சிறுத்தை உயிரிழந்த வழக்கு: வனத்துறையினர் விசாரணைக்கு ரவீந்திரநாத் ஆஜராகவில்லை

By என்.கணேஷ்ராஜ்

தேனி: தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த வழக்கில் விளக்கம் கேட்க வனத் துறையினர், அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில், வனத்துறையினரிடம் ரவீந்திர நாத்தின் வழக்கறிஞர்கள் இன்று விளக்கக் கடிதத்தை அளித்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகே சொர்க்கவனம் பகுதியில் கடந்த செப்.27-ம் தேதி சிறுத்தை ஒன்று மின்வேலியில் சிக்கி இருந்தது. அதை வனத்துறையினர் மீட்க முயன்றபோது உதவி வனப் பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனை கடித்து விட்டு தப்பியோடியது. இந்நிலையில், மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திர நாத் தோட்டத்தில் மறுநாள் இந்த சிறுத்தை வாயில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்து கிடந்தது. வனத் துறையினர் சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்து வனப் பகுதியில் புதைத்தனர்.

இது குறித்து வன உயிரின ஆர்வலர்கள் சந்தேகங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து எம்.பி.தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்து ஆடு வளர்த்த அலெக்ஸ்பாண்டியனை வனத்துறையினர் கைது செய்தனர்.

கால்நடை வளர்ப்போர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் எம்.பி. தோட்டத்து மேலாளர்கள் ராஜவேல், தங்கவேல் ஆகியோரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் அலெக்ஸ்பாண்டியன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். எம்.பி.ரவீந்திரநாத் மீது இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் எம்.பி. ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், உதவி வனப் பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இவருக்குப் பதிலாக ஷர்மிலி என்பவர் பொறுப்பேற்றார்.

இன்று ரவீந்திரநாத் எம்.பி விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில், அவர் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் நேரில் வந்து வனத்துறையினரிடம் விளக்கக் கடிதத்தை அளித்தனர்.

வழக்கறிஞர்கள் சுப்புரத்தினம், ராஜலட்சுமி, பிரகாஷ் குமார், ரத்னகுமார் உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவுடன் வந்த வழக்கறிஞர் சந்திரசேகரன் தேனி வனச்சரகர் அலுவலகத்தில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் ஷர்மிலியிடம் விளக்க கடிதத்தை வழங்கினார்.‌

இது குறித்து ரவீந்திரநாத் எம்.பி.யின் வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறுகையில், “புதுடெல்லியில் நீர்வளத் துறை, நதி மேம்பாட்டு கங்கை புத்துயிர் மற்றும் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் 7-வது இந்திய நீர்வார விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திர நாத் புதுடெல்லி சென்றுள்ளார். அதனால் அவரால் ஆஜராக முடியவில்லை. சிறுத்தை உயிரிழப்புக்கும் ரவீந்திரநாத் எம்.பி.க்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே, அவரை விசாரணையில் இருந்து வனத்துறையினர் விடுவிக்க வேண்டும். மேலும், சிறுத்தை மரணத்தில் உண்மைக் குற்றவாளிகளை வனத்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்