கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை என்ஐஏ விசாரிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (அக்.27) நடந்தது. கூட்டத்துக்கு மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், "கடந்த 23-ம் தேதி அதிகாலை நடந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல் துறை சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தமிழக டிஜிபியும் கோவைக்கு வந்து விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்த 12 மணி நேரத்துக்குள் அந்த காரின் விவரம் மற்றும் விபத்தில் உயிரிழந்தவர் தொடர்பான முழு விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேரிடம் அந்தக் கார் கைமாறி உள்ளது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், இந்த சம்பவத்தை பாஜக அரசியல் ஆக்க முயற்சி செய்து வருகிறது. அதன் தலைவர் உண்மைத் தன்மை தெரியாமல் பேசி வருகிறார். காவல் துறை இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், உண்மைத் தன்மையை வெளியிடுவதற்கு முன்பு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அண்ணாமலை இந்த வழக்கு சம்பந்தமாக பேசியுள்ளார்.
எனவே, அவருக்கு இந்த தகவல்கள் எப்படி கிடைத்தது, எதன் அடிப்படையில் இவ்வாறு அவர் வெளியிட்டார் என்பது தொடர்பாக என்ஐஏ முதலில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளி மாநிலம் கடந்து விசாரணை நடத்த உள்ளதால் முதல்வர் என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால், பாஜகவினர் கூறியதனால்தான் என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார் என அவர்கள் கூறி வருகின்றனர்.
» T20 WC | பேட்டிங்கில் மிரட்டிய ரோகித், கோலி & சூர்யகுமார் யாதவ்: நெதர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு
» பாதுகாப்பான நாடு: தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆப்கானிஸ்தான் கடைசி இடம்
கோவையில் இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிகமாக 40 இடங்களில் சோதனைச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அரசியலாக்க நினைக்கும் பாஜக முப்படைத் தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தபோது அவர்கள் வந்து மரியாதை செலுத்தவில்லை. அந்தச் சம்பவம் தொடர்பாக ஏதாவது பேசினார்களா?
அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவும், மக்களவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு பாஜகவினர் கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். இது தேவையற்றது. சட்டத்துக்கு புறம்பாக கடைகளை அடைக்கச் சொன்னாலோ, மிரட்டினாலோ, மக்களை துன்புறுத்தினாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. மக்கள் யாரும் அச்சப்படவில்லை. தமிழகத்தில் ஏராளமான கட்சிகள் உள்ளன. மற்ற கட்சியினர் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றனர். அதன்படி நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், பாஜகவினர் மட்டும்தான் இதனை வைத்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். இதனால், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையற்றது.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த சம்பவத்தையும், தற்போது நடந்த நிகழ்வையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் அக்கட்சியினர் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவதூறு பரப்புபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை பார்க்கும்பொழுது அடிப்படை அரசியல் பக்குவம் அற்றவர் என்பதை காட்டுகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்" என்று கூறினார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago