தை விட வானொலி நாடகத்தில் நடிப்பத்தில் சிரமம் அதிகம். முகத்துக்கு முன் யாரும் இருக்க மாட்டார்கள், கதையை உள்வாங்கிக்கொண்டு மனதில் சம்பவத்தை படமாக ஓட விட்டவாறு வசனம் பேச வேண்டும், இல்லையெனில் சரியாக இருக்காது.
முன்பெல்லாம் டயலாக் டெலிவரியில் ஒருவர் தவறு செய்தாலும் மற்ற அனைவரும் முதலில் இருந்து பேச வேண்டும்.
ஆனால், தற்போதைய டிஜிட்டல் வளர்ச்சியால் விட்ட இடத்தில் இருந்து தொடரும் வசதி உள்ளது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருக்கும் என்னைப் போன்ற கிராமப்புற கலைஞர்களுக்கு, அகில இந்திய வானொலி நிலையத்தினர் தொடர்ந்து வாய்ப்பு வழங்கி கலங்கரை விளக்கம் போல காத்துவருகின்றனர் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் இளங்கோவன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago