ஐஎஸ்ஐஎஸ் தொடர்புள்ள ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராதது ஏன்? - காவல்துறைக்கு அண்ணாமலை கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: ஐஎஸ்ஐஎஸ் தொடர்புள்ள ஜமேஷா முபினை தமிழக காவல்துறை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராதது ஏன் என்று தமிழக காவல்துறைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''நேற்று தமிழக காவல்துறை தலைமையகத்திலிருந்து ஒரு பத்திரிகை செய்தி வெளியானது. இது இந்நாள் தமிழக காவல்துறை டிஜிபியாகிய சைலேந்திர பாபுவின் ஒப்புதலோடுதான் வெளியிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு ஒரு முன்னாள் இந்திய காவல் பணி அதிகாரியாகவும் இந்நாள் தமிழக பாஜக மாநில தலைவராகவும் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

நான் பல கருத்துக்களைக் கூறி விசாரணையின் போக்கை திசைதிருப்ப முயல்வதாக, காவல்துறையின் அந்த பத்திரிகைச் செய்தி கூறுகிறது. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி என்கிற முறையில் ஆளும் அரசை கேள்வி கேட்பதும், உண்மையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் எங்களது பொறுப்பாக உணருகிறோம். இதை செய்யக் கூடாது என கூறுவதற்கு காவல்துறைக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. டிஜிபி சைலேந்திர பாபு ஒரு அதிகாரிதான். அவர் தன்னை ஒரு சர்வாதிகாரியாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.

விசாரணையின் போக்கை திசை திருப்பும் வகையில் நான் கருத்துக்கள் சொன்னதாக நீங்கள் கூறுகிறீர்கள். நேற்று நீங்கள் கொடுத்த பத்திரிகை செய்தியில் கூடநடந்தது தற்கொலைப்படை தாக்குதல் என்றோ, தீவிரவாத சதிச்செயல் என்றோ குறிப்பிடப்படவில்லை. இப்போது தான் சிலிண்டர் வெடிப்பிலிருந்து குண்டு வெடிப்புக்கு தமிழக காவல்துறை முன்னேறியுள்ளது. இதை தீவிரவாத தாக்குதல் என்றோ தற்கொலைப் படை தாக்குதல் என்றோ குறிப்பிடுவதற்கு பல மாதங்கள் ஆகலாம்.

கோவை தற்கொலைப்படை தாக்குதல் வழக்கின் போக்கை திசை திருப்பும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது என்ன கேட்டுவிட்டோம் என்பதை காவல்துறை தெளிவுபடுத்த வேண்டும். 18ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கியது பொதுவான சுற்றறிக்கை என்றும் இதில் கோவை தாக்குதல் பற்றி குறிப்பிட்ட எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் ஒரு சிறுபிள்ளைத்தனமான வாதத்தை பத்திரிகை செய்தி வாயிலாக தமிழக காவல்துறை தலைமை நேற்று முன்வைத்தது. மேலும் 18ஆம் தேதி சுற்றறிக்கை தங்களுக்கு 21ஆம் தேதி கிடைத்ததாகவும், அதற்கு பின் அதன்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உண்மை இல்லை. 21ஆம் தேதிக்கு முன்பே மத்திய உள்துறையின் சுற்றறிக்கை தமிழக காவல்துறைக்கு வந்துவிட்டது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மேலும், குறிப்பிட்ட எச்சரிக்கை என்பது அறிவாலய இளவரசர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படத்திற்கு எழுதப்படும் திரைக்கதை அல்ல. இது பொதுவாக வழங்கப்பட்ட சுற்றறிக்கையும் அல்ல. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை காவல்துறை மறுக்குமா?

21ஆம் தேதி அனைத்து காவல் ஆணையர்களுக்கும் காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து பகிரப்பட்ட அறிக்கையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி போதிய நடவடிக்கைகளை எடுங்கள் என்று குறிப்பிட்டதை மறுப்பீர்களா? Secret என்று குறிப்பிடப்பட்ட மத்திய அரசின் ஆவணம் திமுக செய்தித் தொடர்பாளருக்கு எப்படி போனது. இதை காவல்துறை தலைமை அவருக்கு வழங்கியதா அல்லது அரசு அதிகாரிகள் வழங்கினார்களா?

இதுபோன்ற நடவடிக்கைகள்தான் நடந்த தீவிரவாத தாக்குதலை திசை திருப்பும் முயற்சி. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அக்டோபர் மாதம் 23ஆம் தேதிக்கு முன்னரே ஜமேஷா முபின் பற்றிய தகவல்கள் காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறைக்கு காவல்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது. 96 நபர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் தனி நபராக திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் ஒரு பட்டியலை அந்த தனிப்பிரிவு கொடுத்துள்ளது. அதில் ஜமேஷா முபீன் 89ஆம் இடத்தில் உள்ளார்.

இந்த வருடம் ஜூலை மாதம் 19ஆம்தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டை விட்டுள்ளது தமிழக காவல்துறையின் உளவுத்துறை. இந்த வருடம் செப்டம்பர் மாதம் முடியும் வரையில் கோவை நகரத்திற்கான உளவுத்துறை அதிகாரி நியமிக்கப்படவில்லை. பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு தான் அவசர அவசரமாக இந்த பணியிடம் நிரப்பப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதான் தமிழகத்தில் உளவுத்துறை செயல்படும் லட்சணம்.

1998ஆம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்புக்குக் காரணம் தமிழக உளவுத்துறையின் மெத்தனப் போக்கே. சென்ற வாரம் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் சைலேந்திர பாபு ஆகியோர்தான் பொறுப்பு. மிதிவண்டி ஓட்டுவதில் காட்டும் ஆர்வத்தை தன் பணியில் காட்டியிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது. விசாரணையின் போக்கை திசைதிருப்புதல் என்று பத்திரிகை செய்தியில் குறிப்பிட்ட டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சில கேள்விகளை முன்வைக்கிறோம்.

1. பெரோஸ் இஸ்மாயில் என்பவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருந்ததால் இவர் ஐக்கிய அரபு நாட்டிலிருந்து கைது செய்ப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார். அதன் பின் இவர் கோவையில் தங்கியிருந்தார். இவர் தமிழக உளவுத்துறை அல்லது கோவை காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்திலிருந்து தப்பியது எப்படி?

2. 23ஆம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு காவல்துறை தனிப்பிரிவு கொடுத்த அறிக்கையின்படி நடைபெற்றது தற்கொலைப்படை தாக்குதல் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இதை காவல்துறை மற்றும் தமிழக அரசு அறிவிக்காமல் மவுனமாக இருப்பதன் காரணம் என்ன?

3. தமிழக ஆளுநர் இந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர் என்பது போன்று சமூக வலைதளங்களில் பரப்பி வரும் திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? வழக்கின் போக்கை ஆளும் கட்சியினர் திசைதிருப்பும் முயற்சியாக மேற்கொள்ளப்படும் பொய் பரப்புரைகளை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்