மருத்துவர்கள் பற்றாக்குறையால் புதுச்சேரி மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சை பிரிவுக்கு அரைநாள் விடுமுறையா?

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “மருத்துவர்கள் பற்றாக்குறையால் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சை பிரிவுக்கு அரைநாள் விடுமுறை விடப்படுகிறது, துறை அமைச்சரான முதல்வர் ரங்கசாமி அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டும்” என புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு நகரம் மற்றும் கிராமங்களிலிருந்து தினந்தோறும் 4000-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். 350-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், இதர பணியாளர்கள் பற்றாக்குறையாலும், போதிய மருந்து - மாத்திரைகள் மற்றும் படுக்கை வசதி இல்லாததால் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக புதுச்சேரி சுகாதாரத் துறையில் 70 சிறப்பு மருத்துவ வல்லுநர்கள், 105 மருத்துவர்கள், 42 மருந்தாளுனர்கள், 300 துணை மருத்துவ ஊழியர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற நேரிடுகிறது. அரசு பொது மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் மெஷின் பழுதாகியுள்ளதால், ஏழை நோயாளிகள் ரூ.7000 வரை கொடுத்து வெளியே ஸ்கேன் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிடி ஸ்கேன் மெஷினும் ஒன்று மட்டுமே உள்ளதால் ஒரு நாளைக்கு 30-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ச்சியாக ஸ்கேன் செய்ய வேண்டியுள்ளதால், அந்த மெஷினும் அவ்வப்போது பழுதாகி நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆஞ்சியோ செய்யும் வசதியும் நீண்ட நாட்களாக இல்லை.

இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமியின் கீழ் உள்ள சுகாதாரத் துறை நிலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளியிட்ட அறிக்கையில், "அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்வதற்கான, மத்திய கொள்முதல் கமிட்டி (சிபிசி) ஆண்டுதோறும் மார்ச் மாதத்திற்குள் மருத்துக்களை கொள்முதல் செய்வதற்கான விதிமுறைகளை முடித்து, மருந்துகளை கொள்முதல் செய்யும்.

ஆனால், நடப்பாண்டிற்கான மருந்து கொள்முதலுக்கான பணிகளை மத்திய கொள்முதல் கமிட்டி (சிபிசி) 7 மாதங்கள் ஆகியும் இதுவரை இறுதி செய்யாததால், பல்வேறு நிறுவனங்கள் மருந்துகள் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பல அத்தியாவசிய மருந்து, மாத்திரைகள் வெளி மருந்தகங்களில் வாங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் உள்ள பல 108 ஆம்புலன்ஸ்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. குறிப்பாக காலப்பட்டு, தவளக்குப்பம், காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆம்புலன்ஸ்கள் எப்சி எடுக்காமல் நீண்டா நாட்களாக பயனற்று ஒரே இடத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற நோயாளிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். அதேபோன்று பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான ஆம்புலன்ஸ்களிலும் உதவியாளர்கள் இல்லாத நிலை உள்ளது.

இதேபோன்று புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிக மோசமான நிலையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் அதிகாரிகள் குழுவின் தர ஆய்வின்படி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்கு அவசர சிகிச்சை பிரிவு சரிவர செயல்படவில்லை, அறுவை சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் தராததால், அவர்கள் பணி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், அவசர சிகிச்சை பிரிவுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது எந்த மருத்துவமனையிலும் நடைபெறாத ஒன்று. துறை அமைச்சரும், முதல்வருமான ரங்கசாமி அலட்சியம் காட்டாமல் செயல்படவேண்டும். மத்திய அரசு புதுச்சேரிக்கு பல நூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பாஜக அமைச்சர்கள், பேரவைத் தலைவர் செல்வம், துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆகியோர் அவ்வப்போது தெரிவித்து வரும் நிலையில், மக்களின் உயிர் சம்பத்தப்பட்ட விஷயத்திற்காக அந்த நிதியை உடனடியாக செலவிட வேண்டும்" என்று சிவா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்