சென்னை: “கமிஷன் கிடைக்காத காரணத்தால் பயிர் காப்பீட்டு தொகையை வாங்கி தருவதில் திமுக மெத்தனமாக பணியாற்றுகிறாதா?” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் கடந்த ஆண்டு பெய்த மழையினால் நெற்பயிர்கள் பெருமளவு பாதிப்படைந்தன. இது குறித்து வேளாண் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று சென்ற ஆண்டு நான் இந்த ஆளும் திமுக அரசை பலமுறை வலியுறுத்தியிருந்தேன்.
அதிமுக அரசு ஆட்சிபுரிந்தபோது, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 2017-2018 முதல் நான்கு ஆண்டு ஆட்சி காலத்தில் நிவாரணத் தொகையாக சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட விவசாயப் பெருமக்களுக்கு பெற்றுத் தந்தது. அதன்படி, அதிகாரிகள் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடி கள ஆய்வு செய்து, பாதிப்புகளுக்கு ஏற்ப ஏக்கருக்கு குறைந்தபட்சமாக ரூ.7,000 முதல் அதிகபட்சமாக பாதிப்புகளுக்கு ஏற்ப பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் பெற்றுத் தரப்பட்டது. அதேபோல், வேளாண் மற்றும் தோட்டப் பயிர்களுக்கும் பாதிப்புகளுக்கு ஏற்ப பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் இழப்பீடு பெற்றுத்தரப்பட்டது.
ஆனால், சில நாட்களுக்கு முன்பு, இந்த திமுக அரசு 2021-2022-ம் ஆண்டுக்கு, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு ரூ.480 கோடியை பெற்றுத் தந்ததாக விளம்பரப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை துவக்கியது. அதன்படி, பாதிக்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு குறைந்தபட்சமாக வெறும் ரூ.250 மட்டுமே வழங்கப்பட்டதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். மேலும், பல கிராமங்களுக்கு காப்பீட்டு நிவாரணம் பெற்றுத்தரப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
» “மன்னிப்பு கேட்பது என் ரத்தத்திலேயே கிடையாது” - அண்ணாமலை ஆவேசம்
» மருத்துவம், சமூக நலத் துறைக்கு இடமில்லை: அரைகுறையாக உள்ளதா தமிழக காலநிலை மாற்ற நிர்வாகக் குழு?
உதாரணமாக, மன்னார்குடி வருவாய் வட்டத்தில் மட்டும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 40 கிராமங்கள் உட்பட திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் ஒரு ரூபாய் கூட பயிர் காப்பீட்டு நிவாரணம் பெற்றுத்தரப்படவில்லை என்றும், குறிப்பாக இந்த அரசின் முதல்வர் ஆய்வு மேற்கொண்ட கிராமங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக்கூட பயிர் காப்பீட்டுத் தொகை பெற்றுத்தரப்படவில்லை என்றும் விவசாயிகளும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் கடும் அதிருப்தியும், வேதனையும் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக வேளாண் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான கடலூரில், நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு வெறும் ரூ.250/- மட்டுமே பயிர் காப்பீடாக பெற்றுத்தரப்பட்டதாகவும், எனவே, வேளாண் துறை அமைச்சர் முன்பே ஆர்ப்பட்டம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
எனது தலைமையிலான அதிமுக அரசு, தனது நான்காண்டு ஆட்சி காலத்தில் ஏக்கர் ஒன்றுக்கு பெற்றுத் தந்த குறைந்தபட்ச நிவாரணமான ரூ.7000 எங்கே? இந்த திமுக அரசு பெற்றுத் தந்த ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.250 எங்கே? இந்த திமுக அரசின் நிர்வாக குளறுபடிகள் காரணமாக தமிழக விவசாயிகள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வே எடுத்துக்காட்டாகும்.
மேலும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த பயிர் காப்பீட்டு நிவாரணத் தொகையைக் கூட இந்த அரசு பெற்றுத்தரவில்லை. உதாரணமாக, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.94.56 கோடி, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரூ.13.52 கோடி, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரூ.16.16 கோடி என்று இழப்பீடு பெற்றுத் தந்த இந்த அரசு, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டின் மூலம் பெற்ற இழப்பீட்டுத் தொகை வெறும் 36 லட்சம் மட்டுமே. அப்படியானால், தஞ்சையில் மழையே பெய்யவில்லையா? பயிர்கள் சேதமடையவில்லையா? என்பதை இந்த அரசுதான் விளக்க வேண்டும். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன.
‘எங்கும் ஊழல், எதிலும் ஊழல்’ என்று செயல்படும் இந்த திமுக அரசு, விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் பெற்றுத் தருவதில் தங்களுக்கு எந்தவிதமான கமிஷனும் கிடைக்காது என்பதால், விவசாயப் பெருமக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தரும் உயரிய நோக்கில் மெத்தனமாக பணியாற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது எனவே, கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளை நீக்கி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருவர்கூட விடுபடாமல், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை காப்பீட்டுத் திட்டம் மூலம் பெற்றுத்தர வேண்டும் என்று இந்த திமுக அரசைவலியுறுத்துகிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago