சட்டம் - ஒழுங்கு பிரச்சினை | நாட்டையும், மக்களையும் காக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கவும்: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி நாட்டையும், மக்களையும் வன்முறையாளர்களிடம் இருந்து காக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் தீவிரவாதம், பயங்கரவாதம், கொலை, கொள்ளை, வன்முறை ஆகியவை தலைவிரித்து ஆடுகிறது என்றும்; சட்டம் - ஒழுங்கு சீர்செய்யப்பட்டால்தான் தமிழகம் தொழில் வளத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேறும் என்றும் சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கை சீர் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனது அறிக்கைகள் வாயிலாக அவ்வப்போது வேண்டுகோள் விடுத்து வந்துள்ளேன்.

ஆனால், சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. உதாரணமாக, காவல் துறையினரால் தமிழகம் முழுவதும் 2,500 ரவுடிகள் பிடிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் சில மாதங்களுக்கு முன் செய்தி வந்தது. நான்கூட அரசு ஏதோ நடவடிக்கை எடுக்கிறது என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால், இதற்குப் பின் சட்டம் ஒழுங்கு இன்னும் மோசமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, தமிழகத்தில் அன்றாடம் ஒரிரண்டு கொலைகள் என்ற நிலை படிப்படியாக மாறி, தினமும் சராசரியாக எட்டு முதல் பத்து கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. அண்மைக் காலமாக பெட்ரோல் குண்டு கலாச்சாரம் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது. பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவங்கள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இதைத் தவிர ஏராளமான தற்கொலைகள் வேறு.

அண்மையில் கூட, ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' என்ற பெயரில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால், கள யதார்த்தம் என்பது வேறு மாதிரியாக இருக்கிறது. வன்முறைக் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டு தான் நேற்று முன் தினம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம்.

கோயம்புத்தூர் மாவட்டம், கோட்டைமேட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் நேற்று முன்தினம் பலத்த வெடி சத்தத்துடன் கார் ஒன்று வெடித்து சிதறியதாகவும்; இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்; இதற்குக் காரணம் எரிவாயு உருளை வெடிப்பு என்று கூறப்பட்டாலும், காருக்குள் இருந்தவர் காவல் துறையினரின் கண்காணிப்பில் இருந்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

வெடித்து சிதறுண்ட வாகனத்திற்குள்ளும், சம்பவம் நடந்த இடத்திலும் ஆணிகளும், கோலி குண்டுகளும் சிதறிக் கிடந்ததாகவும், மேற்படி விபத்தில் உயிரிழந்த நபர் இதற்கு முன்பு தேசிய உளவுத் துறை முகமையால் விசாரணை செய்யப்பட்டதாகவும், இறந்தவரின் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெடி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியத் துகள்கள், மரக்கரி போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

காவல் துறை தலைமை இயக்குநர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்கிறார் என்றால் இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்பது தெளிவாகிறது. மேலும், இது 1998ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை நினைவூட்டுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை. சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கிற திமுக அரசிற்கு அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீவிரவாதத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு காவல் துறைக்கு உள்ளது. முதல்வர் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, தமிழகத்தை, தமிழக மக்களை வன்முறையாளர்களிடமிருந்தும், தீவிரவாதிகளிடமிருந்தும், பயங்கரவாதிகளிடமிருந்தும் காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்." என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்