சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:
எந்தவிதப் பேரிடரையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதை அறிந்து உங்களை மனதாரப் பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குநமக்கெல்லாம் மிகப்பெரிய சவாலாக அமைந்திருந்தது.
இதேபோல, மற்ற சில மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மீண்டும் அதேபோன்ற நிலை எங்கும் ஏற்படாமல் இருக்க, திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் அளித்த ஆலோசனைப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
» நிர்வாக நடுவர்களுக்கு குற்றவியல் சட்டப்பயிற்சி - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பருவமழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறையும் மழைநீர்தேங்காமல், வெள்ளம் ஏற்படாமல் கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டியது மாவட்ட நிர்வாகங்களின் கடமையாகும். பேரிடர் காலங்களில், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய முக்கிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது.
மண்டலக் குழுக்கள்: பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து கண்காணிக்க பல்துறை மண்டல குழுக்கள் அமைக்க வேண்டும். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள், கைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு, நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைப்பதுடன், அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். மக்களை வெளியேற்றும்போது முதியோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு முன்னுரிமை தரவேண்டும்.
பழுதடைந்த, பலவீனமான சுற்றுச்சுவர்களை அப்புறப்படுத்துவதுடன், வயல்வெளிகளில் மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு தடையில்லா குடிநீர், பால், மின்சாரம் வழங்குவதுடன், சமுதாய உணவுக்கூடம், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
முன்னெச்சரிக்கை அறிவிப்பு: கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் முன்னதாகவே அளிக்கப்பட வேண்டும். மாநகரம், நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் மற்றும் அது தொடர்பான வழிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க வேண்டும். மழைக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், வருவாய், பொதுப்பணி, தீயணைப்பு, வேளாண் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
சிறு தவறு நேரிட்டாலும் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும். அதேநேரம் சிறு உதவி என்றாலும், அது பெரிய நல்ல பெயரையும் ஏற்படுத்தும் என்பதை யாரும் மறக்க வேண்டாம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தாமதமின்றி உதவிகள்: கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களின் கருத்துகளை கேட்டு, பல்வேறு அறிவுறுத்தல்களையும் முதல்வர் வழங்கியுள்ளார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளுக்கு தாமதமின்றி மீட்புப் படையை அனுப்ப வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துதுறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
மழைக் காலத்தில் இடி, மின்னல் தாக்குதலால் உயிரிழப்புஏற்படுவதை தவிர்க்க, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நிலச்சரிவு, மண்சரிவு, பாறை சரிவுகள் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து கவனம் செலுத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் ஒத்துழைப்பு தேவை: ‘‘உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் ‘1070’ கட்டணமில்லா தொலைபேசி சேவையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தொற்றுநோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். காய்ச்சிய குடிநீரையே குடிக்க வேண்டும்.
மின் சாதனங்களை கவனமாகக் கையாள வேண்டும். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலை மீனவர்கள் கடைபிடிக்க வேண்டும்’’ என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில், துரைமுருகன், கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் அனைத்து துறை செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago