தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதாக தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இரண்டுநாள் பயணமாக டெல்லி சென்றார். இந்த பயணத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சரை அவரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பனிப்போர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுகவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்வுகளில், புதிய கல்விக் கொள்கை, திருக்குறள், சனாதனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன. குறிப்பாக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக முதல்வருக்கு வழங்கி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

என்ன குறை கண்டார் ஆளுநர்? இந்நிலையில், கடந்த அக்.23-ம் தேதியன்று நடந்த கோவை கார் வெடிப்புச் சம்பவம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி, கோவை வழக்கை என்ஐஏவுக்கு வழங்கியதில் ஏன் இந்த கால தாமதம்? என்று பேசியிருந்தார். இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் என்ன குறை கண்டார் ஆளுநர்? என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிடப்பட்டிருந்தது.

அதில், அக்டோபர் 23-ம் அன்று காலை சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் 26-ம் தேதியன்று காலை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. டெல்லி நீதிமன்ற வளாக வெடிவிபத்து நடந்த 23.12.2021, என்ஐஏ வழக்கு பதிந்த நாள் 13.1.2022; மேற்குவங்க மாநிலம் கெஜூரி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த நாள் 4.1.2022, என்ஐஏ வழக்கு பதிந்த நாள் 25.1.2022; மேற்குவங்க மாநிலம் நைஹைதி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த 27.1.2022, என்ஐஏ வழக்குப் பதிந்த நாள் 8.2.2022; என்று பல்வேறு வழக்குகளைப் பட்டியலிட்டு, மூன்று நான்கு மாதங்கள் கழித்து எல்லாம் இந்த வழக்கை என்ஐஏவுக்கு ஒப்படைத்துள்ளார்கள். ஆனால் தமிழக அரசு சம்பவம் நடந்த மூன்றாவது நாளே வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்திருக்கிறது. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்?

பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதில் உறுதியாக இருக்கிறது திமுகவும், அதன் ஆட்சியும். அதன்மீது களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு ஆளுநர் இதுபோன்ற கருத்துகளை பொதுவெளியில் பொறுப்பற்று பேசக்கூடாது. அவர் இன்னொரு அண்ணாமலையாக ஆக வேண்டாம். தமிழக பாஜக தாங்காது என்று கட்டுரை வெளியிட்டிருந்தது.

குடியரசுத் தலைவரிடம் மனு: இதனைத்தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிப்பதற்காக கூட்டணிக் கட்சிகளிடமிருந்து திமுக சார்பில் கையெழுத்துப் பெறப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்றுக் கொண்ட ஆளுநர், அதற்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதாக சமீபத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் மனு அளிக்க திமுக திட்டமிட்டுள்ளது. கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களுக்கு, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், கட்சி பொருளாளருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க திமுக முடிவெடுத்துள்ளது. திமுக மற்றும் இதே கருத்து கொண்டஎம்.பி.க்கள் அனைவரும் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்து, குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் மனுவை நவ.3-ம் தேதிக்கு (இன்று) முன்பாக படித்துப் பார்த்து கையெழுத்திடும்படி கேட்டுக் கொள்வதாக" கூறியிருந்தார். இதன்படி எம்.பி.க்கள் பலரும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

ஆளுநர் டெல்லி பயணம்: இந்த சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ள நிலையில், ஆளுநரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்