தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகளின் கைகளில் ஒப்படைக்கப்படுவது இது முதல்முறை அல்ல. 1980-ம் ஆண்டு பஞ்சாயத்துத் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. அதிகாரம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 1986-ம் ஆண்டு வரை இது தொடர்ந்தது. 1986-ல் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டாலும் பொம்மை அரசுகளாகவே அவை இருந்தன. 1993-க்கு முந்தைய காலகட்டம் வேறு; அதன் பின்பான காலகட்டம் வேறு. 73, 74-வது அரசியல் சாசனச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படாத காலகட்டம் அது. அன்று அதிகாரிகள் கையில் ஒப்படைக்கப்பட்டதற்கு கேள்விகள் கேட்க அதிகாரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. ஆனாலும், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு தொடர்பாக அரசிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. இந்த நிலையில்தான் உள்ளாட்சிகளுக்காக வேலை பார்க்கும் அமைப்பினர் சென்னையில் ஒன்றுகூடி ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். சுமார் 60 பேர் மட்டுமே கலந்துகொண்டாலும் தமிழகத்தை பொறுத்தமட்டில் இதுவும் ஒரு வரலாறே.
உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட தமிழகத்தின் முன் மாதிரி கிராமத் தலைவர்கள் எழுப்பிய கேள்வி கள் ஒவ்வொன்றும் முகத்தில் அறை கின்றன. ‘ஒற்றை மனுஷி... ஒன்பது குளங்கள்... சாதித்த பெண் தலைவர்!’ என்கிற கட்டுரை எழுதியிருந்தோம் இல்லையா. திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் பெண் பஞ்சாயத்துத் தலைவரான அவர் எழுப்பிய கேள்வி முக்கியமானது. “நேற்று காலை என் வீட்டு வாசலில் அரசு அலுவலர் வந்து நிற்கிறார். என்ன என்று கேட்டபோது குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய பணம் வேண்டும் என்றார். 200 ரூபாய் செலவு செய்து ப்ளீச்சிங் பவுடர் வாங்க அந்த சிறப்பு அலுவலருக்கு மனம் இல்லை; அல்லது அவருக்கு அதிகாரம் இல்லை எனும்போது மற்ற பெரிய பணிகள் எல்லாம் எப்படி நடக்கும்?” என்றார் அவர்.
குத்தம்பாக்கம் இளங்கோ, “ஹரியானா மாநிலத்தில் இதேபோன்ற ஒரு நிலை ஏற்பட்டது. அப்போது, ‘பஞ்சாயத்துக்களுக்கு மக்கள் அதிகாரத்தைத் தவிர வேறு மாற்றே கிடையாது. எப்படி அவற்றை நீங்கள் சிறப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம்’ என்று கடுமையாக கண்டனம் தெரிவித்தது. இதுபோன்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இதே கருத்தை தெரிவித்துள்ளது.” என்றார். குறிப்பாக பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சிலர் எழுப்பியக் கேள்வி தமிழகத்தின் இன்றைய சூழலில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
என்னாகுமோ... ஏதாகுமோ?
“சில மாதங்களுக்கு முன்பு வரை தமிழக அரசு எடுத்த சில முடிவு கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உள்ளாட்சியில் பெண் களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார்களோ என்று அச்சமாக உள்ளது’’ என்றார்கள். உண்மைதானே!
உண்ணாவிரதத்தை ஒருங் கிணைத்த நந்தகுமாரிடம் பேசினோம். “சுதந்திரம் பெற்று சுமார் 46 ஆண்டுகள் கழித்தே 73-வது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகள் சுயாட்சி அமைப்புகளாக செயல்படுவதற்கு வாய்ப்பளிக்கும் இந்தச் சட்டத் திருத்தம் பல தடைகளைத் தாண்டி நடைமுறைக்கு வந்தது. மகளிருக்கும் பட்டியல் பிரிவினருக்கும் இடஒதுக்கீடு, உள்ளாட்சிகளுக்கு நிதி வழங்க தனியாக நிதி ஆணையம், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில தேர்தல் ஆணையங்கள், மக்கள் நேரடியாக பங்கேற்கும் கிராம சபை என பல கூறுகளைக் கொண்டது 73-வது சட்டத் திருத்தம். இதில் மிக முக்கியமானவை கிராம சபைகள். காரணம், நம் இந்திய ஜனநாயகத்தை வேறொரு பரிணாமத்துக்குக் கொண்டு சென்றன கிராம சபைகள். பிரதிநிதித்துவ ஜனநாயகமாக இருந்த நமது ஜனநாயகத்தை பங்கேற்பு ஜனநாயகமாக மாற்றியவை இவை. தங்கள் பிரதிநிதிக்காக வாக்களித்துவிட்ட பிறகும் மக்கள் நேரடியாக தங்கள் பகுதி நிர்வாகத்தில் பங்கெடுக்க வாய்ப்பளிக்கிறது கிராம சபைகள்.
பிலாச்சிமடாவில் கோகோ கோலா நிறுவனம் நீர்நிலைகளை சீரழித்தபோது போராடி தடுத்தது கிராம சபை. சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் வனப் பகுதிகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் வேட்டையாடியபோது நீதிமன்றங்கள் மூலம் தடுத்து நிறுத்தின கிராம சபைகள். கோவாவில் கடலோர கிராமம் ஒன்றில் தொடங்கப்பட்ட தனியார் நைலான் நிறுவனத்தின் கழிவுகள் கடலில் விடப்பட்டன. மீன்கள் செத்து மிதந்தன. பிரச்சினையை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டுச் சென்றது கிராம சபை. ‘நாட்டில் கிராம சபைகளின் பங்கு என்ன? அரசியல் சாசனம் மூலம் அவற்றுக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் செயல்பாட்டில் இருக்கிறதா?’ என்று அன்றைய அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜிடம் கேள்வி எழுப்பினார்கள் நீதிபதிகள். பிரச்சினையில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலையிட்டார். இறுதியாக நீதிமன்றம், ‘மேல் அவை, கீழ் அவை ஆகியவை எப்படியோ அப்படிதான் கிராம சபைகளும். அவற்றின் அதிகாரத்தை மாற்றவோ, குறைக்கவோ முடியாது. உடனடியாக அந்த கிராமத்தில் இருந்து பன்னாட்டு நிறுவனம் வெளியேற வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். தேசிய அளவில் இப்படி பல முன்னுதாரணங்களை சொல்லலாம்.
நிலைமை இன்னமும் மாறும்
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட் டம், குத்தம்பாக்கம் கிராமப் பஞ்சா யத்து ஓர் உதாரணம். அங்கு சென்னை யின் கழிவுகளைக் கொட்ட மாநில அரசு முயன்றது. அது கிராம சபை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. ஓடந் துறையில் பஞ்சாயத்தே காற்றாலை மின்சாரம் தயாரித்து மின்வாரியத் துக்கு விற்பனை செய்கிறது. அதிகத் தூரில் சமூக சமத்துவம் நிலைநிறுத்தப் பட்டுள்ளது. புதிய நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேசமயம் தமிழகத்தின் கிராமப் பஞ்சாயத்துக்கள் அனைத்துமே முன்மாதிரி கிராமங்கள் இல்லைதான். நிறைய பின்னடைவுகள் இருக்கின்றன. ஆனாலும், பஞ்சாயத்து ராஜ்ஜியம் அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த 20 ஆண்டுகளில் நிலைமை மேம்பட்டிருக்கிறது. பட்டியல் இனத் தவர் முன்பைவிட முன்னேறியிருக் கிறார்கள். அவர்கள் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். கேள்வி கேட்கிறார்கள். நிலைமை இன்னமும் மாறும். அதேபோல பெரும்பாலான கிராமங்களில் குடிசைகள் இல்லை. திறந்தவெளியில் மலம் கழிப்பது பெரும்பாலும் குறைந்திருக்கிறது. தனி நபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டிருக் கின்றன. குடிநீர் தேவை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முன்பை விட நல்ல நிலையில் இருக்கின்றன. இவை எல்லாம் பஞ்சாயத்து ராஜ்ஜியம் வந்த பின்பு ஏற்பட்ட மாற்றங்கள்.
ஆனால், மீண்டும் அந்த பஞ்சா யத்து ராஜ்ஜியத்துக்கு ஆபத்து வந்து விட்டதோ என்று தோன்றுகிறது. மக்களின் அதிகாரம் கேள்விக்குறி யாகியுள்ளது. ஓர் ஊருக்கே சம்பந்தம் இல்லாத ஓர் அலுவலர் எவ்வாறு கிராம சபையை நடத்துவார்? அந்த ஊரின் சூழல் அவருக்கு எப்படி தெரியும்? அப்படியே நடத்தினாலும் ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரால் எத்தனை பஞ்சாயத்துகளில் மக்கள் பிரச்சினையை கிராம சபையில் விவாதித்து முடிவெடுக்கமுடியும்? உண்மையில் இப்போது கிராம சபைகளை நடத்தமுடியுமா ? அதன் தீர்மானங்கள் மதிக்கப்படுமா?
குறிப்பாக வனப் பகுதிகளை ஆபத்து சூழ்ந்துள்ளது. ஏற்கெனவே நமது வனப் பகுதிகளை பன்னாட்டு நிறுவனங்கள் குறிவைத்துக் காத்துள்ளன. வனப் பகுதியில் உள்ள மக்களுக்கு கிராம சபையில் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வன உரிமைச் சட்டம் 2006-ன்படி கிராம சபையின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே வனப் பகுதியில் உள்ள நிலங்களை வேறு திட்டங்களுக்காக மாற்றம் செய்ய முடியும். வனப் பகுதியில் உள்ள மக்களின் ஒப்புதலை கிராம சபை மூலம் பெறுவது அவசியம், கட்டாயம். பெருநிறுவனங்களிடம் இருந்து இந்த வனங்களை காத்து வருகிறது இந்த கிராம சபைகள். தற்போது இதன் நிலை என்னவாகும்? பெருநிறுவனங்கள் அதிகாரிகளை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு காரியத்தை சாதித்துக்கொள்ளாதா? இது இப்போது வெளியே தெரியாது. ஒரு ஆண்டு கழித்து திடீரென வனத்தை அழித்து திட்டத்தை ஆரம்பிப்பார்கள். கேள்வி கேட்கும்போது அதிகாரிகள் கையில் அதிகாரம் இருந்தபோது வாங்கிய அனுமதியைக் காட்டுவார் கள்.
பஞ்சாயத்து அதிகாரம் என்பது மக்களின் அதிகாரம். அதை அதிகாரி களுக்கு வழங்கியிருப்பது, எளிய மக் களுக்கு மட்டுமல்ல; அவர்களுக்கு அதிகாரமளித்த நமது சட்டத்துக்கே இழைக்கப்படும் அநீதியல்லவா? நண்பர்களே... என்ன செய்யப் போகிறோம் நாம்?”
- பயணம் தொடரும்...
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago