“பாஜக 8 ஆண்டுகளில் எந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறது?” - கே.பாலகிருஷ்ணன் நேர்காணல்

By பால. மோகன்தாஸ்

“கேரளாவைப் பொறுத்தவரை பாஜகவை வீழ்த்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், அங்கு அவர்கள் வலுவான கட்சி அல்ல. எனவே, அங்கு காங்கிரசுக்கும் எங்களுக்கும் இடையேதான் போட்டி இருக்கும்”, “மதத்தின் அடிப்படையிலோ, இனத்தின் அடிப்படையிலோ மக்களை திரட்டுவதற்கான சாத்தியம் எங்கள் கட்சிக்கு கிடையாது”, “மக்கள் மத்தியில் திமுக அரசு மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் திமுக அரசு இன்னும் கூடுதல் பங்களிப்பை அளிக்க வேண்டும்”, “கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மோடி அரசு என்ன செய்திருக்கிறது?” - இப்படி தமிழக அரசியல் முதல் தேசிய அரசியல் வரை சமகால விவகாரங்கள் குறித்த தனது பார்வையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்...

சிபிஎம் கட்சியின் வளர்ச்சி தேசிய அளவில் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது?

"சில மாநிலங்களில் கட்சியின் வளர்ச்சி நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக மகாராஷ்ட்ராவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை கட்சி பெற்றது. கேரளாவில் எங்கள் ஆட்சிதான் இருக்கிறது. மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் கட்சிக்கு போதிய பலம் இருந்தபோதும் அங்கு வன்முறை அரசியல் வளர்ந்துவிட்டதால் எங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிக அளவில் இளைஞர்களையும் பெண்களையும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும், இந்திய அளவில் சாதிய, மதவாத அரசியல் முன்னுக்கு வந்திருப்பதால், அனைத்து மதங்களையும் ஈர்க்கும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியால் இருக்க முடியவில்லை."

2004ல் சிபிஎம் கட்சிக்கு 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால், தற்போது 3 பேர்தான் இருக்கிறார்கள். அடுத்து வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

"கடந்த தேர்தலைவிட 2024 தேர்தல் எங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும். மேற்கு வங்கத்தில் நாங்கள் எதிர்பார்த்த வெற்றி எங்களுக்கு கிடைக்காமல் போனதுதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் குறைவாக வெற்றி பெறக் காரணம். கேரளாவைப் பொறுத்தவரை சிபிஎம் வெற்றி பெற்றாலும், அவர்கள் எங்களைத்தான் ஆதரிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி செய்த பிரச்சாரம் எங்களது வெற்றியை பறித்துவிட்டது. ஆனால், இம்முறை அப்படி நிகழாது."

2024 தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியோடு சிபிஎம் கூட்டணி வைக்காது என்று எடுத்துக்கொள்ளலாமா?

"2024 தேர்தலைப் பொறுத்தவரை எங்கள் இலக்கு பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். அதேநேரத்தில், சில மாநிலங்களில் நாங்கள் காங்கிரசோடு சேர்ந்து இருப்போம். சில மாநிலங்களில் அவ்வாறு சேர்ந்து இருக்க மாட்டோம். கேரளாவைப் பொறுத்தவரை பாஜகவை வீழ்த்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், அங்கு அவர்கள் வலுவான கட்சி அல்ல. எனவே, அங்கு காங்கிரசுக்கும் எங்களுக்கும் இடையேதான் போட்டி இருக்கும்."

இது உங்கள் நம்பகத்தன்மையை பாதிக்காதா?

"நிச்சயம் பாதிக்காது. தேசிய அரசியலின் யதார்த்தம் என்ன என்பதை கேரள மக்கள் புரிந்திருக்கிறார்கள். அதனால்தான், கேரளாவில் சிபிஎம் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க முடிந்திருக்கிறது."

சிபிஐ, சிபிஎம் என இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும் என்பது குறித்த பேச்சு மூத்த தலைவர்களால் அவ்வப்போது முன்வைக்கப்படுகிறது. அதற்கான வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது?

"மற்ற கட்சிகளைப் போல் இடதுசாரி கட்சிகள் உடைவது கிடையாது. 1964-ல் கட்சி உடைந்ததற்கு அடிப்படையான கொள்கை, அடிப்படையான அணுகுமுறை ஆகியவையே காரணம். ஒரே கட்சியில் இருந்து கொண்டு எதிரும் புதிருமான அணுகுமுறையோடு செயல்பட முடியாது என்ற நிலையில்தான் சிபிஎம் கட்சி உருவானது. தற்போது நாங்கள் தனித்தனி கட்சியாக இருந்தாலும், கூட்டாக இணைந்து செயல்படுவது என்ற முடிவில் இருக்கிறோம். இது தொடரும். எதிர்காலத்தில் இரு கட்சிகளும் இணையுமா இணையாதா என்பதை வரலாறுதான் தீர்மானிக்கும்."

மேற்கு வங்கத்தில் 1977-ல் இருந்து 2011 வரை 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தீர்கள். ஆனால், அந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது அங்கு திரிணாமூல் காங்கிரஸ் VS பாஜக என களம் மாறி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் உங்களுக்கான ஆதரவு இத்தனை வேகமாக குறைந்ததற்கு என்ன காரணம்?

"மேற்கு வங்க சிபிஎம் இது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. மம்தா பானர்ஜி வங்காளி என்ற இன அடிப்படையில் மக்களை திரட்டுகிறார்; பாஜக மத அடிப்படையில் மக்களை திரட்டுகிறது. மதத்தின் அடிப்படையிலோ, இனத்தின் அடிப்படையிலோ மக்களை திரட்டுவதற்கான சாத்தியம் எங்கள் கட்சிக்கு கிடையாது. அத்தகைய அரசியலை மேற்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. உழைப்பாளி மக்களை வர்க்க அடிப்படையில் ஒன்று திரட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இன வெறியை, மத வெறியை தூண்டுபவர்களுக்கு தற்போது வெற்றி கிடைத்திருக்கிறது. ஆனால், இது தற்காலிகமானதுதான். ஏனெனில், மனிதன் எப்போதுமே மத வெறியுடனேயோ அல்லது இன வெறியுடனேயோ இருக்க மாட்டான்."

மத ரீதியாக மக்கள் பிரச்சினைகளை சந்திக்கும்போது இடதுசாரிகள் ஒதுங்கிவிடுகிறார்கள். மக்கள் சந்திக்கும் அந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இடதுசாரிகள் முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு உங்கள் பதில் என்ன?

"சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் சிறுபான்மை என்ற அடிப்படையில் நாங்கள் அவர்கள் பக்கம் நிற்கிறோம். அதேநேரத்தில், நாங்கள் பெரும்பான்மை மதத்தை எதிர்க்கவில்லை. அதில் இருக்கக்கூடிய மத வெறியைத்தான் எதிர்க்கிறோம். சாதாரண மக்களுக்கு இருக்கும் மத உணர்வை நாங்கள் கொச்சைப்படுத்தவோ, காயப்படுத்தவோ விரும்புவதில்லை. அதேநேரத்தில், இந்து மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை, வர்ணாசிரம தர்மத்தை, சாதிய பாகுபாட்டை நாங்கள் எதிர்க்கிறோம்."

தமிழ்நாட்டில் திமுக அரசு குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?

"பல்வேறு சவால்களை இந்த அரசு சந்தித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மிகப் பெரிய நெருக்கடியில் கொண்டுபோய் வைத்துவிட்டது. அந்த நெருக்கடியை தற்போதைய திமுக அரசு சமாளித்து வருகிறது. அதோடு, இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கரோனா 2வது அலை, 3வது அலை என வந்ததால், அதையும் சமாளித்து கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். இவை பாராட்ட வேண்டிய விஷயங்கள். அதோடு, கொள்கை ரீதியாக மத்திய அரசுக்கு எதிராக இருப்பதால், திமுக அரசு மீது மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. செய்ய வேண்டிய உதவிகளை செய்வதில்லை. நிதி பங்கீட்டை குறைக்கிறார்கள். அதனையும் திமுக அரசு சமாளிக்க வேண்டி இருக்கிறது. அதேநேரத்தில், மக்கள் மத்தியில் திமுக அரசு மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் திமுக அரசு இன்னும் கூடுதல் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். பருவ மழை தீவிரமடைந்தால் தலைநகர் சென்னையின் நிலை மிகவும் மோசமாகும் என்ற அச்சம் இருக்கிறது. இந்த பிரச்சினை குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

"சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, பாதியில் விடப்பட்டது. அந்த பணிகளை தற்போது திமுக அரசு செய்து வருகிறது. இந்த பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தவிட்டுள்ளார். 3 மாதங்களில் பணிகள் முடிந்துவிடும் என்று நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும் தெரிவித்திருக்கிறார். உண்மை என்னவென்றால், மழை பெய்து அதன் காரணமாக மழைநீர் தேங்கி ஏற்படும் பாதிப்பைவிட, மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக பாதிப்பு அதிகம் இருக்கிறது. எனவே, அரசு பணிகளை துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம்."

கோவையில் கடந்த 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்தது குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? அது தற்செயலாக நிகழ்ந்த விபத்தாக இருக்கும் என கருதுகிறீர்களா அல்லது தீவிரவாத நடவடிக்கையாக இருக்கும் என கருதுகிறீர்களா?

"சம்பவம் நடந்த அன்று அது விபத்துதான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்த விபத்தை அடுத்து வெளிவந்திருக்கிற செய்தியைப் பார்க்கும்போது இது திட்டமிட்ட நடவடிக்கை என்பது தெரிகிறது. திட்டமிட்டபடி சம்பவம் நடந்திருந்தால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். நல்ல வேளையாக அவ்வாறு நடக்கவில்லை. இந்த விவகாரத்தில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள்."

ஆனால், தீவிரவாத நடவடிக்கை என கூறாமல் விபத்தாக சித்தரிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு செய்வதாக குற்றச்சாட்டு உள்ளதே?

"அரசு எச்சரிக்கையாகத்தான் பேச வேண்டும். முக்கிய தலைவர் ஒருவர் இறந்துபோனால் உடனடியாக அதை அரசு அறிவிக்காது. காந்தி படுகொலை விஷயத்திலும் இதை நாம் பார்க்க முடியும். அரசு ஒரு விஷயத்தை கூறுமானால், அது சமூகத்தில் எத்தகைய எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதை ஆராய்ந்தே கூறும். இதை அப்படித்தான் பார்க்க வேண்டும். இந்த வழக்கில் வேறு சில சக்திகளுக்கும் தொடர்பு இருப்பதால்தான் வழக்கை தற்போது என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளது. இதை எல்லாம் செய்யவில்லை என்றால்தான் அரசு மெத்தனமாக இருக்கிறது என குற்றம் சாட்ட முடியும்."

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிந்தால், அரசு மதுக்கடைகளை மூடுகிறது. ஆனால், இதே மதுக்கடைகளால்தான் குடும்ப வன்முறை அதிகரிக்கிறது; இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அதிக அளவில் ஆளாகிறார்கள். ஆனால், அந்த பிரச்னைகளை மாநில அரசு கண்டுகொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

"மது பழக்கம் உள்ளிட்ட போதை பழக்கத்தை படிப்படியாக ஒழித்துக்கட்டுவதுதான் சமூகத்திற்கு நல்லது. இன்று நடக்கும் ஏராளமான சீரழிவுகளுக்கும் அநியாயங்களுக்கும் மதுவும் போதையும் ஒரு அடிப்படை காரணமாக இருக்கிறது. எனவே, மது பழக்கத்தை, போதை பழக்கத்தை ஒழித்துக்கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே இரவில் இதை செயல்படுத்துவது முடியாத காரியம் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி செய்தால், அதனால் பல்வேறு எதிர்விளைவுகள் ஏற்பட்டுவிடும். எனவே, அரசு தொலைநோக்கு பார்வையோடு மதுக்கடைகளை படிப்படியாக ஒழிக்க வேண்டும்."

மதுவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இது பல மாநிலங்கள் வழியாக தமிழ்நாட்டிற்குள் வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறுகிறதா?

"மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக இலங்கையில் ஏற்பட்டதைவிட மோசமான பொருளாதார பாதிப்பு இந்தியாவில் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இலங்கை சிறிய நாடு என்பதால் அது உடனடியாக வெளிப்பட்டு விட்டது."

ஆனால், பொருளாதாரத்தில் இந்தியா 6வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறதே?

"டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு முன் இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டதில்லை. இதுதான் இலங்கையில் நடந்தது. அந்நிய செலாவணி கையிருப்பும் வெகுவாக கரைந்துள்ளது. நாட்டில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், தற்கொலை என பல்வேறு பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, மக்களை போதையில் மூழ்கடிக்க வேண்டும் என்பதற்கான திட்டமிட்ட ஏற்பாட்டை மத்திய அரசு செய்து வருகிறது. ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் துறைமுகங்கள் வழியாக இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுகின்றன என்றால், அரசு இதை அனுமதிக்கிறது என்பதால்தான் இது நடக்கிறது."

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா உள்ளிட்ட 4 பேர் குற்றம் இழைத்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பரிந்துரைத்திருப்பது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

"இந்த பரிந்துரையை அளித்திருப்பவர் யாரோ தெருவில் செல்பவர் அல்ல. விசாரணை ஆணையம் அளித்திருக்கும் இந்த பரிந்துரையை ஏற்று அரசு விசாரிக்க வேண்டும்."

மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பயிற்று மொழியாக ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை கொண்டு வர மத்திய அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. இது இந்தி மொழியை இந்தி பேசாத மாநிலங்கள் மீது திணிக்கும் முயற்சி என திமுக கண்டித்து, அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஆனால், இந்தியை தாங்கள் திணிக்கவில்லை என்றும் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டும்தான் பயிற்று மொழி மாற்றப்படுவதாகவும் பாஜக விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

"இந்த விளக்கம் ஒரு ஏமாற்ற வேலை. டெல்லியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஒருவர் இந்தியில் படித்தால் அவர் எப்படி நாளை தமிழ்நாட்டில் வேலை செய்வார். ஏற்கெனவே இருக்கும் ஏற்பாடு நன்றாகத்தான் இருக்கிறது. தற்போது அதை ஏன் மாற்ற வேண்டும்? 2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. எனவே, இந்தி பேசும் மாநில மக்களின் வாக்குகளை குறிவைத்தே மத்திய பாஜக அரசு இவ்வாறு நடந்துகொள்கிறது."

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வாகி இருக்கிறார். அவரது தேர்வு தேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்கள்?

"கார்கே நல்ல காங்கிரஸ் தலைவர். நீண்ட அனுபவம் கொண்டவர். காங்கிரஸ் கட்சியில் பல நேரங்களில் பல சோதனைகள் வந்தபோதும் அதற்கு ஆட்படாமல் கட்சிக்கு கட்டுப்பட்டு நம்பிக்கைக்கு உரியவராக அவர் இருந்து வந்துள்ளார். அந்த வகையில் அவர் பாராட்டுக்குரியவர். நாட்டில் மதச்சார்பற்ற அணியை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்; அளிப்பார் என்று நம்புகிறேன்."

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்னையையும், திமுக அரசு மீதான அதிருப்தியையும் பயன்படுத்தி, பாஜக தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் பலரும் கருதுகிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? பாஜகவின் வளர்ச்சி தமிழ்நாட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதுகிறீர்கள்?

"தமிழ்நாடு அரசைப் பார்த்து பல்வேறு கேள்விகளை முன்வைக்கும் அண்ணாமலை, மத்திய அரசின் மோசமான செயல்பாட்டிற்கு என்ன பதில் சொல்வார்? கடந்த 8 ஆண்டுகளில் எந்த வாக்குறுதியை நரேந்தி மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றி இருக்கிறது? கடந்த 8 ஆண்டுகளில் அவர்கள் தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார்கள்? எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன. அதற்கான பணிகளை இதுவரை மத்திய அரசு தொடங்கவில்லை. அண்ணாமலை கேள்வி எழுப்பினால் தமிழ்நாடு அரசு பதில் அளிக்கிறது. ஆனால், மத்திய அரசைப் பார்த்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்திருக்கிறாரா? கேள்வி கேட்கும் தகுதி அண்ணாமலைக்கு இல்லாவிட்டாலும் தமிழ்நாடு அரசு பதில் அளிக்கிறது. ஆனால், யார் கேள்வி கேட்டாலும் பதில் அளிக்காத அரசாக மோடி அரசு இருக்கிறது."

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்