புதுடெல்லி: பொது சிவில் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை சட்டத்துறை நிலைக் குழு, பொது மக்களிடம் கருத்து கேட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசும் குழு அமைத்துள்ளது அவசர நடவடிக்கையா அல்லது அரசியல் தந்திரமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களவை தேர்தல்களின் போது பாஜக தேர்தல் அறிக்கைகளில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவை இடம்பெற்றன. இவற்றில் பொது சிவில் சட்டம் மட்டுமே தற்போது பாக்கி உள்ளது. இதையும் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு அமல்படுத்த அல்லது அதற்கான முயற்சிகளில் மத்தியில் உள்ள பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாஜக ஆதரவு வழக்கறிஞர் அஸ்வின் குமார் உபாத்யா, 10-க்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்துள்ளார். இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.
மத்திய அரசும், சட்டத் துறையிடம் கருத்து கேட்டது. இதற்காக ஒரு குழுஅமைத்து ஆலோசித்த சட்டத் துறை,பொது சிவில் சட்டத்தை அமலாக்குவதற்கு விரிவான ஆலோசனை நடத்துவது அவசியம் என்று தெரிவித்தது. இதையே சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திலும் தனது நிலைப்பாடாக மத்திய அரசு தெரிவித்தது.
கடந்த அக்டோபர் 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த பதிலில், ‘‘மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்து பொது மக்களுக்கான சட்டங்களும், சட்ட திருத்தங்களும் அமலாக்குவது அரசின் கொள்கை. ஒரு குறிப்பிட்ட சட்டம் இயற்றும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எனவே, பொது சிவில் சட்டத்தை அமலாக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தது.
அதேநேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி முடிவு வெளியாகும் வரை மத்திய அரசு பொறுத்திருக்கவில்லை. பொது சிவில் சட்டத்தை அமலாக்குவதற்கான முயற்சியிலும் மத்திய அரசு தீவிரம் காட்டத் தொடங்கி விட்டது. இதன் ஒரு முயற்சியாக, நாடாளுமன்ற மாநிலங்களவை நிலைக் குழுவின் அறிவிப்பு கடந்த அக்டோபர் 10-ம் தேதி வெளியானது. இக்குழுவுக்கு, பிஹாரின் முன்னாள் துணை முதல்வரும் பாஜகமாநிலங்களவை எம்.பி.யுமான சுசில்குமார் மோடி தலைவராக உள்ளார்.
இவரது தலைமையில், மாநிலங்களவையின் தனிச் சட்டம், பொது மக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறை மீதான நிலைக் குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதில், தனிச்சட்டங்கள் குறித்து ஆலோசித்து கருத்துக்களை மத்திய அரசுக்கு அளிக்க, சில அம்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. இதற்காக, தனிச் சட்டம் தொடர்பான பரிந்துரைகளை ஆதாரங்களுடன் நிலைக் குழுவுக்கு அனுப்ப இ மெயில் முகவரியையும் வெளியிட்டிருந்தது. தவிர நேரிலும் வந்து வாய்மொழியாக கருத்துகளை தெரிவிக்கவும் நாடாளுமன்ற அதிகாரியின் முகவரியும் அளித்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அளிக்கப்படும் பரிந்துரை அறிக்கையில், நிலைக் குழு எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் குறிப்பிட்டுள்ளது. பல்வேறு மதத்தினர் மற்றும் பொதுநல அமைப்பினர் கருத்துகள் தெரிவிக்க நாளை நவம்பர் 1-ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில், சுசில்குமார் மோடி தலைமையிலான சட்டத் துறை நிலைக் குழு கூறியிருப்பதாவது:
நாட்டின் பல்வேறு மதங்கள் மற்றும்சமூகங்களின் பழக்க வழக்கங்கள் தனிச்சட்டங்களாக மாறி கடைபிடிக்கப்படுகின்றன. இதற்கானப் பரிந்துரைகள் பின்வரும் அடிப்படையில் இருக்க வேண்டும். அவை: இந்திய அரசியலமைப்பு சட்டத்துடன் மாறுபடும் தனிச் சட்டங்கள் குறித்த விவரம், ஆண், பெண் சம உரிமைக்கு ஏற்றவாறு தனிச் சட்டத்தில் மாற்றம், மதங்களின் பழக்க வழக்கங்களை நியாயப்படுத்தப்படும் சமூக விரோத நடவடிக்கைகள், சிறப்பு திருமண சட்டம் 1954 உள்ளிட்டவற்றை சீர்திருத்துவது. இரு வேறு சாதி மற்றும்மதம் மாறி மணம் புரிந்த தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, தனிச்சட்டங்களில் செய்யப்படும் சீர்திருத்தங்களை பொது மக்களின் புரிதலுக்கு ஏற்ப கொண்டு செல்வது, அரசியல் சட்டத்தின் 6-வது அட்டவணைப்படி குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்குகளின்படி தனிச்சட்டம் மற்றும் குடும்ப சட்டங்களை சீர்திருத்துவது, நாட்டின் தனிச்சட்டங்களை சர்வதேச அளவில் முறைப்படுத்துவது ஆகியவற்றில் கருத்துகள் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், நாட்டின் ஏற்றத்தாழ்வுகளை களையவும் முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு நிலைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நிலைக் குழு அறிவிப்பின்படி பரிந்துரை அளிக்க, தமிழக அரசின் சட்டத் துறையும் கடந்தஅக்டோபர் 28-ம் தேதி ஒரு குழுவைஅமைத்துள்ளது. இதற்கு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிஎம்.சத்தியநாராயணா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக, மூத்த வழக்கறிஞர்கள் ஈ.ஓம்.பிரகாஷ்,ஈ.பிரபு, ஆர்.அப்துல் முபீன் ஆகியோர்இடம் பெற்றுள்ளனர். இக்குழுவுக்குகாலக் கெடு நிர்ணயிக்காவிட்டாலும்,அறிக்கையை விரைந்து அளிக்க தமிழக சட்டத் துறை செயலர் பி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக தமிழக அரசு ஒரு குழு அமைத்தது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில், நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் அல்லது அதில் திருத்தங்கள் செய்யப்படும் போது மத்திய அரசு சார்பில் அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்துகள் கேட்கப்படும். ஆனால், அதுபோன்ற சூழல் இன்னும் வரவில்லை. அப்படி இருக்கும் போது, மாநிலங்களவை சட்டத் துறை நிலைக் குழு வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழக அரசும் குழு அமைத்துள்ளது. இதுபோல், வேறு எந்த மாநிலமும் குழு அமைத்ததாக தெரியவில்லை.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சிறுபான்மை சமூகங்களின் மூத்த தலைவர்கள் கூறும்போது, ‘‘பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு திமுக அரசு அடிபணிந்து செல்வதாக புகார் உள்ளது. எனவே, தனிச் சட்டத்தில் கருத்துகளை பரிந்துரைக்க அவசர நடவடிக்கையாக தமிழக அரசு குழு அமைக்க வேண்டிய அவசியம் என்ன? இக்குழுவிலும் பாஜக ஆதரவாளர் சிலர் இருப்பதாக தகவல்கள் உள்ளன. நிலைக் குழுவில் இந்துத்துவாவினரும் புகுந்து பொது சிவில் சட்டத்துக்கு ஏற்ற வகையில் கருத்துகள் கூறி அதை அரசு ஏற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், முன்கூட்டியே பரிந்துரைத்து, தனிச் சட்டத்தின் காப்பாளராக திமுக முயற்சிக்கலாம், இதற்காக அமைக்கப்பட்ட குழு,பாஜக.வை எதிர்கொள்ளும் அரசியல் தந்திரமா என்ற சந்தேகமும் உள்ளது’’ என்றனர்.
இதனிடையே, கடந்த மார்ச் மாதம்முடிந்த உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலின் போது, பொது சிவில் சட்டம்அமலாக்கப்படும் என பாஜக ஆளும் உத்தராகண்ட் அரசு அறிவித்தது. தற்போது வெற்றி பெற்ற பிறகு அதற்காக ஒரு குழுவும் அமைத்துள்ளது. இதையே பாஜக ஆளும் இமாச்சலப் பிரதேச அரசும் கடைபிடித்துள்ளது. தற்போது குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வரும் நிலையில் அங்குள்ள பாஜக அரசும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்காக குழு அமைத் துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் அல்லது அதில் திருத்தங்கள் செய்யப்படும் போது மத்திய அரசு சார்பில் அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்துகள் கேட்கப்படும். ஆனால், அதுபோன்ற சூழல் இன்னும் வரவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago