பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழாவில் காலணிகளை பாதுகாக்க போலீஸாருக்கு பணி ஒதுக்கீடு?

By செய்திப்பிரிவு

மதுரை/சேலம்: பசும்பொன் குரு பூஜைக்கு வருவோரின் காலணிகளை பாதுகாக்கும் பணியில் கிராம உதவியாளர்கள் மற்றும் போலீஸாருக்கு பணி ஒதுக்கீடு செய்து தாசில்தார் பிறப்பித்த உத்தரவு நகல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இது காவல் துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்.28 முதல் 30 வரை முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வதுகுரு பூஜை அரசு விழாவாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

குரு பூஜை விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. இதில் கமுதி தாசில்தார் பிறப்பித்த உத்தரவு பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. விழாவுக்கு வருகை தரும் முக்கிய நபர்களின் காலணிகளை பாதுகாக்க பணி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நகலில் கமுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவருக்கும், கிராம உதவியாளர்கள், பேரூராட்சிப் பணியாளர்கள் எந்தெந்த தேதியில், யார் யார் காலணிகளை பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு நகல் கடந்த 2 தினங்களாக தமிழகம் முழுவதும் காவல் துறையினரின் வாட்ஸ்-அப் குழு மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. காலணியை பாதுகாக்கும் உத்தரவு நகலை கண்டு போலீஸார் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதுகுறித்து சேலத்தை சேர்ந்த போலீஸார் கூறுகையில், ‘அரசு விழாக்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் காவலர்களை, காலணிகளையும் சேர்த்துபாதுகாக்க வேண்டும் என பணிஒதுக்கியிருப்பது, நாங்கள் அணிந்துள்ள சீருடைக்கு பங்கத்தை விளைவிப்பதாகவே கருதுகிறோம்’ என்றனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டசெய்திக் குறிப்பில், பசும்பொன்னில் முக்கிய பிரமுகர்களின் காலணிகளை பாதுகாக்க காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், வருவாய் மற்றும் பேரூராட்சி நிர்வாகப் பணியாளர்கள் பணிமேற்கொண்டதாக தவறான செய்தி வெளிவந்துள்ளது. இது முற்றிலும் தவறாகும் என்று கூறியுள்ளார்.

ராமநாதபுரம் எஸ்.பி. தங்கத்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: விழாவுக்கு வருவோரின் காலணிகளை பாதுகாக்க கூடம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. கமுதி வட்டாட்சியரின் செயல்முறை ஆணையில் கூட்ட நெரிசலை முறைப்படுத்தும் பணிக்காக ராமநாதபுரம் மாவட்ட காவலர்- எண் 1480 மணிகண்டன், பயிற்சிக் காவலர் எண்-43 சதீஸ்குமார் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. பின்னர் நடைமுறை சிக்கலால் மேற்படி காலணிகள் பாதுகாக்கும் கூடம் அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது. காவலர்களில் மணிகண்டன் முஸ்டக்குறிச்சி தேவர் சிலை பாதுகாப்புப் பணியிலும், சதீஸ்குமார் கமுதி காவல் நிலையப்பணியிலும் இருந்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE