கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 5 பேரின் வீடுகளில் போலீஸார் நேற்று மீண்டும் சோதனை மேற்கொண்டனர்.
கோவையில் கடந்த 23-ம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில், ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார். அவரது வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள், வயர்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26) ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். மேலும், முபினின் உறவினர் அப்சர்கான்(28) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், முபினின் வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில், மக்கள் அதிகம் கூடும் 5 இடங்கள் குறித்து எழுதிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், கோவையில் 5 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அப்சர்கான் தவிர, மீதமுள்ள 5 பேரையும் கடந்த 26-ம் தேதி 3 நாள் காவலில் எடுத்து, போலீஸார் விசாரித்தனர்.
2019-ல் ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் உள்ள தேவாலயங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடைய தீவிரவாதி ஜக்ரன் ஹாசீமுடன், கோவை உக்கடத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவர் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருந்துள்ளார்.
இதையடுத்து, ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரான முகமது அசாருதீனை தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்து, கேரள சிறையில் அடைத்துள்ளனர்.
கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் உயிரிழந்த ஜமேஷா முபின், முகமது அசாருதீனின் நெருங்கிய கூட்டாளியாக இருந்துள்ளது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஜமேஷா முபினுடன், தற்போதைய கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிலரும் கேரளாவுக்குச் சென்று, முகமது அசாருதீன், அவருடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷீத் அலி ஆகியோரைச் சந்தித்ததும் தொடர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாகவும் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரிடம் போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து, காவலில் எடுக்கப்பட்ட 5 பேரையும் நேற்று கோட்டைமேடு, உக்கடம் ஜி.எம். நகர் பகுதிகளில் உள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்று, போலீஸார் விசாரித்தனர். வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டதுடன், ஏற்கெனவே சோதனை நடத்தியபோது கைப்பற்றப்பட்ட சில தடயங்கள் குறித்தும் அவர்களிடம் விசாரித்தனர். ஏறத்தாழ 3 மணி நேரம் சோதனை நடைபெற்றது. இதற்கிடையில், போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று மாலை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
முபின் மனைவியிடம் விசாரணை
முபினின் மனைவி நஸ்ரத், வாய் பேச, காது கேட்க இயலாத மாற்றுத் திறனாளி. இதனால், சைகை மொழிபெயர்ப்பாளர் துணையுடன் போலீஸார் அவரிடம் விசாரித்தனர்.
கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னர், முபின் தனது மனைவியிடம், தான் கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள உள்ளதாகவும், குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்று விடுமாறும் மனைவியிடம் கூறியுள்ளார். இதன்படி, நஸ்ரத், தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், முபினை அடிக்கடி சந்தித்தது யார் என்றும் போலீஸார் விசாரித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago