சென்னை மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பத்திரிகையாளர் உயிரிழப்பு: அமைச்சர் எ.வ.வேலு புதிய விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பத்திரிகையாளர் உயிரிழந்தது குறித்து பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

சென்னையில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், கடந்த சில தினங்களுக்கு முன் ஜாபர்கான்பேட்டை பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பத்திரிகையாளர் உயிரிழந்தது தொடர்பாகவும், பாதுகாப்பு தடுப்புகள், போக்குவரத்து மாற்றம் செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "புதிய தலைமுறையின் செய்தியாளர் முத்துகிருஷ்ணன் இறந்தது என்பது ஒரு வருத்தத்திற்குரிய விஷயம். மனதளவில் நானும் வருத்தப்படுகிறேன். ஊடகத்துறையில் பணியாற்றும் என் நண்பர்களை தொலைபேசியில் அழைத்து நான் என்னுடைய வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டேன்.

பொதுவாக, நான் ஏட்டிக்குப் போட்டியாக சொல்லவில்லை. மாநகராட்சி மூலமாகவும், நெடுஞ்சாலைத்துறை மூலமாகவும் இரண்டு பணிகள் நடைபெறுகின்றன. இப்போதுவரை அவர் எந்த இடத்தில் விழுந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் எங்கே விழுந்தார் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இறந்ததாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்திகள் வந்தன. அதை நானும் பார்த்தேன். அதில் எந்த இடத்தில் விழுந்தார் என்பது குறித்த விவரங்கள் எல்லாம் கிடையாது. அவர் விழுந்ததாக கூறப்பட்ட இடங்களில் அடுத்தநாள் நானும் ஆய்வு செய்தேன். அந்த இடங்களில் எல்லாம் ஸ்லாப்கள் கொண்டு மூடப்பட்டுவிட்டன.

நெடுஞ்சாலைத்துறை பணிகளைப் பொறுத்தவரை, உரிய தடுப்புகள் அமைத்து, பணிகள் நடைபெறுவதால் இந்தப் பகுதிகளில் யாரும் வரக்கூடாது என்ற வாசகத்துடன் எச்சரிக்கையை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்புடன் செய்து வருகிறோம். எனவே, தடுப்புகள் அமைக்கப்படவில்லை என கூறுவது தவறு. பகல் நேரங்களில் அவ்வாறு வைக்க வேண்டிய சூழ்நிலை எங்களுக்கே இருக்கிறது. அங்கு பணியாற்றும் பொறியாளரும் மனிதர்தான். பணி நடைபெறும் இடங்களில் அவர் சரிந்து விழுந்தால் அவருக்கும் அந்த ஆபத்து உண்டு. ஆய்வுக்கு செல்லும் நேரங்களில் எனக்கும் அந்த ஆபத்து உண்டு.

இதுபோன்ற பணிகளின்போது, பாதுகாப்பு குறித்து முதல்வர் ஆய்வுக் கூட்டங்களின்போது தொடர்ந்து அறிவுறுத்தியதன் அடிப்படையில், மாநகராட்சி பணிகள், நெடுஞ்சாலைத் துறை பணிகளின்போது தடுப்புகள் அமைக்காமல் நாங்கள் செய்வது கிடையாது. அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

இரவு நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதால், எங்கு நடந்தது, எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. காவல் துறையிடம் நாங்களும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய கூறியுள்ளோம். இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து காவல் துறையினரும் விசாரித்து வருகின்றனர். ஆனாலும், அதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. அவரது இறப்பு என்பது அனைவருக்கும் வருத்தத்திற்குரியது. இறப்பு என்பது தவிர்க்கப்பட வேண்டியது.

எனவேதான், கனிவோடுதான் முதல்வர் இதுகுறித்து கேள்விப்பட்டவுடனே அந்த குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி தரவேண்டும் என்று முதற்கட்டமாக கூறியிருக்கிறார். மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் மருத்துவமனைக்கே சென்று சிறந்த மருத்துவர்களின் உதவியோடு அவரை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என முயற்சித்தார். இருந்தாலும் அவரது இறப்பு வருத்தத்திற்குரியது.

விபத்து நடந்ததாக கூறப்படும் உதயம் தியேட்டர் பகுதியில் இரவு 2.30 மணி வரை பணிகள் நடைபெற்றுள்ளது. அதற்கான பணிக் குறிப்புகள் உள்ளன. பணிகள் நடைபெறுவதை பார்வையிடுவதற்காக மேற்பார்வையிடும் பொறியாளர் செந்தில் என்பவர் அந்தப் பகுதியில் இரவு 1 மணிக்கு ஆய்வு செய்துள்ளார். பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டுள்ளார். அங்கு பணிகள் 2.30 மணிக்குதான் முடிந்துள்ளது. எனவே, 2.30 மணிக்கு பணிகள் முடியும்போது ஸ்லாப்கள் போடப்பட்டிருந்ததால், அங்கு பள்ளம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. 5 தினங்களுக்கு முன் நானே அந்த பகுதிக்கு சென்றேன். 5 தினங்களுக்கு முன்னால் வெட்டப்பட்ட பள்ளத்தின் படத்தை விபத்து நடந்த இடம் என்று கூறி பலரும் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து வருகின்றனர். இந்த அரசின் மீது வீணாக பழி சுமத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்" என்று அவர் கூறினார்

முதல்வரின் இரங்கல் செய்தி: முன்னதாக, பத்திரிகையளார் முத்துகிருஷ்ணன் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், "புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக செய்திப் பிரிவில் செய்தியாளராக பணியாற்றிய முத்துகிருஷ்ணன் (வயது 24), அக்.22 இரவு சென்னை, ஜாபர்கான்பேட்டையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பலத்த காயமடைந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (அக்.23) பிற்பகல் முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். முத்துகிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டதின் கீழ் ரூ.3 லட்சமும், சேர்த்து உயிரிழந்த முத்துகிருஷ்ணனின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்