விழுப்புரம்: தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று தென்பெண்ணை ஆறு. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பிறந்து, 430 கி.மீ. தூரம் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் இந்த ஆறு கலக்கிறது.
இந்த ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கி.மீ ஓடி, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கி.மீ, திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 கி.மீ, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கி. மீ பயணம் செய்து, இறுதியில் கடலூர் அருகே தாழங்குடா பகுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கி.மீ ஆகும். மார்கண்ட நதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.
விழுப்புரம் மாவட்டத் தில் செல்லும் தென்பெண்ணையாற் றின் குறுக்கே இருந்த பழமை வாய்ந்த எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு மற்றும் சொர்ணாவூர் அணைக்கட்டு ஆகிய இரண்டு அணைக்கட்டுகள் உள்ளன. கடந்த 2021-ம்ஆண்டில் ரூ.26 கோடி செலவில் கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை திறக்கப்பட்ட சில மாதங்களில் இடிந்து விழுந்தது. எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டும் பெரிய அளவில் சேதமடைந்தது.
இதில் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் மூலம் தேக்கி வைக்கப்படும் தண்ணீரால் விழுப்புரம் நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாய பாசனத்திற்கும் பயன்பட்டு வந்தது. இதேபோல் சொர்ணாவூர் அணைக்கட்டின் மூலம் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் விவசாய பாசனத்திற்கு பேருதவியாக அமைந்திருந்தது.
தடுப்பணைகளின் சேதத்தால் தென்பெண்ணையாற்றில் செல்லும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை நிலவி வருகிறது. தற்போது மழை காலத்தில், தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்துச் செல்லும் தண்ணீர், கடலூர் சென்று வங்கக் கடலுக்கு சென்று விடுகிறது.
முற்றிலும் இடிந்து விழுந்த எல்லீஸ் சத்திரம் மற்றும் தளவானூர் அணைக்கட்டுக்கள் மற்றும் பாதியளவு உடைந்து சேதமடைந்துள்ள சொர்ணாவூர் அணைக்கட்டை சீரமைத்து தென்பெண்ணையாற்றில் வீணாக செல்லும் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு விவசாய சங்கங்களும், விவசாயிகளும் பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு நிர்வாகம், எந்தப் பணியும் மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்குடன் இருந்து வருகிறது.
கடந்த ஓராண்டில் மட்டுமே தென்பெண்ணையாற்றில் 130 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலுக்குசென்று சேர்ந்துள்ளதாக தென்பெண்ணையாற்றை கண்காணித்து வரும் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் நாள் ஒன்றுக்கு 0.86 டி எம் சி தண்ணீர் கடலில் கலக்கிறது.வீடூர் அணையில் முழு கொள்ளளவை விட இது அதிகமாகும். மழையில்லா காலங்களில் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியும், தற்போது 1.51 லட்சம் கன அடி தண்ணீரும் கடலில் கலக்கிறது என்கின்றனர்.
விவசாயிகள் வேதனை: இது குறித்து விழுப்புரம் மாவட்ட விவசாயிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த மூன்று தடுப்பணைகள் உடைந்து சேதமடைந்து விட்டதன் காரணமாக சுமார் 5 ஆண்டுகளுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தேவையான தண்ணீரை நாம் இழந்திருக்கிறோம்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகர மக்களின் ஓராண்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு 12 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. அப்படியென்றால் சென்னை மாநகர மக்களுக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டிற்கும் மேலாக தேவைப்படும் தண்ணீர் ஒரே நேரத்தில் வீணடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் தென் பெண்ணையாற்றில் 130 டிஎம்சி தண்ணீர் சென்றிருந்தாலும், அந்தப் பகுதிக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான ஏரிகளுக்கு தண்ணீரே செல்லவில்லை என்பது தான் வேதனையின் உச்சம். மழை இல்லாத காலங்களில் தண்ணீரை எதிர்பார்த்து மற்ற மாநிலங்களிடம் கையேந்தி நிற்கும் தமிழக ஆட்சியாளர்கள், சொந்த மாநிலத்தில் வீணடிக்கப்படும் தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுப்பதில்லை.
இந்த விஷயத்தில் கடந்த கால ஆட்சியாளர்களை தற்போது உள்ளவர்கள் குறை சொல்லிவருகிறார்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் தற்போதுள்ளவர்களை குறை கூறி வருகிறார்கள் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 0.86 டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது.வீடூர் அணையில் முழு கொள்ளளவை விட இது அதிகமாகும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago