ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 50-ல் 3 இடங்களில் மட்டுமே அனுமதி: உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை தகவல்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காத 47 இடங்களில், உளவுத் துறை அறிக்கையை ஆராய்ந்த பிறகு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கபடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல் துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 6-ம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட்டது. மேலும், அதற்கான நிபந்தனைகளை விதித்து, அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி காவல் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், "கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் அனுமதி வழங்கவில்லை. அனுமதியளித்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத் துறை அறிக்கையை காட்டி தமிழக அரசு தப்பிக்க பார்க்கிறது. நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்துள்ளனர். அனைத்து தரப்பு மக்களையும் காப்பதுதான் அரசின் கடமை. அமைதியான ஊர்வலத்தை யாரும் தடுக்க முடியாது. அது ஜனநாயக உரிமை" என்று வாதிட்டார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், "தமிழகம் அமைதி பூங்கா என சொல்லிவிட்டு, பேரணி நடத்த அனுமதி கேட்டால் மட்டுமே சட்டம் - ஒழுங்கு பிரச்சினை என்கிறார்கள்" என குற்றம்சாட்டினார்.

இன்னொரு மூத்த வழக்கறிஞரான என்.எல்.ராஜா ஆஜராகி, "அனுமதி வழங்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, “மற்ற இடங்களில் ஏன் அனுமதி வழங்கவில்லை?” என காவல் துறையிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க காவல் துறை தயாராக உள்ளது. ஆனால், எஞ்சியுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது. மேலும், பல இடங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளது.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சிகள் மனித சங்கிலிக்கு அனுமதி கோரியதால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. ஆனால், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கேட்பதால் அவர்களுக்கு வழங்க முடியாது. உள் அரங்கு கூட்டம் என்றால் அனுமதி வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆர்எஸ்எஸ் தரப்பினர் மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்" என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “கோவையை தவிர்த்த மற்ற இடங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கலாமே?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த காவல் துறை தரப்பு வழக்கறிஞர், "மக்களின் பாதுகாப்பே முக்கியம். ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகளுக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்களது உயிரை துச்சமென நினைத்து, நேரத்தை தியாகம் செய்து தகவல்களை சேகரிக்கும் உளவுத் துறையினர் தரும் தகவல்களை எப்படி ஊகம் அல்லது அனுமானம் என சொல்ல முடியும்?” என கேள்வி எழுப்பி, உளவுத் துறை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில், "உள்ளரங்கு கூட்டமாக நடத்த முடியாது. பேரணிக்குதான் காவல் துறை அனுமதி வழங்க வேண்டும்" என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, "உளவுத் துறை அறிக்கையை பார்த்த பிறகு 47 இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (நவ.4) ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்