ரேஷன் அரிசியை வாங்கி விற்பவர்கள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பொதுவிநியோகத் திட்ட அரிசியைவாங்கி வெளியில் விற்பவர்களை கடைவாரியாகக் கண்டறிந்து எச்சரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள அமைச்சர் அர.சக்கரபாணி, அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் தரமான அரிசி வழங்கவும், பருப்புமற்றும் பாமாயில் கொள்முதலில் வெளிப்படைத் தன்மையுடன் ஒப்பந்தப்புள்ளி கோருவதில் பலரும் கலந்து கொள்ளும் நிலையை உருவாக்கியும், குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையை வலுப்படுத்தியும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதனால், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், தரமான அரிசி கிடைப்பதாக பொதுமக்கள், மாற்றுக் கட்சியினர் பாராட்டும் நிலை உருவாகியுள்ளது. குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை கண்காணிப்பாளர் தலைமையில், மதுரை, சென்னை என 2 மண்டலங்கள் இருந்த நிலையில், திருச்சி மற்றும் கோவையில் புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இத்துறைக்கு புதிய அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லையோரமாவட்டங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதுடன், ரோந்து மற்றும் சோதனைச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில், தற்போது வரை 12,637 வழக்குகள் பதியப்பட்டு, 12,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 128 பேர் தடுப்புக் காவலில் கைதாகியுள்ளனர். 90,122 குவிண்டால் அரிசி, 2,607 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியைஒப்பிடும்போது, 3 மடங்கு அரிசிபறிமுதல் செய்யப்பட்டு, அதிகமானவழக்குகள் பதியப்பட்டுள்ளன. கடத்தலுக்கு துணை போன அரிசி ஆலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

2,869 கண்காணிப்பு கேமரா: பொது விநியோகத் திட்ட பொருட்கள் சரியான முறையில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று சேருவதைக் கண்காணிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் பொருத்தப்பட்டுள்ள 2,869 கண்காணிப்புக் கேமராக்களைப் பராமரித்து சரியான முறையில் இயங்குவதை உறுதிசெய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்ட அரிசியை வாங்கி விற்பவர்களைக் கடைவாரியாகக் கண்டறிந்து அவர்களை எச்சரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் இதில் முழு ஈடுபாட்டுடன் ஒத்துழைத்தால்தான் அரிசி கடத்தலை முற்றிலும் தடுக்க முடியும். குடிமைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 வழியாகவும் தெரியப்படுத்தலாம். பொதுமக்களுக்குத் தரமான அரிசி வழங்க வேண்டும் என்ற அரசின் எண்ணத்தையும் கருத்தில்கொண்டு, கடத்தலில் வாடிக்கையாக ஈடுபடுபவர்கள் தங்கள் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE