தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் புன்னக்காயலில் இருந்ததா? - தமிழக தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியானது கடலில் கலக்கும் பகுதியில் புன்னக்காயல் மீனவர் கிராமம் அமைந்துள்ளது. பல்வேறு வரலாற்று தடயங்களை கொண்டுள்ள இந்த கிராமத்தில் தான் தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் கி.பி.1586-ம் ஆண்டில் இருந்ததாகவும், அந்த அச்சுக்கூடத்தில் ‘அடியார் வரலாறு’ (FLOS SANCTORUM) என்ற நூல், இயேசு சபையைச் சேர்ந்த ஹென்றி ஹென்றிக்கஸ் என்ற கிறிஸ்தவ பாதிரியாரால் அச்சிடப்பட்டதாகவும் இக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

தமிழக தொல்லியல் துறை அதிகாரி ஆசைத்தம்பி நேற்று முன்தினம் புன்னக்காயலில் ஆய்வு மேற்கொண்டார். புன்னக்காயலில் அச்சுக்கூடம் இருந்தது தொடர்பான ஆவணங்களை ஊர் நிர்வாகம் சார்பில் ஊர்த்தலைவர் எடிசன் தொல்லியல் துறை அதிகாரியிடம் வழங்கினார். எழுத்தாளர் நெய்தல் அண்டோ தன்னிடம் இருந்த இரண்டு பழமையான உலோக அச்சுகளை காட்டி விளக்கினார்.

மரங்கள் நடுவதற்காக தோண்டப்பட்ட இடங்களில் இருந்து யூனியன் வார்டு உறுப்பினர் தாமஸ், பச்சை நிறத்திலான சிறு பொருளை எடுத்து வந்து காட்டினார். அந்த பொருள் 15-ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் பயன்பாட்டில் இருந்த செப்புக்காசுகள் எனவும், கடந்த ஆண்டு கொற்கை அருகே மாரமங்கலத்தில் கிடைத்த செப்புக்காசுகளும், இங்கு கிடைத்துள்ள காசும் ஒன்றாக இருப்பதாக தொல்லியல் அதிகாரி தெரிவித்தார்.

தொடர்ந்து ஊர் நிர்வாகத்தினரும், மக்களும் அந்த பகுதியில் தேடி 16 செப்புக்காசுகளை கண்டெடுத்தனர். கிணற்று உறைக்கான துண்டுகள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீங்கான் பாத்திரத்தின் துண்டு களையும் கண்டெடுத்தனர். இவை அனைத்தையும் தொல்லியல் அதிகாரி ஆசைத்தம்பி பதிவுசெய்துகொண்டார். அரசுக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ‘தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம்' என்ற நூலை எழுதிய நெய்தல் அண்டோ கூறும்போது, “ புன்னக்காயலில் வாழ்ந்த இயேசு சபை பாதிரியார் ஹென்றி ஹென்றிக்கஸ் என்பவர் 1578-ல் ‘தம்பிரான் வணக்கம்’ என்ற முதல் தமிழ் நூலை கொல்லத்தில் உள்ள அச்சுக்கூடத்தில் அச்சிட்டுள்ளார்.

அதன் ஒரு பிரதி ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உள்ளது. 1579-ல் ‘கிரிசித்தியானி வணக்கம்’ என்ற நூலை கொச்சி அச்சுக்கூடத்தில் அச்சிட்டுள்ளார். இதன் ஒரு பிரதி ஆக்ஸ்போர்டு நூலகத்தில் உள்ளது. தொடர்ந்து 1580-ல் ‘கொம்பெசியோனாயரு’ என்ற நூலை கொச்சி அச்சுக்கூடத்தில் அச்சிட்டுள்ளார்.

இதன் ஒரு பிரதி ஆக்ஸ்போர்டு நூலகத்தில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக 1586-ல் புன்னக்காயலில் அச்சுக்கூடத்தை அமைத்து, ‘அடியார் வரலாறு’ (FLOS SANCTORUM) என்ற நூலை அச்சிட்டுள்ளார். இதன் ஒரு பிரதி வத்திகான் நூலகத்திலும், மற்றொரு பிரதி கோபன்ஹேகன் அருங்காட்சியகத்திலும் உள்ளது. இது தான் தமிழகத்தில் உருவான முதல் அச்சுக்கூடமாகும். இங்கு விரிவாக ஆய்வு செய்தால், தமிழரின் வாணிகச் சிறப்பும், அச்சுக்கலையின் சிறப்பையும் உலகமறியச் செய்ய பல்வேறு சான்றுகள் கிடைக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்