கோவை | காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம்: டிஜிபி நேரில் ஆய்வு; 6 தனிப்படைகள் அமைப்பு

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இது எதேச்சையாக நடந்ததா அல்லது சதிச்செயலா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆய்வு செய்தார்.

கோவை டவுன்ஹால் அருகேயுள்ள கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் அருகே இன்று (23-ம் தேதி) அதிகாலை 4.10 மணியளவில் ஒரு கார் வந்தது. திடீரென அந்த கார் வெடித்துச் சிதறியது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பார்த்த போது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உக்கடம் போலீஸாருக்கும், கோவை தெற்கு தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சிறிதுநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கார் இரண்டாக உடைந்து எரிந்து உருக்குலைந்தது. காரை ஓட்டி வந்த நபர் அருகே தீயில் கருகி உயிரிழந்து கிடந்தார். முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. விபத்து நடந்த பகுதியில் இருந்து பால்ரஸ் குண்டு, ஆணிகள், சிலிண்டர்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

காரின் பதிவு எண்ணை வைத்து போலீஸார் விசாரித்தனர். அதில் காரின் உரிமையாளர் பொள்ளாச்சி சேர்ந்தவர் எனத் தெரிந்தது. அவரிடம் விசாரித்த போது அவர் காரை விற்று சில வருடங்கள் ஆனதும், பெயர் மாற்றப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. அந்த காரை வாங்கிய நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

விபத்து சம்பவம் நடந்த பகுதியில் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், மாநகர காவல் ஆணையர் வெ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த நபர் யார், விபத்து ஏற்பட்டது எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்ட சதியா என விசாரித்து வருகின்றனர். இதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE