கார் சிலிண்டர் வெடிப்பு விசாரணையில் புதிய தகவல்: கோயில்களை தகர்க்க ஒத்திகை

By செய்திப்பிரிவு

கோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான விசாரணையில், முக்கியக் கோயில்களை தகர்க்க தனது கூட்டாளிகளுடன் ஜமேஷா முபின் ஒத்திகை பார்த்தது தெரியவந்துள்ளது.

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகில் கடந்த 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்ததில், காரை ஒட்டி வந்த ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார். இது தொடர்பாக முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான்(28) ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

முபினின் வீட்டில் சோதனை நடத்தியதில், ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ஆகிய 5 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு, சங்கேதக் குறியீடுகளுடன் எழுதி வைக்கப்பட்டிருந்த டைரி, வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் ரசாயனம், வயர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு, தனது உறவினர் அப்சர்கான், முகமது அசாருதீன் ஆகியோருடன், கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் தாக்குதல் நடத்துவதற்காக 2 முறை முபின் ஒத்திகை நடத்தியதை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

இவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் கோட்டைமேடு பகுதியில் இருந்து சங்கமேஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில், புலியகுளம் விநாயகர் கோயில் ஆகியவற்றுக்கு 2 முறை சென்று, ஒத்திகை பார்த்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.

பிரசித்தி பெற்ற இக்கோயில்களுக்கு பக்தர்கள் அதிகமானோர் வருவார்கள். கோயிலுக்கு பக்தர்கள் வரும் நேரம், வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை எங்கு நிறுத்துவது, வாகனம் வெடித்த பின்னர் எந்த வழியில் தப்பிச் செல்வது என்பது குறித்தெல்லாம் இவர்கள் ஆய்வு செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

கோயில்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதால், பின்னணியில் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. ஒத்திகை பார்த்த 3 கோயில்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் குண்டு வெடித்திருந்தால், அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.

இதற்கிடையே, காந்திபார்க், உக்கடம் பழைய மார்க்கெட் பகுதிகளில் இருந்து காஸ் சிலிண்டர் மற்றும் 3 டிரம்களை இவர்கள் வாங்கியிருப்பதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவையில் என்ஐஏ அலுவலகம்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட் டுள்ளது. டிஐஜி வந்தனா, கண்காணிப்பாளர் ஸ்ரீஜித் தலைமையிலான என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் கடந்த 23-ம் தேதி இரவு கோவைக்கு வந்தனர். தொடர்ந்து இவர்கள் கோவையில் முகாமிட்டு, மாநகர போலீஸாரிடம் பல்வேறு தகவல்களைப் பெற்றுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த இடத்திலும் ஆய்வு மேற்கொண்டனர். என்ஐஏ சார்பில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், விசாரணையில் கைதானவர்கள் தெரிவித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தொகுத்து, என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகளில் கோவை மாநகர போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

என்ஐஏ அதிகாரிகள் ஏற்கெனவே கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தற்காலிக அலுவலகம் அமைத்திருந்தனர். சென்னையில் கிளை அலுவலகம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவையில் உள்ள தற்காலிக அலுவலகம் கலைக்கப் பட்டது.

இந்நிலையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பான விசாரணை நடத்த என்ஐஏ-க்கு தற்காலிக அலுவலகம் மற்றும் உள்ளூர் போலீஸாரை வழங்குமாறு, மாநகர காவல் துறையிடம் என்ஐஏ தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த தற்காலிக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக, அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் தனி அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக்கு உதவியாக 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள், 8 போலீஸார் என மொத்தம் 14 பேர் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் என்ஐஏ அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ் பணியாற்றுவர். இவர்கள் 14 பேரும் ஏற்கெனவே கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பான தனிப்படையில் இருந்தவர்கள். தேவைப்பட்டால் கூடுதல் போலீஸாரும் ஒதுக்கீடு செய்யப்படுவார்கள்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்