ஊரக வேலைவாய்ப்புத் திட்ட வல்லுநர் குழு பரிந்துரைகளை ஏற்றுக் கொள்க: ராமதாஸ்  

By செய்திப்பிரிவு

சென்னை: "வேளாண்மை உள்ளிட்ட பிற பணிகளுக்கும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு வசதியாக அத்திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்ற வல்லுநர் குழு பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி, உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக, அத்திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்று வல்லுநர் குழு பரிந்துரைத்திருக்கிறது. மக்களுக்கான திட்டத்தை, மக்களின் விருப்பப்படி செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு வல்லுநர் குழு அளித்திருக்கும் பரிந்துரை வரவேற்கத்தக்கது.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை மதிப்பிடுவதற்காக அமைக்கப்பட்ட ஆறாவது பொது சீராய்வு இயக்கத்தின் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வகுத்துள்ள வழிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் பணிகள், பல நேரங்களில், உள்ளூர் மக்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் இல்லை என்று தெரிவித்துள்ள அந்த இயக்கத்தின் அறிக்கை, இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் ஊராட்சி அமைப்புகள், அவற்றின் தேவைகள் என்ன? என்பதை பட்டியலிட்டு செயல்படுத்தும் வகையில் வேலை உறுதித் திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும்; அத்திட்டத்தின்படி ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஆண்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விவரத்தையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும் அரசுக்கு வழிகாட்டியிருக்கிறது.

ஒரே அளவில் தைக்கப்படும் ஆடைகள் எவ்வாறு அனைவருக்கும் பொருந்தாதோ, அதேபோல், ஒரே இடத்தில் வகுக்கப்படும் திட்டம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொருந்தாது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் அப்படிப்பட்டது தான். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உழவுக்கு போதிய பணியாளர்கள் கிடைக்காத நிலையில், இத்திட்டத்தை விவசாயத்திற்கும் நீட்டிக்கலாம் என்று தமிழ்நாடு அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் நினைத்தாலும் கூட, அதை விதிகள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையை மாற்றி உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுத்தும் வகையில், இத்திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இப்போது அதையே வல்லுநர் குழுவும் பரிந்துரைத்திருக்கிறது. இது இந்தத் திட்டத்திற்கு திருப்புமுனை ஆகும்.

வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஊரக வேலைத் திட்ட பணியாளர்களை இனி விவசாயம் சார்ந்த பணிகளிலும் ஈடுபடுத்த முடியும். அதன் மூலம் வேளாண்மை சார்ந்த பணிகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்ற நிலை மாறும். இது வேளாண் தொழிலில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அதேபோல், அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் இந்தத் திட்டத்தின் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ள முடியும். இதன்மூலம் பணியாளர்களுக்கு அதிக நாட்கள் வேலைவாய்ப்பையும், அதிக ஊதியத்தையும் வழங்க முடியும். அதுமட்டுமின்றி, அரசு திட்டங்களுக்கான செலவுகளையும் குறைக்க முடியும். அந்த வகையில் இந்த பரிந்துரை சிறப்பானது.

வல்லுநர் குழு அளித்துள்ள மற்றொரு பரிந்துரை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி வழங்கப்படும் ஊதியம், பல்வேறு மாநிலங்களில் பிற பணிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட மிகவும் குறைவாக உள்ளது என்பதாகும். எடுத்துக்காட்டாக குஜராத் மாநிலத்தில் வேளாண் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.324 வழங்கப்படுகிறது; ஆனால், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.229 மட்டுமே ஊதியமாக தரப்படுகிறது. ஊரக வேலை உறுதித் திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவது தான். வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதை விட குறைந்த ஊதியம் வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்று கூறியுள்ள வல்லுநர் குழு, உள்ளூர் சூழலுக்கு ஏற்ற வகையில் ஊதியத்தை உயர்த்தி நிர்ணயிக்க அனுமதிக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இவை அனைத்தையும் கடந்து ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை உள்ளூர்மயமாக்குவதன் மூலம் கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்கும். ஊரக வேலை உறுதித் திட்டத்தின் இப்போதைய விதிகளின்படி, கிராம ஊராட்சிகள் மத்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ள பணிகளைச் செய்யும் முகவர்களாகவே செயல்படுகின்றன. ஆனால், இந்தத் திட்டம் உள்ளூர்மயமாக்கப் பட்டால், மக்களுக்கு தேவைப்படும் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் ஊராட்சிகளுக்கு வழங்கப் படும். மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ய கனவை நிறைவேற்றுவதற்கு இது பெருமளவில் உதவும்.

எனவே, வேளாண்மை உள்ளிட்ட பிற பணிகளுக்கும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு வசதியாக அத்திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்ற வல்லுநர் குழு பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம், பொதுமக்களுக்கும், சமூகத்திற்கும் நன்மைகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்