'கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பாஜக சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது' - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு 

By செய்திப்பிரிவு

சென்னை: "கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து மாவட்ட பாஜகவின் சார்பாக சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் அக்டோபர் 31 ஆம் தேதி கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடையடைப்பு போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் கூறியிருக்கிறார். இதன்மூலம் பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியலைப் புரிந்து கொள்ள முடிகிறது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், இதை மூடி மறைக்கின்ற வகையில் தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துவது மிகுந்த நகைப்பிற்குரியது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் அனைத்து நிலைகளிலும் இந்தி மொழியைப் புகுத்துவதை நோக்கமாகக் கொண்டு பாஜக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்குவதோடு, தமிழ் மொழிக்கு ஒதுக்கப்படுகிற நிதி படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

கடந்த மூன்றாண்டுகளில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராஷ்ட்ரீய சான்ஸ்கிரிட் சன்சிதான் என்ற அமைப்பின் மூலம் ரூபாய் 643.84 கோடி ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய செம்மொழி தகுதி பெற்ற மொழிகளுக்கு இதே காலத்தில் ரூபாய் 29 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு இதைவிட 22 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அநீதியாகும். இதன்மூலம் தொன்மையான பாரம்பரியமிக்க மாநில அளவிலான மொழிகளைப் புறக்கணித்து விட்டு, மக்கள் வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்குவதன் மூலம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பாஜக அரசு பரப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது மாநில உரிமைகளைப் பறிக்கிற செயலாகும்.

பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தி எதிர்ப்பு என்று கூறி ஆங்கிலத்தை திணித்தால் வீதிக்கு வந்து போராடுவோம் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். இந்தி திணிப்பிலிருந்து இந்தி பேசாத மக்களுக்கு அன்றைய பிரதமர் நேரு அவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையிலும், தொடர்ந்து வந்த காங்கிரஸ் ஆட்சிகள் வழங்கிய சட்டப் பாதுகாப்பின்படியும் தான் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் 8-வது அட்டவணையிலுள்ள தமிழ் உள்ளிட்ட 18 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக்குகிற வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாகும். இதில் தேவையில்லாமல் பாஜக, இந்தியைத் திணிக்கிற நோக்கத்துடன் ஆங்கிலத்தை எதிர்ப்பதாகக் கூறுவதைவிட ஒரு கபட நாடகம் எதுவும் இருக்க முடியாது.

ஒருபக்கம் இந்திக்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கம் ஆங்கிலத்திற்கு எதிராகவும் நடத்துகிற இரட்டை வேடத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பாஜகவின் ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. அதேபோல, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து மாவட்ட பாஜகவின் சார்பாக சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் அக்டோபர் 31 ஆம் தேதி கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்த மனு தாக்கலில் கோவை மாநகர் கடையடைப்பு போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் கூறியிருக்கிறார். இதில் பாஜகவின் அதிகாரப்பூர்வ நிலை என்ன ? இதில் கூட பாஜகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. ஒருபக்கம் பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிற வினோத அரசியலை தமிழக பாஜக மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியலைப் புரிந்து கொள்ள முடிகிறது" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்