இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு இல்லை... தங்க கவசத்தை மதுரை டிஆர்ஓவிடம் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: தேவர் ஜெயந்தி விழாவின்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கக் கவசத்தை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் ஆகியோரிடம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனு: தேவர் ஜெயந்தியின்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் 2014-ல் அப்போதைய தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவால் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்த தங்க கவசம் அக்டோபர் 30-ல் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியின் போது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும். மற்ற நாட்களில் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளையில் அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரிலான வங்கிக் கணக்கில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும். தேவர் தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளரும், தேவர் நினைவாலய பொறுப்பாளரும் இணைந்து கையெழுத்திட்டு வங்கி லாக்கரில் இருந்து பெறுவது வழக்கம்.

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி தற்காலிக பொதுச் செயலாளராகவும், நான் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. இதனால் அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் அதிமுக வங்கி கணக்குகளை கையாள எனக்கு முழு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் அதிமுக பொருளாளர் என்ற முறையில் தேவர் தங்க கவசத்தை என்னிடம் தான் ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக வங்கிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், வங்கி நிர்வாகம் தங்க கவசத்தை என்னிடம் ஒப்படைக்க மறுத்ததுடன், அதிமுக, பசும்பொன் தேவர் நினைவாலய வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

எனவே, இந்தாண்டு தேவர் ஜெயந்தி நாளில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் என்ற முறையில் என்னிடம் ஒப்படைக்கவும், அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலய வங்கி கணக்கை அதிமுக சார்பில் இயக்க எனக்கு அனுமதி வழங்கவும் வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதிடுகையில், ''அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்த நிலையில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மனுதாரரான திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தான் அதிமுகவின் அனைத்து வங்கிக் கணக்குகளின் வரவு, செலவுகளை கவனித்து வருகிறார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக். 30-ல் நடைபெறுகிறது. தேவர் சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட 13 கிலோ தங்கக் கவசத்தை அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் மனுதாரரிடம் தான் வழங்க வேண்டும். ஆனால் வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் தங்கக் கவசத்தை மனுதாரரிடம் வழங்க உத்தரவிட வேண்டும்'' என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.செல்லபாண்டியன், முன்னாள் எம்எல்ஏவும், வழக்கறிஞருமான சுப்புரத்தினம் வாதிடுகையில், ''அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் தங்க கவசத்தை மனுதாரரிடம் வழங்கக்கூடாது'' என்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள், வங்கி நிர்வாகம் சார்பில், இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி பவானி சுப்புராயன் இன்று பிறப்பித்த உத்தரவில், ''பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை மதுரை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும். அவர் அந்த மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளரிடமும் ஒப்படைக்க வேண்டும். தங்க கவசத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்