அதிகாலை இருட்டு இன் னும் விலகவில்லை. காலை 6 மணி. குளிர் வெடவெடக்கிறது. ‘சாடுக ஒன்... சாடுக டூ... சாடுக த்ரீ...’ என்று சத்தமாக குரல் கேட்கிறது. கூடவே ‘தொபுக்கடீர்’ ‘தொபுக்கடீர்’ என்று தண்ணீர் சத்தம். சத்தம் கேட்ட திசை நோக்கி நடக்கிறோம். பழங்காலத்து குளம் ஒன்று வருகிறது. குழந்தைகள் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார் பயிற்சியாளர். பிரப்பன்கோடு கிராமம் அது. திரு வனந்தபுரம் மாவட்டம், மாணிக்கல் பஞ்சாயத்தில் இருக்கும் உட் கிராமம். குக்கிராமம் என்றும் சொல்லலாம்.
“நீங்கள் நின்னுக்கொண்டிருப்பது சாதாரண மண்ணில்லையாக்கும். இந்திய தேசத்தின் நீச்சல் கிராமம் இது. இதுபோல ராஜா காலத்துக் குளங்கள் மட்டும் இங்கே 20-க்கும் மேல இருக்கு. எண்டே கிராமத்துல நீச்சல் அறியாத ஒரு ஆளு கிட்டாது. ஒவ்வொரு சின்னக் குழந்தையும் நீச்சல் அறியும். மூணு வயசானால் போதும், குழந்தைகளைக் குளத்துல போட்டுருவோம்...” என்றபடி நம்மை இன்னோர் இடத்துக்கு அழைத்துச் சென்றார் உள்ளூர் பயிற்சியாளர் ஒருவர். உள்ளே நுழைகிறோம். நம்ப முடியாத அதிசயக் காட்சியாக அது விரிகிறது. இவ்வளவு சிறு கிராமத்தில் எவ்வளவு பெரிய நீச்சல் குளம்! சென்னை போன்ற பெருநகரங்களில்கூட இப்படி ஒரு நீச்சல் குளம் இல்லை. மிக பிரம்மாண்டமாக, அதி நவீனமாக கண் முன்னால் விரிகிறது பிரப்பன்கோடு சர்வதேச நீச்சல் குளம் காம்ப்ளெக்ஸ். பயிற்சியாளர் ஜெயச் சந்திரன் வரவேற்றார்.
“இதன் ஒவ்வோர் அடியும் சர்வதேச தரத்தில் கட்டியிருக்கோம். அதாவது, ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பயிற்சி எடுக்கும் வகையில் கட்டி யிருக்கிறோம். நாட்டின் 35-வது தேசிய நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் இங்கேதான் நடந்தது. டெல்லியில் இருக்கும் டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி நீச்சல் காம்ப்ளெக்ஸும் இதுவும் ஒரே மாதிரியானவை. கேலரியில் மட்டும் 3 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கலாம். எல்லாப் பெருமையும் மாணிக்கல் கிராமப் பஞ்சாயத்தையும், கேரள ஸ்போர்ட்ஸ் கமிட்டியையும் சாரும்” என்றபடியே நீச்சல் குளத்தைச் சுற்றிக் காட்டுகிறார்.
மொத்தம் மூன்று நீச்சல் குளங்கள் இங்கிருக்கின்றன. 25 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 5.5 மீட்டர் ஆழம் கொண்டது ஒரு குளம். மேலே டைவிங் பலகையில் இருந்து குதிக்கும் வகையிலான குளம் இது. 50 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலம், 3 மீட்டர் ஆழம் கொண்டது இன்னொரு குளம். 10 டிராக்குகளைக் கொண்டது இது. மூன்றாவது குளம் 25 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் 1 - 1.5 மீட்டர் ஆழமும் கொண்டது. ஒலிம்பிக்கில் கையாளப்படும் சின்கரனைஸ்டு (Synchronised) நீச்சல் எனப்படும் ஜிம்னாஸ்டிக் நீச்சல் கலையை இங்கே கற்றுத் தருகிறார்கள். ஜிம்னாஸ்டிக்கின் அழகிய தண்ணீர் நடனக் கலை வடிவம் இது. தவிர, நீச்சல் கைப்பந்து போட்டியும் உண்டு. கடந்த 2015-16ல் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் நாட்டில் மொத்தம் 13 பேர் தங்கம் வென்றார்கள். அதில் 8 பேர் பிரப்பன்கோட்டைச் சேர்ந்தவர்கள்.
பயிற்சி மற்றும் நிர்வாகத்தை கேரள மாநில விளையாட்டுத்துறை மேற்கொள்கிறது. இந்த நீச்சல் குளம் உட்பட கிராமத்தின் அனைத்து பாரம்பரிய நீச்சல் குளங்களின் பராமரிப்பு பணிகளைப் பஞ்சாயத்து மேற்கொள்கிறது. தேசிய அளவிலான வீரர்கள் என்பதால் கிராமத்தில் பெரும்பாலும் அரசுப் பணியில் இருக்கிறார்கள். ‘பிறந்ததே நீச்சல் பயிலத்தான்’ என்கிற வாசகம் இங்கே பிரபலம். குழந்தைகள் அதனை மந்திரம்போல உச்சரிக்கிறார்கள். மக்களின் கலாச்சாரத்துடன் கலந்து விட்டிருக்கிறது நீச்சல். ’’இது நேற்று இன்றைய பழக்கமல்ல; பல நூற் றாண்டுப் பழக்கம்’’ என்கிறார்கள் மக்கள். கேரள மாநிலத்தில் உலகத் தரம் வாய்ந்த நீச்சல் குளம் அமைக்க விருக்கிறோம் என்று 2000-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஈ.கே.நாயனார் அறிவித்தபோது திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம் போன்ற பெரு நகரங்கள் அதனை போட்டி போட்டு கைப்பற்ற முயன்றன. ஆனால், மாணிக்கல் கிராமப் பஞ்சாயத்து தங்கள் கிராமத்துக்கு வேண்டும் என்று கேட்டபோது கேலியாக சிரித்தார்கள் சிலர். போக்குவரத்து வசதியில்லை; வெளிநாட்டினருக்கு தங்கும் இடவசதி இல்லை என்று பல காரணங்களை அடுக்கி மறுத்தார்கள். ஆனால், தனது மண்ணின் நீச்சல் பாரம்பரியத்தை முன்னிறுத்தி போராடியது மாணிக்கல் பஞ்சாயத்து. எல்லா வசதிகளையும் ஏற்படுத்த இடம் ஒதுக்கித் தருவதாக உறுதியளித்தது. அதன்படியே ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கியது.
ஒருவழியாக அனுமதி கிடைத்து பணிகள் தொடங்கின. மொத்தம் 12 ஆண்டுகள் பணிகள் நடந்தன. ரூ. 5 கோடியில் தொடங்கிய திட்ட மதிப்பு முடிக்கும்போது ரூ.15 கோடி ஆனது. 2012-ம் ஆண்டு மே மாதம் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் குளத்தை திறந்து வைத்தார். இங்கிருக்கும் சுமார் 20 பாரம்பரிய குளங்களுக்கும் நீச்சல் பயிற்சியாளர்களை நியமித்திருக் கிறது கிராமப் பஞ்சாயத்து. பஞ்சாயத் துப் பள்ளியில் இருந்து குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு நீச்சல் பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள்.
மாணிக்கல் பஞ்சாயத்து சார்பில் பிரப்பன்கோடு கிராமத்தில் நிர்வகிக்கப்படும் நீச்சல்குளம்.
பாரம்பரிய குளங் களில் இரண்டு ஆண்டுகள் நீச்சல் பயிற்சிகளை முடித்தவர்கள் சர்வதேச நீச்சல் குளத்தில் சேர்க்கப்படுகிறார்கள். பிரப்பன்கோடு மட்டுமின்றி, திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரளத்தின் பிற மாவட்டங்களில் இருந்து இங்கே வந்து நீச்சல் கற்கிறார்கள். தினசரி 300 பேர் பயிற்சி பெறுகிறார்கள். இங்கிருக்கும் தங்கும் விடுதியில் தங்கி 40 பேர் பயிற்சி பெறுகிறார்கள். 8 பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு வீரரையாவது தயார் செய்வதே எங்கள் இலக்கு என்கிறார்கள் பயிற்சியாளர்கள்!
குழந்தைகள், முதியோருக்கு உணவு!
மாணிக்கல் கிராமப் பஞ்சாயத்தில் மொத்தம் 34 அங்கன்வாடி மையங்கள் இருக்கின்றன. மூன்று வயது முதல் ஐந்து வயதுடைய குழந்தைகளை இங்கே பராமரிக்கிறார்கள். ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 10 முதல் 15 குழந்தைகள் பராமரிக் கப்படுகின்றன. ஒவ்வொரு மையத்துக்கும் ஓர் ஆசிரியர், ஓர் உதவியாளர் உண்டு. ஆசிரியருக்கு ரூ.10,000, உதவியாளருக்கு ரூ.7,000 சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் செலவை பஞ்சாயத்து பகிர்ந்துகொள்கிறது. குழந்தை களுக்கு காலை டிபன், மதியம் கஞ்சி, சோறு, மாலை பால், பழம் கொடுக்கிறார்கள். இந்த அங்கன் வாடிகளுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. ஒவ்வொரு வார்டு வாரியாக ஆதரவற்ற முதியவர்கள் கணக்கு எடுக்கப்பட்டு காலை, மதியம் அவர் களுக்கு உணவு வழங்கப் படுகிறது.
மக்கள் குடிநீர் திட்டம்
மாணிக்கல் கிராமத்தில் ‘ஜலநதி’ என்கிற திட்டத்தை பஞ்சாயத்து செயல்படுத்தி வருகிறது. அதாவது, மக்களே நிர்வகிக்கும் குடிநீர் திட்டம் இது. உலக வங்கி நிதியுடன் நடக்கும் இந்தத் திட்டத்தில் 75 சதவீதம் உலக வங்கியும், 15 சதவீதம் மாநில அரசும் அளிக்கின்றன. 10 சதவீதம் மக்கள் நிதி. மாணிக்கல் பஞ்சாயத்தில் இந்தத் திட்டத்தில் 27 கிணறுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சராசரியாக 6 மீட்டர் விட்டம் கொண்டவை இந்தக் கிணறுகள். ஒவ்வொரு கிணற்றையும் 50 -75 குடும்பங்கள் கொண்ட பயனாளிகள் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு கிணற்றுக்கு ஒரு குழு உண்டு. இந்தக் குழுக்களே கிணறுகளின் அனைத்து பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்கின்றன. மொத்தம் 2,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வோர் இணைப்புக்கும் மீட்டர் வைத்து பணம் வசூலிக்கிறார்கள். ஒவ்வொரு பயனாளிகள் குழுக்க ளிலும் இருக்கும் உறுப்பினர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உயர்மட்ட குடிநீர் பயனாளிகள் குழு உரு வாக்கப்பட்டுள்ளது. கிணறு தூர் வாருவது, குழாய் பதிப்பது போன்ற பெரிய பணிகளை இந்தக் குழு மேற்கொள்கிறது. தினசரி காலை, மாலை ஒரு மணி நேரம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு குடும்பத்துக்கு மாதம் 16,000 லிட்டர் வழங்குகிறார்கள். இதுவரை குடிநீர் பிரச்சினை வந்ததில்லை. மேற்கண்ட நிர்வாகத்தில் பஞ்சாயத்து தலையிடுவதில்லை. உதவி கேட்டால் செய்துத் தரும், அவ்வளவுதான். மக்கள் கையில் அதிகாரத்தையும் பொறுப்பையும் கொடுத்தால் அவர்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல் படுவார்கள் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது ஜலநதி குடிநீர் திட்டம்!
- பயணம் தொடரும்... | படம்: மு.லட்சுமி அருண்
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago