சென்னை: அரிசி கடத்தலை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தினார்.
குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர் மற்றும் நான்கு மண்டலங்களின் காவல் கண்காணிப்பாளர்களின் பணித் திறனாய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று (அக்.27) நடைபெற்றது. இதில் அரிசிக் கடத்தலை அறவே தடுத்து நிறுத்திட வேண்டும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள் வைத்தார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், "முதல்வர் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன், தரமான அரிசி வழங்கிடவும் நெல் கொள்முதலைச் செம்மையாக்கியும், பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலில் வெளிப்படைத் தன்மையுடன் ஒப்பந்தப்புள்ளி கோருவதில் பலரும் கலந்து கொள்ளும் நிலையை உருவாக்கியும் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையை வலுப்படுத்தியும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதன் பயன் இன்று வெளிப்படையாகத் தெரிவதோடு அனைத்துப் பொது விநியோகத் திட்டக் கடைகளிலும் தரமான அரிசி கிடைக்கிறது என்று பொதுமக்களும் மாற்றுக் கட்சியினரும் பாராட்டுகின்ற நிலை உருவாகியுள்ளது. குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மதுரை மற்றும் சென்னை என்ற இரண்டு மண்டலங்கள் தான் இருந்தன. திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூரில் புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டு தற்போது நான்கு மண்டலங்கள் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் செயலாற்றி வருகின்றன.
» “பாஜகவின் அக்.31 கோவை பந்த்... அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயல்” - முத்தரசன்
» திருநர் நலக் கொள்கை: முதல்வர் ஸ்டாலினிடம் மாநிலத் திட்டக் குழு விவரிப்பு
புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை மற்றும் தென்காசி மாவட்டங்களில் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறைக்குப் புதிய அலகுகள் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்புக் கேமாராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு ரோந்து வாகனங்களும் சோதனைச் சாவடிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 12,637 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 12,721 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 128 பேர்கள் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 90,122 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு 2607 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டதன் காரணமாக கடந்த ஆட்சியின் இதே காலக்கட்டத்தை ஒப்பிடும்போது மூன்று மடங்கு அளவிற்கு அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு அதிகமான வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
எல்லையோர மாவட்டங்களில் கடந்த காலத்தை விட நான்கு மடங்கு வழக்குகள் போடப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடத்தி கடத்தலுக்குத் துணை போன அரிசி ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
பயோ டீசல் கலப்படத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் விற்பனை அளவு அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் முதலமைச்சருக்கு நன்றியினைத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து பொது விநியோகத் திட்டத்திற்கு மாதந்தோறும் அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, மண்ணென்ணை மற்றும் பாமோலின் ஆகிய பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைக் கண்காணிப்பதற்காக கடந்த ஆட்சியில் பொருத்தப்பட்ட 2,869 கண்காணிப்புக் கேமராக்களில் பெரும்பாலானவை சரியான முறையில் இயங்கவில்லை.
ஆதலால், பொது விநியோகத் திட்ட பொருள்கள் சரியான முறையில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று சேருவதைக் கண்காணிக்கும் பொருட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் பொருத்தப்பட்டுள்ள 2,869 கண்காணிப்புக் கேமராக்களைப் பராமரித்துச் சரியான முறையில் இயங்கிடுவதை உறுதி செய்திட தற்போது ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து ஆய்வு செய்து கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இன்றைக்கு (27ம் தேதி ) தலைமைச் செயலகத்தில் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர் மற்றும் நான்கு மண்டலங்களின் காவல் கண்காணிப்பாளர்களின் பணித் திறனாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அரிசிக் கடத்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் புலனாய்வு செய்து, கடத்தலுக்கு முன்பே அதை நிறுத்தும் வண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதோடு கடத்தலில் வழக்கமாக ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து அவர்களின் மறுவாழ்வுக்கு வழி செய்து அவர்களைக் கடத்தலில் ஈடுபடுத்தாமல் நல்வழிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
பயனாளிகள் மட்டுமே அரிசி பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அரிசி வாங்கி தாங்கள் பயன்படுத்தாமல் வெளியில் விற்பவர்கள் யார் என்பதைக் கடைகள் வாரியாகக் கண்டறிந்து அவர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அரிசிக் கடத்தலைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் பொது விநியோகத் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் இதில் முழு ஈடுபாட்டுடன் ஒத்துழைத்தால் தான் அரிசிக் கடத்தலை அறவே தடுக்க முடியும். குடிமைப்பொருள்கள் கடத்தல் தொடர்பாக தகவல் அளிக்க விரும்புபவர்கள் கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 வழியாகவும் தெரியப்படுத்தலாம். பொதுமக்களுக்குத் தரமான அரிசி வழங்க வேண்டும் என்ற அரசின் எண்ணத்தையும் கருத்தில் கொண்டு, கடத்தலில் வாடிக்கையாக ஈடுபட்டுள்ளோர் தங்கள் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பொது விநியோகத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அலுவலர்கள், பொது விநியோகத் திட்டக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், அரிசி அரவை ஆலைகளின் உரிமையாளர்கள், அரிசிக் கிடங்கு பாதுகாப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் அரிசியைக் கடைகளுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்கள், அரிசி பெறும் மற்றும் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டில் அரிசிக் கடத்தலே இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று அமைச்சர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago