“கோவை சம்பவம்... பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னோட்டமா என விசாரிக்க வேண்டும்” - வானதி சீனிவாசன்

By க.சக்திவேல்

கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை விபத்தாக மட்டும் பார்க்காமல், அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, டவுன்ஹால் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் அருகே இன்று (அக்.23) அதிகாலை 4.10 மணி அளவில் வந்த கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி, தீப்பற்றி எரிந்துள்ளது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் வருகின்றன.

சமீபத்தில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பு கோவையில் வலுவாக இருந்து வந்துள்ளது. எனவே, காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அது ஏதாவது பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னோட்டமா என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதனை ஒரு விபத்து என்ற கோணத்தில் மட்டும் போலீசார் அணுகிவிடக் கூடாது. அது, பயங்கரவாத தாக்குதலாக இருந்தால் அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தேவைப்பட்டால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும். முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு விசாரணையை முடுக்கி விட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE