வலிமையான தலைமை இல்லாததால் அதிமுக நான்காக பிரிந்து கிடக்கிறது: உதயநிதி ஸ்டாலின்

By இரா.தினேஷ் குமார்

திருவண்ணாமலை: "வலிமையான தலைமை இல்லாததால் அதிமுக நான்காக பிரிந்து கிடக்கிறது" என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக இளைஞர் அணி சார்பில் ‘திராவிட மாடல் பாசறை’ கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் இன்று (29-ம் தேதி) நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தை, சென்னையில் ஜூன் 5-ம் தேதி தொடங்கினோம். அதன்பிறகு, ஐந்து மாதங்களில், 210 தொகுதிகளில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தை நடத்தி உள்ளோம். திராவிட இயக்கத்தின் கொள்கை மற்றும் வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சென்று சேர்த்து வருகிறோம். ஒவ்வொரு தொகுதியாக பயிற்சி பாசறை கூட்டத்தை நடத்த வேண்டும். 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பாசறை கூட்டத்தை நடத்தி முடித்து, ஒவ்வொரு ஒன்றியம், பேரூராட்சி மற்றும் கிராமங்களில் திராவிட மாடல் பயிற்சி பாசறையை நடத்த உள்ளோம்.

திராவிட மாடல் பயிற்சி பாசறை ஏன் அவசியம் என கேட்கப்படுகிறது. மத்தியில் பாஜக அரசு ஆண்டு கொண்டிருக்கிறது. 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான அதிமுகவை தமிழக மக்கள் விரட்டி அடித்துள்ளனர். இதற்கு அடுத்ததாக நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தலைவர் மு.க.ஸ்டாலின் தேடி தந்துள்ளார். இந்தியா முழுவதும் வெற்றியை பெற்ற பாஜக, தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. திமுகவின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக அரசு, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை வழங்க மறுக்கிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி மொழியை முன்னிலைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் அளித்த பரிந்துரையை முதலில் எதிர்த்து, அதனை திரும்ப பெற வேண்டும் என்றவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும்தான், நாம் குரல் கொடுக்கிறோம். இந்தி மொழியை தமிழகத்தின் உள்ளே திணித்து விட வேண்டும் என பாஜக முயற்சி செய்கிறது. திமுக இருக்கும் வரை, இந்தி திணிப்பு நடைபெற விடமாட்டோம். இந்தி எதிர்ப்பில் உருவானதுதான் திமுக. இந்தி திணிப்புக்கு எதிர்த்து பல உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்தி திணிப்பை திமுகவும், தமிழக மக்களும் தொடர்ந்து எதிர்ப்போம்.

தமிழகத்தில் நடைபெறுவது அதிமுக ஆட்சி கிடையாது, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆட்சி நடத்தவில்லை, தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டார். தமிழகத்துக்கு வரும்போது எல்லாம் திருக்குறளை பற்றி பிரதமர் மோடி பேசுவார். ஆனால், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எந்த நன்மையும் செய்யமாட்டார்.

திமுகவா, அதிமுகவா என்ற பேச்சு இருந்த நிலையில், இப்போது ஆரியமா, திராவிடமா என அதிகம் பேசப்படுகிறது. திராவிட கொள்கைகளை ஊர் ஊராக பிரச்சாரம் செய்து தந்தை பெரியாரும், எழுத்து மற்றும் பேச்சாற்றலால் அண்ணாதுரையும், திரைப்பட வசனத்தால் கருணாநிதியும் கொண்டு சேர்ந்தனர். இளைஞரணி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு சென்று சேர்த்து வருகிறார்.

அதிமுக எதை பற்றியும் கவலைபடுவது இல்லை. கொள்கை இல்லாத கட்சி. வலிமையான தலைமை இல்லாததால் அதிமுக நான்காக பிரிந்து கிடக்கிறது. இந்தி திணிப்பை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, டெல்லியில் உள்ளவர்கள் கோபித்து கொள்வார்கள் என்பதால் அதிமுக வெளிநடப்பு செய்தது. மக்கள் பிரச்சினைக்காக போராடாமல், இருக்கைக்காக போராடுகின்றனர். அதிமுக அலுவலகமே கமலாலயமாக மாறிவிட்டது. 2019 மற்றும் 2021-ல் நடைபெற்ற தேர்தல்களில் பெற்ற மிகப் பெரிய வெற்றியை போல், அடுத்து வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை மீண்டும் பெற வேண்டும்” என்றார்.

முன்னதாக, திருவண்ணாமலையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்தார். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பில் வழக்கறிஞர் அருள்மொழி, மாநில சுயாட்சி எனும் தலைப்பில் ஊடகவியலாளர் கோவி லெனின் ஆகியோர் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்