சென்னை: நவம்பர் 01 மொழிவழி தேசிய உரிமைநாளில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''1956-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் முதலாம் நாளன்று மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் மொழிவழி தேசிய உணர்வும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வும் அந்தந்த மாநிலம் சார்ந்த மக்களிடையே வளர்ந்து அவை மென்மேலும் வலுப்பெற்று வருகின்றன. எனவே, இந்நாளை மொழிவழி தேசிய உரிமைநாளாகக் கடைபிடிப்போம்.
மொழிவழி அடிப்படையிலான தேசிய உணர்வுகள் மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் ஒருபுறம் வலுவாக வளர்ந்து வருகிறது என்றாலும், புது டெல்லியில் மத்திய அரசின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் அத்தகைய மொழிவழி தேசியத்தையோ மாநில உரிமைகளையோ ஏற்கும் முதிர்ச்சியான சனநாயகப் போக்குகளைக் கொண்டிருப்பதில்லை. மாறாக, மொழி உணர்வுகளை நசுக்குவதிலும் மாநில உரிமைகளைப் பறிப்பதிலும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செயல்படுவதைத் தொடர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதன்படியே தற்போது பாஜக அரசும் மாநில உரிமைகளைப் பறிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழ்நாடு மாநிலமும் பல்வேறு வகைகளில் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, மொழிவழி தேசிய உரிமை நாளான நவம்பர்-01 ஆம் நாள் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பாக, இந்திய கடற்படையினர் தமிழக மீனவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றைக் கண்டித்து நடைபெறுகிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமின்றி தமிழ்நாடு நலனில் அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்தியா ஒரு கூட்டரசு என அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், அதற்கு மாறாக, மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு திட்டமிட்டேபறித்து வருகிறது. குறிப்பாக, மாநிலங்களின் நிதித் தற்சார்பை சீர்குலைக்கும் விதமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தி மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதியையும் தானே அபகரித்துக் கொள்கிறது. ஜிஎஸ்டி சட்டத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியையும் உரிய காலத்தில் அளிப்பதில்லை. இதனால், மாநில அரசுகள் தமது மக்களின் தேவைக்கேற்ற திட்டங்களை அறிவிக்க முடியவில்லை.
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி என்னும் அதிகாரம் ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இப்போது அதை ஒன்றிய அரசின் பட்டியலில் இருப்பது போலக் கருதி தேசிய கல்விக் கொள்கையை பாஜக அரசு உருவாக்கியுள்ளது. பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் தேவையற்ற தலையீடுகளைச் செய்து தமிழ்நாட்டினுடைய கல்வி வளர்ச்சியைச் சீரழிக்க முனைகிறது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் மூலமாக அத்து மீறுகிறது. தனது பொறுப்பின் அடிப்படையிலேயே ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பதை மாற்றும்வகையில், புதிதாக தமிழ்நாடு அரசு இயற்றியிருக்கும் சட்ட மசோதா உட்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் முடக்கி வைத்திருக்கிறார்.
இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்ற வாக்குறுதிக்கு மாறாக, இந்தியை அனைத்துத் தளங்களிலும் திணிப்பதற்கு மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமையிலான தேசிய அலுவல்மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள அறிக்கையானது இந்தி பேசாத மாநில மக்களின் மொழி உரிமைகளை முற்றாக அழிக்கும் வகையில் உள்ளது. இது 'ஒரே தேசம்- ஒரே மொழி' எனும் இந்தியப் பன்மைத்துவத்திற்கு எதிரான மேலாதிக்கப் போக்காகும்.
அடுத்து, இந்திய நாட்டை அண்டை நாடுகளின் ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய ஒன்றிய பாஜக அரசு, நமது நாட்டின் இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வகையில், சீன ராணுவத்தின் அத்துமீறலை- ஆக்கிரமிப்பை வேடிக்கைப் பார்க்கிறது. ஆயிரக்கணக்கான சதுர மைல் பரப்பளவு கொண்ட நமது நாட்டின் வடக்கே எல்லையோரப் பகுதியைச் சீனா ஆக்கிரமித்திருப்பது தெரிந்தும் பாஜக அரசு கையாலாகாத வகையில் செயலிழந்து நிற்கிறது.
அதேவேளையில், இந்திய கடலோர காவற்படை தமிழக மீனவர்களையே தாக்குவதும் துப்பாக்கி சூடு நடத்துவதுமாக இருக்கிறது. அண்மையில் கடலோர காவல் படையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் வீரவேல் என்பவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பலர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் இந்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும், நவம்பர் 01ஆம் நாள் சென்னையில் நனைபெறவுள்ள விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் மீது அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டுமாறு அறை கூவல் விடுக்கிறோம்.'' இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago