36 மணி நேரத்தில் 30 செ.மீ மழை - வட சென்னை கள நிலவரம் என்ன?
சென்னை: சென்னையில் விட்டுவிட்டு பெய்துவரும் கனமழை காரணமாக வட சென்னையின் ஒரு சில இடங்களில் 2-வது நாளாக புதன்கிழமை தண்ணீர் தேங்கியது.
தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதியில் தண்ணீர் வடிந்து விட்ட நிலையில், கொளத்தூர், வில்லிவாக்கம் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் 2-வது நாளாக சென்னையில் பெய்து வரும் கனமழையின் பாதிப்பு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள்:
- பெரம்பூர் மாநகராட்சி பூங்கா பகுதியில் 17 செ.மீ, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 16 செ.மீ, சோழிங்கநல்லூர், அயனாவரம், அம்பத்தூர், எம்ஜிஆர் நகர், நுங்கம்பாக்கத்தில் தலா 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
- வட சென்னையில் 36 மணி நேரத்தில் 30 செ.மீ மழை பதிவாகி உள்ளது. நவம்பர் மாதம் பெய்ய வேண்டிய 90 சதவீத மழை அளவை 2 நாட்களில் பெற்றுள்ளது வட சென்னை.
- கனமழை காரணமாக கொளத்தூர் வெற்றி நகர், மந்தவெளி பேருந்து நிலையம், வில்லிவாக்கம் ஜனநாதன் தெரு, பெரம்பூர் பிபி சாலை, பட்டாளம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
- மாலை நிலவரப்படி ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மீதம் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத் சீராக உள்ளது.
- அஷ்டபுஜம் ரோடு, பாந்தியன் லேன், மெட்டுக்குளம் சந்திப்பு, அசோக் நகர் 4, 7 மற்றும் 11 வது அவென்யூ, பிடி ராஜன் சாலை, இளைய தெரு, இ.எச்.ரோடு வி.என்.எம். பிரிட்ஜ் வெஸ்டர்ன் மவுத் ஆகிய சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்லும் நிலை உள்ளது.
- சென்னை மழை காரணமாக விழுந்த 19 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 65 இடங்களில் மேட்டார் பும்புகள் உதவியுடன் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
- சென்னை வடபழனி 100 அடி சாலையில் ரெடிமேட் முறையில் ஒரே இரவில் மழைநீர் கால்வாய் கட்டமைப்பை நெடுஞசாலைத்துறை அதிகாரிகள் அமைத்தனர்.
- எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தாண்டு தண்ணீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சிக்கு ரயில்வே கோட்ட மேலாளர் நன்றி தெரிவித்தார்.
- சென்னையில் பருவமழை பணிகள் தொடர்பான அனைத்துத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், மழை நீர் தேங்கிய இடங்களில் தண்ணீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.